சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட காங்கிரஸின் அயலக அணித் தலைவர் பதவி விலகியுள்ளதாக தகவல்
இந்திய காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவரும் ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளருமான சாம் பித்ரோடா (Sam Pitroda) சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக தமது பதவியிலிருந்து விலகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பதவி விலகலானது நேற்று (08.05.2024) இடம்பெற்றுள்ளதுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் (Jairam Ramesh) தெரிவித்துள்ளார்.
நிறப் பாகுபாடு
சாம் பித்ரோடா இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், “இந்தியாவில் கிழக்கு பகுதியிலுள்ள மக்கள் சீனர்களைப் போலவும், மேற்கு பகுதியிலுள்ள மக்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கிலுள்ள மக்கள் கிட்டத்தட்ட வெள்ளையர்களைப் போலவும் தென்பகுதி மக்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் உள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.
நிறப் பாகுபாடு குறித்த அவரின் இந்த கருத்து இந்தியா முழுவதும் எதிர்ப்புக்குள்ளானதுடன் பித்ரோடாவின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இதனை முற்றிலும் எதிர்ப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
இது குறித்து பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், “தேர்தல் நேரத்திலோ அல்லது வேறு நேரங்களிலோ காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஊடகங்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசுவது அவர்களின் கடமையாகும்.
இந்திய மக்கள்
கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி உழைத்துக்கொண்டிருக்கும்போது, இதுபோன்ற சர்ச்சைகள் தேவையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ளத்தகாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) சாம் பித்ரோடாவின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இந்திய மக்களை இழிவுபடுத்திப் பேசுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நிறப் பாகுபாடு குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து இன உரிமை பேசும் அதன் கூட்டணி கட்சிகள் விலகுமா? எனவும் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பரம்பரை வரி
முன்னதாக அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள பரம்பரை வரி தொடர்பில் கருத்துரைத்திருந்த அவர், இறந்துப்போன ஒருவரின் சொத்துகளில் 55 வீதத்தை கோருவதற்கு அரசாங்கத்துக்கு உரிமை உள்ளது.
இதேநேரத்தில் மீதமுள்ள 45 வீதத்தை பங்கை மட்டுமே அவரது குழந்தைகள் அல்லது குடும்பத்திற்கு மாற்ற முடியும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், ஏற்கனவே இந்த வரி இந்தியாவில் நீக்கப்பட்டுள்ள நிலையில் பித்ரோடாவின் கருத்துக்கு கடும் விமர்சனம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.