சட்டசபைக்கு வெளியே முதல்-மந்திரி சித்தராமையா தர்ணா போராட்டம்; கர்நாடகாவில் பரபரப்பு
கர்நாடகாவில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்துபோனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் உள்ள 236 தாலுக்காக்களில் 223 தாலுக்காக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக கர்நாடக அரசு அறிவித்தது.
மேலும், வறட்சி, பயிர்கள் சேதமடைந்தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு 18 ஆயிரத்து 171 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது.
இதனிடையே, வறட்சி, நிவாரண பணிக்காக கர்நாடகாவுக்கு மத்திய அரசு 3 ஆயிரத்து 454 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது கர்நாடக அரசு விடுத்த கோரிக்கை தொகையை விட மிகக்குறைவாகும்.
இந்நிலையில், வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி இழைத்துள்ளதாக கூறி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டிகே சிவக்குமார், மந்திரிகள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக சட்டசபை வளாகத்திற்கு வெளியே திரண்ட அனைவரும் கையில் சொம்பு ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.