கடத்தப்பட்ட 95 குழந்தைகள் மீட்பு கொத்தடிமைகளாக ஒப்படைக்க திட்டமா ?
பீஹாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு சட்ட விரோதமாக, பஸ்சில் கடத்தி செல்லப்பட்ட 95 குழந்தைகளை குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் மீட்டனர். பெற்றோரின் ஒப்புதலின்றி 95 குழந்தைகள் எதற்காக பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர் என விசாரணை நடந்து வருகிறது. தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக ஒப்படைக்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
பீஹாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக, குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் கொண்டு செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர். குழந்தைகளை கடத்தி சென்று பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி நடந்ததாக, கூறப்படுகிறது.
இது குறித்து குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி கூறியதாவது: அயோத்தியில் நாங்கள் குழந்தைகளை மீட்டோம். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகள் 4-12 வயதுக்கு இடைப்பட்டவர்கள். குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் இல்லை.
பெற்றோரை தொடர்பு கொண்டு குழந்தைகள் ஒப்படைக்கப்படும். பெற்றோரின் ஒப்புதலின்றி 95 குழந்தைகள் எதற்காக பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.