இந்தியா

15 கேள்விகளுடன் அ.தி.மு.க.வினருக்கு கடிதம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சசிகலா புதிய வியூகம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா அதே வேகத்தில் முதலமைச்சர் நாற்காலியிலும் அமர நினைத்தார்.

ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பால் அவர் சிறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.

இதன் பின்னர் அ.தி. மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அவர் கட் சியை வழிநடத்தி வருகிறார்.

பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் சசிகலா விடுதலையாகி வெளியே வந்தார். பெங்களூரில் இருந்து சென்னை வரை சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்ததும் அரசியல் களத்தில் அவர் புலிப் பாய்ச்சல் பாய்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்ற வகையிலேயே சசிகலாவின் பேச்சுக்களும் அமைந்திருந்தன.

அ.தி.மு.க.வுக்கு நானே தலைமை தாங்குவேன். ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு செல்வேன் என்றெல்லாம் அவர் கூறியிருந்தார்.

ஆனால் இவையெல்லாம் வெறும் பேச்சுக்களாகி போனது. சிறையில் இருந்து வெளியில் வந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சசிகலா இன்னும் அதிரடி காட்டாமலேயே உள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தல், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தனது நிலைப்பாடு என்ன? என்பதைகூட வெளிப்படுத்தாமல் மவுனம் காத்துள்ள சசிகலா தற்போது புதிய வியூகத்துடன் களம் இறங்கி உள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 15 கேள்விகள் அடங்கிய படிவத்தை கடிதம் போல அனுப்பி உள்ள சசிகலா 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்.

பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துவிட்டு பேட்டி அளித்த சசிகலா சிலர் எடுத்துள்ள தவறான முடிவுகளுக்கு இந்த தேர்தல் முடிவு பாடமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டே சசிகலா இப்படி கூறியிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வினருக்கு சசிகலா படிவங்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் ஏற்கனவே கொடி பிடித்துள்ள நிலையில் சசிகலா அவர்களோடு சேர்ந்து செயல்படுவாரா? இல்லை தனி அணியை உருவாக்குவாரா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.

அதே நேரத்தில் அ.தி.மு.க.வை மீட்கவும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தவும் சசிகலா எடுக்கும் எந்த நடவடிக்கைகளும் அவருக்கு பலன் அளிக்கப்போவதில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.