இந்தியா

கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்: கண்ணீருடன் கை கூப்பி மன்னிப்பு கோரிய குற்றவாளியின் தந்தை

கர்நாடக பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நேஹா என்ற மாணவியை சக மாணவர் ஃபயாஸ் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கொலையாளி ஃபயஸின் தந்தை பாபா சாஹேப் சுபானி தனது மகனின் செயலுக்காக இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹுப்ளியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத், ஹுப்பள்ளியில் உள்ள கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அவருடன் படித்த ஃபயாஸ் (23) என்ற மாணவர் பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவத்துக்கு லவ் ஜிகாத் தான் காரணம் என மாணவியின் தந்தை குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த நிலையில் கொலை செய்த ஃபயாஸின் தந்தை இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்துள்ளதாக கூறியதுடன் இருகரம் கைகூப்பி மன்னிப்பும் கோரியுள்ளார்.

இதுகுறித்து பாபா சாஹேப் சுபானி கூறியதாவது: இந்த கொலை சம்பவம் குறித்து வியாழன் மாலை 6 மணிக்குத்தான் தகவல் தெரிந்தது. அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். எதிர்காலத்தில் இதுபோன்ற செயலை யாரும் செய்யத் துணியாத வகையில் அவன் (மகன் ஃபயாஸ்) தண்டிக்கப்பட வேண்டும்.

நேஹாவை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களிடமும், கர்நாடக மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவளும் என் மகள் போன்றவள்தான்.

நானும் எனது மனைவியும் 6 வருடங்களாக பிரிந்து வாழ்கிறோம். ஃபயாஸ் அவரது தாயாருடன்தான் தங்கியுள்ளான். ஃபயாஸும், நேஹாவும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறினான். ஆனால் அதற்குநான் மறுப்பு தெரிவித்தேன்.

என் மகனின் இந்த செயல் முனவல்லிக்கே (ஃபயாஸின் சொந்த ஊர்) கரும்புள்ளியை ஏற்படுத்தி விட்டது. இதற்காக என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு சுபானி கூறினார்.

நேஹாவை குத்தி கொலை செய்த ஃபயாஸை தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் தங்களது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என மாணவியின் குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.