தேர்தல் புறக்கணிப்பு கிராமத்தில் 50 பேர் மீது போலீஸ் வழக்கு
துாத்துக்குடி அருகே உள்ள பொட்டலுாரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை அகற்ற கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றாததால், ஏப்., 19ல் நடந்த லோக்சபா தேர்தலை மக்கள் புறக்கணித்தனர். இதனால், 931 ஓட்டுகள் கொண்ட கிராமத்தில் 9 ஓட்டுகள் மட்டும் பதிவானது.
தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்த முயன்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ, சண்முகையா ஆகியோருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிராமத்திற்குள் ‘ஸ்கார்பியோ’ காரில் ஆயுதங்களுடன் வந்த 8 பேரை போலீசார் பிடித்து வேனில் அழைத்துச் சென்றனர். அந்த வேனை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேன் கண்ணாடி உடைக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டதற்காக போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் உட்பட 50 பேர் மீது புதுக்கோட்டை போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். எல்லநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ., விஜயமூர்த்தி புகாரின்படி இந்த வழக்குகள் பதியப்பட்டது.
இதேபோல, அந்த கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள் புகாரின்படி, காரில் ஆயுதங்களுடன் வந்த மகாராஜன், 25, தங்கபாண்டி, 31, சித்திரைவேல், 26, ராமர், 24, உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
”தேர்தலில் ஓட்டுப்போடுவது என்பது மக்களின் ஜனநாயக கடமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம் தேர்தலில் ஓட்டுப்போடவே, புறக்கணிக்கவோ மக்களுக்கு உரிமை உண்டு. அதை எப்படி கேள்வி கேட்க முடியும்? அப்படியிருக்க, தேர்தலை புறக்கணித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.