இந்தியா

மணிப்பூர் கலவர ஆவணப்படம்: கேரள தேவாலயத்தில் திரையிடல்

கேரளாவில் தேவாலயம் ஒன்றில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில், அங்குள்ள தேவாலயத்தில் மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப் படம் காண்பிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி திரைப்படம், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. கேரளாவைச் சேர்ந்த ஹிந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவதாக சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தன.

சர்ச்சைக்குரிய இந்தப் படம் சமீபத்தில் கேரளா துார்தர்ஷன் டிவி சேனலில் ஒளிபரப்பப்பட்டதற்கு முதல்வர் பினராயி தலைமையிலான இடதுசாரி முன்னணி கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், இந்தப் படம் கடந்த 4ம் தேதி, இடுக்கி மறைமாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த கத்தோலிக்க திருச்சபையின் கீழ் வரும் சைரோ மலபார் தேவாலயத்தில், மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்டது. காதலால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தப் படம் காண்பிக்கப்பட்டதாக தேவாலயம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில், இடுக்கி சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் கீழ் வரும் சஞ்சோபுரம் செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் மணிப்பூர் கலவரங்களை விளக்கும் ‘ஒடுக்கப்பட்டவர்களின் அழுகை’ என்னும் ஆவணப் படம் மாணவர்களுக்கு திரையிடப்பட்டது.

இது குறித்து தேவாலயத்தின் பாதிரியார் ஜேம்ஸ் பனவேல் கூறியதாவது: மணிப்பூரில் நடந்தது பொய்யோ, மிகைப்படுத்தப்பட்டதோ இல்லை. அதை திரையிடுவதில் தவறு இல்லை. கற்பனையான தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடும் போது, உண்மை சம்பவங்களை கூறும் மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப் படத்தை ஏன் திரையிடக் கூடாது? இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில நாட்களாக கேரளாவில் உள்ள கிறிஸ்துவர்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதை சீர்குலைக்கும் வகையில், அங்குள்ள சில தேவாலயங்கள் மணிப்பூர் கலவரம் குறித்த ஆவணப் படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர். இது அங்கு பா.ஜ.,விற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.