இலங்கை தமிழர்களை இந்திய குடியுரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது: எஸ்.ஜெய்சங்கர்

இலங்கையில் உள்ள தமிழர்கள் இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று சொல்வது நியாயமான வாதம் அல்ல என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S.Jaishankar) தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச்சட்டம்
இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏன் இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பதற்கு நேரடியான பதிலை வழங்கிய ஜெய்சங்கர், அது முடியாத விடயம் என்று கூறினார்.இலங்கையில் தமிழர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுடன் ஒப்பிடமுடியாது.
இலங்கையில் உள்ள தமிழர்கள் விடயத்தை எடுத்துக்கொண்டால், இந்திய வம்சாவளித்தமிழர்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன. எனவே பாகிஸ்தானின் நிலைமையை இலங்கையின் நிலைமையுடன் ஒப்பிட முடியாது.
இவை முற்றிலும் வெவ்வேறு விடயங்களாகும். இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம் என்பது வரலாற்றின் தவறான பக்கத்தில் இருப்பவர்களுக்கு நீதி வழங்குவதாகும் என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
இதன்போது தமிழ் இந்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்களே என்று ஊடகவியலாளர் கேட்டபோது இலங்கை தமிழர்கள், இந்திய குடியுரிமை சட்டத்தின்கீழ் கொண்டு வரப்படவேண்டும் என்பது சரியான கூற்று அல்ல என்றும் அவர் பதிலளித்துள்ளார்.