உண்மையான பிரச்சினையைத் திசை திருப்ப முயலும் இந்திய அரசியல் : கச்சதீவு தொடர்பில் பழ.நெடுமாறன் காட்டம்
இந்திய தேர்தல் பிரச்சாரத்தில் கச்சதீவு (Kachchatheevu) பிரச்சினை குறித்து பாரதிய ஜனதா கட்சியும் (Bharatiya Janata Party) காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி குற்றம் சாட்டி உண்மையான பிரச்சினையைத் திசை திருப்ப முயலுகின்றன என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “கடந்த பல ஆண்டு காலமாக இந்தியப் பெருங்கடலில் செல்லும் பிற நாட்டுக் கப்பல்களை சோமாலியா கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கும் பணியில் இந்தியக் கடற்படைத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்க அரசு உள்ளிட்ட பல நாட்டு அரசுகள் பாராட்டுத் தெரிவித்துள்ளன.
இந்த அரிய சாதனைகளை புரிந்துவரும் இந்தியக் கடற்படை கரையோர கடற்படை என்ற நிலையிலிருந்து ஆழ்கடல் கடற்படை (Blue Water Navy) என்ற நிலைக்கு உயர்ந்து விட்டதாக இந்தியக் கடற்படைத் தளபதி பெருமை பாராட்டிக்கொண்டிருக்கிறார்.
ஆபிரிக்காக் கண்டத்தைச் சேர்ந்த சோமாலியா (Somalia) நாடு, இந்தியாவிலிருந்து 1600 கடல் மைல்களுக்கப்பால் உள்ளது. இந்தியாவின் கடற்படை அதுவரையிலும் சென்று உலக நாடுகளின் கப்பல்களைப் பாதுகாத்து வருகிறது.
ஆனால், மன்னார் வளைகுடா பகுதியில் கடற்றொழிலுக்குச் செல்லும் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களைச் சிங்களக் கடற்படை சுட்டுத் தள்ளுகிறது.
நமது கடற்றொழிலாளர்களுக்குச் சொந்தமான இயந்திரப் படகுகள், வலைகள் போன்றவை பறிமுதல் செய்யப்படுகின்றன அல்லது சேதப்படுத்தப்படுகின்றன.
நமது கடற்றொழிலாளர்கள் பிடித்த மீன்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. 1983ஆம் ஆண்டிலிருந்து கடந்த 40 ஆண்டு காலமாக எவ்வித அச்சமுமில்லாமல் சிங்கள கடற்படை தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை வேட்டையாடி வருகிறது. ஆனால், அவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தியக் கடற்படை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள மண்டபத்தில் இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. கடற்படையோ, கடலோரக் காவல்படையோ இதுவரை சிங்களக் கடற்படைக்கு எதிராக ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. தொலைவில் இருக்கின்ற சோமாலியா நாட்டுக் கடற்கொள்ளையர்களிடமிருந்து உலக நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்தியக் கடற்படை, சிங்களக் கொள்ளையர்களிடமிருந்து நமது கடற்றொழிலாளர்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யத் தயங்குவது ஏன்?
கச்சதீவு பிரச்சினையில் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மாறிமாறி குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றன.ஆனால், மன்னார் வளைகுடா பகுதியில் அத்துமீறி நமது கடற்றொழிலாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயற்பட்டுவரும் சிங்களக் கடற்படைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும் இதுவரை முன்வராதது ஏன்? அதற்கான காரணத்தை இந்த இரு கட்சிகளும் மக்களிடம் விளக்கியாக வேண்டும்” என்றும் பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கச்சத்தீவு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது, இந்தநிலையில் அப்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தை இந்திய அரசு புறக்கணிக்க முடியாது என்று ஓய்வுபெற்ற இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அரசாங்கம் என்ன செய்தது என்பதைப் பற்றி நாங்கள் பேசினாலும், தொடர்ந்து வரும் அரசாங்கம் அதை மீட்டெடுக்க வேண்டும் என்பது அர்த்தம் அல்ல. ஒப்பந்தம் என்பது ஒப்பந்தம்.
ஒப்பந்தங்களை நாம் மதிக்க வேண்டும். நீங்கள் அவர்களை புறக்கணிக்க முடியாது. நாடுகளை வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆளலாம்.
இதற்காக ஒரு அரசாங்கத்தால் செய்யப்பட்ட ஒப்பந்தங்களை மற்றும் ஒரு கட்சியின் அரசாங்கம் புறக்கணிக்லாம் என்று அர்த்தமல்ல என்று அவர் கூறினார்.
இலங்கை அரசு இந்திய கடற்றொழிலாளர்களை தங்கள் கடலில் கடற்றொழிலுக்கு அனுமதித்திருக்க வேண்டும்.
எனினும் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிமட்ட இழுவை படகுகளை பயன்படுத்துவதாக இலங்கை அரசும், வட இலங்கை கடற்றொழிலாளர்களும் கூறும் குற்றச்சாட்டே தற்போது பிரச்சினையாக உள்ளது என கூறியுள்ளார்.