கவிதைகள்முகிழ்த்தது முத்து
“சாட்சியங்களின்றி கொன்றுவிடவே அவன் திட்டமிட்டிருந்தான்” …. கவிதை …. முல்லைஅமுதன்.
சாட்சியங்களின்றி கொன்றுவிடவே
அவன் திட்டமிட்டிருந்தான்.
நேற்று-
குருதி சொட்ட வந்திருந்தபோது
‘நீ இன்னும் இறந்துவிடவில்லையா?’
என்பது போலவே பார்க்கமுடிந்தது.
இறந்திருக்கலாம்.
முப்பது நாளில்
யாரோ உயிர்ப்பித்திருக்கிறார்கள் என எண்ணத்தோன்றுகிறது.
முப்பது நாட்கள்
கழிந்தும் உயிர்ப்பித்துவிடாதபடி எப்படிக் கொல்வது?
எனி யூதாஸை அனுப்புதல் தகாது.
வேறொருவரைத் தேடிப்பிடித்து
முப்பது காசு மட்டுமல்ல..கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தாயிற்று.
கொன்றோம் என்றார்கள்.
முப்பது நாட்களின் பின்னர்
யாவரும் நம்பினார்கள் என்பதே உண்மையுமாயிற்று.
அதற்குப்பிறகு கல்வாரி வெறுமையாக இருந்தது..
குருதிகள் நிறைந்த மலைமேடு காத்திருந்தது.
வண்ணத்துப்பூச்சி ஒன்று தொடர்ச்சியாக சிறகசைத்து,
சிறகசைத்து காற்றை சுவாசித்தபடி
கல்வாரி மலைப்பிரசங்கத்திற்காக வாழ்ந்துகொண்டுதானிருகிறது.
முல்லைஅமுதன்.