இலக்கியச்சோலை
மேனாள் நேர்மையான அதிகாரி மீது எழுத்தாளர் காட்டிய அன்பு!
ஐந்து வருடங்களுக்கு முன்பு கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றியவர் திரு. குமரன் அவர்கள். தற்போது அவர் அன்னவாசல் ஒன்றியம் கீழப்பளுவஞ்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பள்ளி வயதுக் குழந்தைகளிடம் படைப்பாற்றல் திறனை வளர்க்கவும் மொழி மீதான ஆர்வத்தை பெருக்கவும் பள்ளிகள் தோறும் தமிழ்க்கூடல் நிகழ்வு நடத்தி உள்ளூர் எழுத்தாளரை அழைத்து மாணவர்களின் முன்பு பேச வைக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்பொருட்டு திரு. குமரன் அவர்கள் தன் பள்ளியின் தமிழ்க்கூடல் நிகழ்வுக்கு புதுக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அண்டனூர் சுரா, மகா.சுந்தர், நேசன்மகதி மற்றும் காசிநாதன் ஆகியோரைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.
திரு. குமரன் அவர்கள் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கல்வி அதிகாரி பணியாற்றும்பொழுது நேர்மையாகவும் மாணவர் மற்றும் ஆசிரியர் நலனில் பெரும் அக்கறை கொண்டு அவர்களின் தேவையை உடனுக்குடன் செய்து கொடுத்து முன்னுதாரணமான அதிகாரியாக திகழ்ந்தவர் என்பதால் அவரது பணிக் கலாச்சாரத்தை கவுரவிக்கும் பொருட்டு தான் எழுதி சமீபத்தில் நூலாக வெளிவந்த குரலி எனும் சிறுகதைத் தொகுப்பை மாணவர்களின் முன்பு வெளியிட எழுத்தாளர் அண்டனூர் சுரா கேட்டுக்கொண்டார். மேலும் மாணவர்களின் முன்பு பேசிய எழுத்தாளர், ” திரு. குமரன் அவர்கள் நேர்மையான அதிகாரிக்குரிய இலக்கணத்துடன் நேர மேலாண்மையைப் பெரிதும் கடைபிடித்து அவரது பணியைச் செம்மையுற செய்தவர். அவரைப் போல மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் உயர் அதிகாரியாக திகழ வேண்டும் ” என்று கேட்டுக்கொண்டார். எழுத்தாளரின் அன்பை ஏற்று பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. குமரன் அவர்கள் குரலி எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட விழாவுக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் நூலைப் பெற்றுக்கொண்டார்கள். மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு கதராடை, மரக்கன்று, குரலி சிறுகதைத் தொகுப்பு அடங்கிய பை பரிசாக வழங்கி கவுரவித்தார். அரசுப் பள்ளியில் நடந்த இந்த நூல் வெளியீடும் அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசாக நூல் வழங்கியதும் முன்னுதாரணமான நிகழ்வாக திகழ்ந்தது.