பாடகி பாலியல் குற்றச்சாட்டு: வைரமுத்துவிற்கு ஒரு நியாயம்? பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு ஒரு நியாமா? அண்ணாமலை கேள்வி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பிராண்ட் இந்தியாவாக இருக்க கூடிய பிரதமரை வைத்து முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். வெளிநாடுகளில் பிரதமர் நரேந்திரமோடிக்கு பிராண்ட் உள்ளது. முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலினுக்கு பிராண்ட் இல்லை.

உலகளவில் தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் நாடு இந்தியா தான், காரணம் பிரதமர் மோடி. முதல்வர் என்ன மாதிரியான தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறார் என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

ஜனவரி மாதம் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்த அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து சென்றனர். வைரமுத்து மீது பாடகி வெளியிட்ட பாலியல் குற்றச்சாட்டில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? வைரமுத்துவுக்கு ஒரு நியாயம்? பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு ஒரு நியாயமா? பிரிட்ஜ் பூஷன் பூஷன் சிங் மீது புகார் கூறிய மல்யுத்த வீரர்கள் தகுந்த ஆதாரங்களை வழங்க வேண்டும்.

டெல்லியில் போராடும் விளையாட்டு வீராங்கனைகள் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கும்போதே பிரிஜ் பூசன் சரண் சிங்-ஐ கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்துகின்றனர். விளையாட்டு வீராங்கனைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு மீதே நம்பிக்கை இல்லை என்றால் யாரை நம்புவார்கள் என தெரியவில்லை.

தவறு ஏதும் செய்யாமல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்பட்டுள்ளது. சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்குவது சரியா? மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் – மாநில அரசு விரைந்து குறைகளை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்…..

கவிஞர் வைரமுத்து மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு பிரபல பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார். தன்னிடம் அத்துமீறியதாக பாடகி சின்மயி உட்பட 17க்கும் மேற்பட்ட பெண்கள், கவிஞர் வைரமுத்து மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டை முன் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து குறித்து பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து சின்மயி இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ‘பாலியல் குற்றச்சாட்டுகள் எழும்போது ஒவ்வொரு முறையும் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள். இந்தியா முழுவதும் இதுபோல் பெண்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் பக்கம் நிற்கிறீர்கள். இதுபோல் அரசியல் கட்சித் தலைவர்கள் பேசும்போது மாற்றம் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ஆனாலும் பாலியல் சுரண்டல்கள், தொல்லைகள் குறைந்தபாடில்லை.

போக்ஸோ உள்ளிட்ட சட்டங்கள் இருந்தும் அனைத்து துறையிலும் பாலியல் குற்றச்சாட்டு எழத்தான் செய்கிறது. குறிப்பாக, திரைத்துறையில் இன்றும் பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. உங்கள் நண்பர் மற்றும் ஆதரவாளரான கவிஞர் வைரமுத்துவின் மீது 17க்கும் மேற்பட்ட பெண்கள் புகாரளித்தும், உங்கள் அருகாமையில் அவர் மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறார்.

இதனால் அவர் குறித்து மேலும் பெண்கள் பேச முடியாதவாறு செய்கிறார். பிரிஜ் பூஷணுக்கும், வைரமுத்துவுக்கு விதிகள் வேறு வேறு கிடையாது. நமது நாட்டின் சாம்பியன்கள், மல்யுத்த வீரர்கள், நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் பிரிஜ் பூஷணின் பெயரைக் கூறியுள்ளார்கள்.

அதேபோல் தான் 17க்கும் மேற்பட்ட பெண்கள் வைரமுத்துவின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையில் பெண்கள் மற்றும் ஆண்கள் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.

குழந்தைகள் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியபோது ரமேஷ் பிரபா குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது பெயரும் வெளியானது. எனவே அனைத்திற்கும் ஆவண செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button