கதைகள்

“அவளொரு பிஞ்சு”…. சிறுகதை…. 17 …. அண்டனூர் சுரா.

 

பலரின் கைகளில் மூன்றாவது உள்ளங்கையாக ஆண்ட்ராய்டு இருந்தது. அவர்கள் முகநூல், வாட்ச்அப் இரண்டில் ஒன்றில் மூழ்கி, தன்னை அதற்குள் மெல்ல கரைத்துக்கொள்வதாக இருந்தார்கள். பலரின் முகநூல், வாட்ச்அப் புரோபைல் படமாக ஆஷிபா இருந்தாள். அவர்களின் கட்டை விரல், ஆண்ட்ராய்டு திரையைக் கீழிருந்து மேல் நோக்கித் தள்ளுவதாக இருந்தது. கணவனின் கட்டளைக்குப் பயந்தோடும் மனைவியைப் போல திரை கீழிருந்து மேல் நோக்கி ஓடுவதாக இருந்தது. ஓடிய அத்தனை வேகத்திலும் ஆஷிபா முகம் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. கத்தரிப்பூ ஆடையில் ஆங்காங்கே மஞ்சள் நிறம் தெறிக்க, தரையில் குப்புறக் கிடந்தவளாக இருந்தாள்.

ஆஷிபா பால்வடியும் முகமாக இருந்தாள். கன்னங்கள் இரண்டும் தங்கக்கின்னங்களாக இருந்தன. உதடுகள் நிறையும் சிரிப்பு. ரோஜா இதழ் சருமம். ஒன்றிரண்டு பேர் அவளைத் திரையில் நிறுத்தி பார்க்க இருந்தார்கள். சிலர் “ இச்…” கொட்டிக்கொண்டார்கள்.

ஒருவர் கையில் தினத்தந்தி இருந்தது. அதை நீள்வாக்கில் மடித்து ஆஷிபா முகம் தெரியும்படியாக வைத்துக்கொண்டு, அவள் குறித்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு பெரியவர் தினசரியை எட்டிப்பார்த்துவிட்டு சொன்னார் “ ஏன்தா இவ குதிரைய தனியாளா மேய்க்கப் போனாளோ..?”. அவர் சொல்லி வாய்மூடவில்லை. அவருக்கான பதில் பின் இருக்கையிலிருந்து வந்தது. அப்பதிலைச் சொன்னவள் ஒரு மத்திய வயதுடைய பெண்ணாக இருந்தாள். “ ஏன் மேய்க்கப் போனாள், வயித்தக் கழுவதான்..”

முன் இருக்கைக்காரர், பின் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார். “அவ பெண் குழந்தெ. காலம் கெட்டுக்கிடக்க குதிரைய அவ தனியாதான் மேய்ச்சிருக்கணுமா?”

“அதுக்கு? போற இடமெல்லா பொம்பளைப்பிள்ள துணைக்கு யாரையும் கூட்டிக்கிட்டேவா போகமுடியும்…”

“பின்னே வேண்டாமா…?”

“செத்து குழிக்குள்ளே போயிருக்கா, இப்ப இவத் துணைக்கு யார அனுப்பி வைக்கிறதாம், ம்?” அவள் கேட்டக் கேள்விக்கு முன் இருக்கை பெரியவரிடம் பதில் இருந்திருக்கவில்லை. பேருந்திலிருந்த அத்தனை பேரும் அவரை ஒரு கணம் திரும்பிப் பார்த்தார்கள். ஒரு பதிலுமற்ற அவருக்குத் தலையைக் கீழே தொங்கவிட்டுக்கொள்வதைத் தவிர, அவருக்கு வேறொன்றும் தெரியவில்லை.

பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை. பயணிகள் சாவகாசமாக உட்கார்ந்துகொண்டு அடுத்தவர்களின் மேல் தூங்கிவிழுவதும் அலைபேசியில் மூழ்குவதுமாக இருந்தார்கள். பேருந்தில் ஒரு பழைய பாடல் ஓடிக்கொண்டிருந்தது. நடத்துநர் பின் படியில் நின்றுகொண்டு ஒரு காலை பேருந்திற்குள்ளும் மற்றொரு காலை படியிலும் வைத்துகொண்டு, பேருந்தில் பாடிக்கொண்டிருந்த பாடலுக்கேற்ற பின்னணி இசையைப் பேருந்தின் மேற்கூரையில் விரல்களால் கொடுத்துக்கொண்டிருந்தார்.

நடத்துநர் காக்கிச் சீருடையில் இருந்தார். காதில் சொருகியிருந்த ஒரு பேனா. தோளில் ஒரு சில்லறைப்பை தொங்கிக்கிடந்தது. பேருந்து ஒரு குலுங்குக் குலுங்கி, திசை கிழிய சென்றுகொண்டிருந்தது. தனியார் பேருந்து அது. பேருந்துக்குள் வெளிச்சம் பகல் போல பாய் விரித்திருந்தது.

சுப்ரியா ஒரே இடத்தில் நின்றபடி சில்வர் கம்பியை இறுகப் பிடித்தவளாய் சன்னல் வழியே பேருந்துக்கும் பின்னால் ஓடும் மரம்,செடி, கொடிகளைப் பார்த்தவளாக இருந்தாள். அடுத்த நிறுத்தத்தில் அவள் உட்காருவதற்கு ஓர் இடம் கிடைத்திருந்தது. பின் இருக்கையிலிருந்து நான்காவது இருக்கை அது. அவள் தன் மடியில் பையை வைத்துக்கொண்டு இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள். பை நெஞ்சோடு அணைந்திருந்தது. அவள் ஜன்னல் வழியே, தான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிட்டதா, நடத்துநர் விசில் கொடுப்பாரா, என்று பார்க்கிறவளாக இருந்தாள்.

அவளுக்கும் அருகில் ஒரு தாய், மடிக்குழந்தையுடன் உட்கார்ந்திருந்தாள். அவள் குழந்தையுடன் பாதித்தூக்கத்தில் இருந்தாள். சுப்ரியா மெல்ல எழுந்து முன்னும் பின்னும் பார்த்தாள். அவளுக்குத் தெரிந்த உறவினர் யாரேனும் பேருந்தில் இருக்கிறார்களா, எனத் தேடினாள். யாரும் இருந்திருக்கவில்லை.

நடத்துநர் சத்தமிட்டார் “ பாப்பா, உட்காரு. இன்னும் ரெண்டு ஸ்டாப் இருக்கு…”

எழுந்து நின்றவள் முகவாட்டத்துடன் உட்கார்ந்து கொண்டாள். நடத்துநருக்கு அவளது மாமா வயதிருக்கும். அவர் வாய் விசிலோடு அவளை ஒரு பார்வைப் பார்த்து சிரித்துவிட்டு, மாட்டு வண்டிக்கு விசில் கொடுத்துப் பேருந்தை வழி நடத்தினார். பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. இரண்டு பேர் இறங்க, ஒருவர் ஏறியிருந்தார். நடத்துநர் விசில் கொடுத்ததும், பேருந்து ஒரு குலுங்கிக் குலுங்கி கிளம்பியது.

நடத்துநர் பின் படியிலிருந்து முன் படிக்கு வந்தார். ஒரு பாடல் முடிந்து மறுபாடல் தொடங்கியது. அவளுக்குப் பிடித்தப் பாடல் அது. தொலைக்காட்சியில் அப்பாடல் ஒளிபரப்பாகையில் கண் கொத்திப் பாம்பாகப் பார்க்கிறவள். அவளையும் அறியாமல் அவளது தலை ஆடச் செய்யும். கால்கள் தாளமிடும். அப்பாடலை ரசிக்கும் மனநிலை அப்போதைக்கு இல்லை. அவள் நினைவெல்லாம், பேருந்து நிறுத்தத்திற்கு வருவதாகச் சொல்லியிருந்த அப்பா, இந்நேரத்திற்கு வந்திருப்பாரா, என்பதன் மீதே இருந்தது.

அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்திருந்தது. நடத்துநர் “ஓல்டேன், ஓல்டேன்…” என்றார். பேருந்து சக்கரங்களைத் தேய்த்துகொண்டு நின்றது. நடத்துநர், அவள் பக்கமாகத் திரும்பி, “பாப்பா, நீ இறங்க வேண்டிய எடம்….” என்றார். அவள் புத்தகப்பையை முதுகுப் பக்கமாகக் கிடத்திக்கொண்டு பின் படிக்கு ஓடி, தாவிக்குதித்து இறங்குவதற்கு முன்பாக, வெளியைப் பார்த்தாள். வெளி இருண்டும் பேருந்து நிழற்குடையையொட்டி, ஒருவர் நிற்பதும் தெரிந்தது. தன் அப்பாவாகத்தான் இருக்க வேணும், என நினைத்தவள் படியிலிருந்து குதித்தாள். ஏமாற்றம் அவளது முகத்தில் அறைந்தது. ‘அ…ப்…’ என அழைத்து பிற்பகுதியைத் தொண்டைக்குள் விழுங்கி கொண்டாள்.

அப்பா எப்பொழுது அவளை அழைக்க வந்தாலும், அவர் பேருந்தின் படி வரைக்கும் வரச் செய்வார். கீழே நின்றபடி, ஒரு கை அவளைத் தாங்கவும் மற்றொரு கை அவளது பையையும் தாங்கும். ஆனால் இன்று…?

பேருந்து சற்று நேரம் அதே இடத்தில் இளைப்பாறியது. ஜன்னல்வெளி வெளிச்சம் கட்டம் கட்டங்களாகத் தெரிந்தன. அவ்வெளிச்சத்தில் நின்றபடி அப்பாவைத் தேடினாள். அப்பா இல்லாத பேருந்து

நிறுத்தத்தை நினைக்கையில் அவளது கண்கள் இருண்டு வந்தன. கண்களைத் தேய்த்துக்கொண்டு விழித்துப் பார்க்கையில் அவளை ஏற்றி வந்திருந்த பேருந்து அவளைச் சுற்றியிருந்த வெளிச்சத்தைத் துடைத்து அள்ளிச் சுருட்டிக்கொண்டு அவ்விடத்தைவிட்டுக் கிளம்பியிருந்தது.

தூரத்தில் ஒரு புள்ளியாகத் தெரிந்து மறைந்த பேருந்தையும் அப்பா வந்திருக்க வேண்டிய திசையையும் பார்த்தவளாக நின்றாள். ஏமாற்றத்தின் வெறுமை அவளது முகத்தில் சாயம் போலப் பூசியது. அவள் புத்தகப் பையை மார்போடு அணைத்துக்கொண்டு, பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் ஒடுங்கினாள்.

அப்பா, ஏன் இன்றைக்கு வரவில்லை, ஏழரை மணி பேருந்துக்கு வந்துவிடுவதாகச் சொன்னாரே. எப்பொழுதும் பேருந்து வருவதற்கு முன்பே, சைக்கிளில் வந்து நிற்கும் அப்பா, இன்றைக்கு ஏன் வரவில்லை..? அவளது கண்களைக் கண்ணீர் முட்களாகக் குத்தச் செய்தன.

இதுநாள் வரைக்கும் அப்பா அவளை அழைக்க வராமல் இருந்ததில்லை. இன்னும் சற்று நேரத்தில் அவர் வரவே செய்வார். அப்பா வர வேண்டிய திசையை எட்டிப் பார்த்தாள். அவளைச் சுற்றிய வெறுமையும், இருண்மையும் அவளது கால்களைத் தடதடக்கச் செய்தன.

தூரத்தில் ஒரு சைக்கிள் வருவது தெரிந்தது. சைக்கிள் செயின் அரைபடும் அரவமும், மணியின் கிண்கிணிப்பும் கேட்டது. சைக்கிள் தார்ச்சாலையில் ஏறி, பேருந்து சென்ற திசையில் திரும்பியது. அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

அப்பாவுக்குப் பதில் அம்மா வேணும் வருவாளா? நான் இன்றைக்கு வருவதாக சொன்னச் செய்தியை, அப்பா அம்மாவிடம் தெரிவித்திருப்பாரா? அப்படியாக அவள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் அவளை நோக்கி வந்து, வந்த வேகத்தை விடவும் வேகமாக அவளைக் கடந்து சென்றது. அவ்வெளிச்சத்தில், எதிர்புறம் நின்றுகொண்டிருந்த நபரைப் பார்த்தாள். அவர் நீண்ட தாடியுடன், வாயில் நெருப்பில்லாத சுருட்டை உதடுகளால் பற்றியிருந்தது தெரிந்தது. தாடியும் கலைந்த தலைமுடிக் கோலமும் பார்க்க பராரியாகத் தெரிந்தார். இருட்டில் அப்படியாகத் தெரிந்த அவ்வுருவம் அவளைப் பயமூட்டச் செய்தது.

“ அப்பா, சுப்ரியா பேசுறேன்கப்பா…”

“ சொல்லடி கண்ணு…”

“ வீட்டுக்கு வாறேன்ப்பா…”

“ எப்படிடி வருவே? சித்தி வீட்டிலேயே ரெண்டு நாளைக்கு இரு. நானே வந்து உன்ன அழைச்சிக்கிட்டு வாறேன்…”

“ இல்லேங்கப்பா, நான் வரணும். ஏழரை மணி பஸ்ல சித்தி என்னை ஏத்தி விடுறாங்களாம். நீங்க ஏழு மணிக்கே பஸ் ஸ்டாப்புல வந்து நில்லுங்கப்பா…”

“ தனியேவா வர்றேங்கிறே?”

“ அப்பா, நான் என்ன சின்னப் பிள்ளையா. சிக்ஸ்த் முடிச்சி செவன்த் போகப்போறேன்ப்பா. ஸ்கூலுக்கு நான் தனியாத்தானே போய்ட்டு வாறேன்….”

“ அதுக்காக…”

“ பஸ்லதானேங்கப்பா, வர்றேன்….”

“ சரி, பத்திரமா வா. நான் ஸ்டாப்ல நிற்கேன்…”

நடந்த உரையாடல் அப்பா மீது கோபத்தையும் விரக்தியையும் கூட்டியது.

எவ்வளவு நேரம்தான் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பதாம்…? நடந்தே வீட்டுக்குச் சென்றுவிடலாமா என யோசித்தாள். அவளது கால்கள் முன்னே இழுக்க, அவளது உடல் பின்னே இழுத்தது. மெல்லத் திரும்பி எதிரில் நின்றுகொண்டிருந்த உருவத்தைப் பார்த்தாள். அவ்வுருவம் அவளையே பார்ப்பதைப் போலிருந்தது.

அவர் என்னை நோக்கி வந்துவிடுவாரோ? வந்தால், நான் ஓடுவதா, அழுவதா…? மனதிற்குள் கேள்விகள் பிசைந்தன.

அவள் நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கி ஒரு நாய்க்குட்டி வந்தது. அவளைக் குரைத்த அந்நாய்க்குட்டி அவளை உரசி, அவளது காலை ஒரு முறை நுகர்ந்து பார்த்துவிட்டு சாலையில் தனியே ஓடத் தொடங்கியது. அந்நாய்க்குட்டியைப் பார்க்க அவளுக்குப் பொறாமையாக இருந்தது. இந்தக் குட்டிக்குத்தான் என்னவொரு தைரியம்? இரவில், பயமில்லாமல், தனியாக….!

அக்குட்டி ஓடி மறைந்த சற்று நேரத்தில், ஒரு சிறுவன் சாலையைக் குறுக்கிட்டான். அவன் மேற்சட்டை அணியாமல், வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு பேருந்து வந்த திசையில் நடையும் ஓட்டமுமாக ஓடிக்கொண்டிருந்தான்.

அச்சிறுவனைப் பார்க்க, அவளுக்கு வியப்பாக இருந்தது. என்னை விடவும் இளையவன். சிறுவன். அவன் தனியாக, இரவு என்றுகூட பாராமல் அவனால் நடக்க முடிகிறதே. அவனை நினைக்க அவளுக்குள் உத்வேகம் வந்தது. புத்தகப் பையை நெஞ்சோடு அணைத்துகொண்டு கால்களை இரண்டடி நீட்டி எடுத்து வைத்தாள். அவள் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவளுக்குள் யாரோ நடப்பதைப்போலிருந்தது. அவளுக்குள் துடித்த இதயத் துடிப்புதான் அப்படியாக எதிரொலித்தது.

பேருந்து நிறுத்தத்திலிருந்து அரை மைல் தூரம் நடந்திருந்தாள். இன்னும் அவள் ஒரு மைல் தூரம் நடந்தாக வேண்டும். அவள் நடப்பது தார்ச்சாலைதான் என்றாலும் சாலை கொப்புளமும், புண்ணுமாக இருந்தன. சாலையின் இரு புறமும் முந்திரிக்காடு. அதைத்தாண்டினால் தைல மரக்காடு. அதைக் கடந்தால் மானாவாரியான வேளாண் பூமி. அதிலிருந்து ஒத்தையடி பாதை வழியே மேலத்தெரு சென்று, வடக்குப் பக்கமாகத் திரும்பி, வாரிக்குள் இறங்கி ஏறினால் வீடு. மனதிற்குள் வரைபடத்தைத் தீட்டிக்கொண்டாள்.

அவள் போகவேண்டிய தூரமும், திருப்பங்களும் கண்முன்னே வந்து நின்றன. மரங்களின் அசைவுகளும், சருகுகளின் சலசலப்பும் கேட்டபடி இருந்தன. அவள் எதையும் காதினில் வாங்கிக்கொள்ளவில்லை. எந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்கவில்லை. குனிந்தத் தலை நிமிராது நடந்தபடி இருந்தாள். அவள் நடக்கவா செய்தாள்? நடையும் ஓட்டமாக விரைந்தாள். அவள் முந்திரிக் காட்டைக் கடந்து, தைல மரக்காட்டிற்குள் நுழைகையில், பேருந்துக்குள் அவள் கண்ட காட்சிகள் நினைவுக்கு வந்தன.

தினசரியில், வாட்ச்அப்பில், முகநூலில் சிரித்த முகமாகவும், கனிந்த கண்களுமாக இருந்த ஆஷிபா கண்களுக்குள் விரிவதாக இருந்தாள். அவளது சிரித்த முகம், ரோஜா இதழ்களை ஒத்த கன்னம், உருண்டு , திரண்ட கருவிழிகள்… ஆஷிபாவின் மரணக் கோலம், அவளுக்குள் கலவரம் மூட்டுவதாக இருந்தது.

‘என்ன இருந்தாலும் அவள் பெண் குழந்தைதானே. தனி ஆளாக குதிரை மேய்க்கப் போயிருக்கக் கூடாதுதான்…’ பேருந்தில் பயணிகள் பேசிக்கொண்டது, அவளது நினைவுக்கு வர, ஆஷிபாவின் கதறலொலி அவளுக்குள் எதிரொலிக்கச் செய்தது.

பேருந்து உரையாடல்கள் செவி வழியே நெஞ்சுக்குள் இறங்க, அவளது உடம்பு அவளுக்கு கனக்கச் செய்தது. அந்நேரம் வரைக்கும் விரைந்து எடுத்து வைக்க முடிந்த கால்களை அவளால் அதற்கும் மேல் எடுத்துவைக்க முடியவில்லை. முன் வைத்தக் கால்கள் அவளைப் பின்னே இழுத்தன.

நான் தனியாக வீட்டிற்குப் பயணம் செய்யக்கூடாது தானோ? அப்பாவிற்காக எந்நேரமானாலும் பேருந்து நிறுத்தத்திலேயே காத்திருந்திருக்கத்தான் வேண்டுமோ? நடையினூடே அவளுக்குள் கேள்வி எழுந்தது.

ஒரு வேளை தனியாக நின்றிருந்தால் யாரேனும் பேச்சு கொடுக்க முன் வந்திருக்கவே செய்வார்கள். அப்படியாகப் பேச்சுக்கொடுத்தால் அவர்களுடன் பேசலாமா? நான் கொண்டு போய் உன் வீட்டில் விடுகிறேன், என யாரேனும் அழைத்தால் நம்பி அவர்களின் பின்னே போகலாமா? அவர்கள் வாகனத்தில் ஏறலாமா? கேள்விக்குள்ளாக கேள்விகள். அவளுக்கு மயக்கம் வருவதைப் போலிருந்தது. மரங்களின் சலசலப்பு, அவள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியின் பின்னே ஒலித்த அரவம், அவளுக்குள் துடித்த இதயத் துடிப்புகள்,..

நடையின் வேகத்தைச் சற்றே குறைத்து, காதினை மெல்ல பின்பக்கமாகத் திருப்பி, அரவத்தைக் கவனித்தாள். அவள் பின்னே ஓர் ஆணின் ஆளரவம் வருவது தெரிந்தது.

அவளுக்கு ‘ திக், திக்’ என இருந்தது.

பேருந்து நிழற்குடையில், என்னை துறுதுறுவெனப் பார்த்த, தாடி வைத்த, பீடி குடித்த அந்த உருவமாகத்தான் இருக்குமோ? அவர்தான், அவனேதான்!. நடந்தவள் மேலும் வேகமாக நடந்தாள். அவளது வேகத்தையொட்டியே பின்தொடர்ந்த நடையின் வேகம் இருந்தது.

அவளுக்கு ‘கீச், மூச்’ வாங்கியது. தொண்டைக்குள் என்னவோவொன்று விக்கியது. கணுக்காலுக்கும், கெண்டைக்காலுக்கும் இடையில் ‘விண்ண் விண்ண்’ எனத் தெறித்தது. உடம்பு வியர்த்துக் கொட்டியது.

இந்த இருட்டிற்குள் கண்ணைத் திறந்துகொண்டு நடப்பதும், மூடிக்கொண்டு நடப்பதும் ஒன்றுதான். கண்களை இறுக மூடிக்கொண்டு நடந்தால் பயம் சற்று தணிவதைப் போலிருந்தது. கண்களை இறுக மூடி பாதையின் போக்கை மனதிற்குள் உள்வாங்கி நடக்கத் தொடங்கினாள். அவளைப் பின்னால் துரத்தி வந்திருந்த நடை, அவளை மேலும் நெருங்கியிருந்தது. இதற்கு மேலும் என்னால் ஓட முடியுமா, ஓட கால்களில் பலம் இருந்தாலும் நெஞ்சில் இல்லாது இருந்தது.

என்ன செய்வதாம், இரு காதுகளையும் இறுகப் பொத்திக்கொண்டு உரக்கக் கத்தவேண்டும் போலிருந்தது. கத்துவதால் என்ன வந்துவிடப்போகிறது…? யார் ஓடி வந்து உதவப் போகிறார்கள், என நினைத்தவள், அவளது பைக்குள் ஜியோமண்ட்ரி பாக்ஸ் இருப்பதும், அதற்குள் கவராயம் இருப்பதும்

நினைவுக்கு வந்தது. பைக்குள் வேகமாக கையை நுழைத்து, பாக்ஸை வேகமாக எடுத்து, திறந்து அதிலிருந்த கவராயத்தால் குத்திக் கிழிப்பதற்கு ஏதுவாக கைகளை வைத்துகொண்டு நடையின் வேகத்தை மேலும் முடுக்கினாள். நடையை இதற்கு மேல் கூட்ட அவளிடம் பலமிருந்தாலும் வலு இருந்திருக்கவில்லை. உந்தி எடுக்கும் காலை தரையில் வைக்கமுடியவில்லை. வைத்தக் காலை எடுக்க முடியவில்லை. வலியால் கெண்டைக்கால்கள் கடுகடுக்கச் செய்தன. இன்னும் கொஞ்சத் தூரம்தான். இந்தக் காட்டைக் கடந்துவிட்டால், வெட்டவெளிதான்.

அவளைப் பின் தொடர்ந்த ஆளரவம் கைநீட்டி அவளைப் பிடிக்குமளவிற்கு நெருங்கியிருந்தது. அவள், தன் தோளில் கிடந்த பையை, ஆடையை உரிப்பதைப்போல கழட்டி புதருக்குள் எறிந்தாள். இரு கைகளிலும் கவராயங்களை வைத்துக்கொண்டு மூர்க்கத்தை நாசிக்குள் இறக்கி, விடைத்து, நிமிர்ந்து திரும்பி நின்றாள். அவளது பாதங்களிலிருந்து வெஞ்சூட்டு இரத்தம் தலையை நோக்கிப் பாய்ந்தது. சிறைப்பட்ட ஒரு காட்டுப்பூனையின் பலம் அவளது கைக்கு வந்திருந்தது.

அவளைப் பின்தொடர்ந்து வந்திருந்த ஆணரவம் சற்றும் நிற்கவில்லை. நின்று என்ன, ஏது, யாரெனப் பார்க்கவில்லை. முன்னே விடவும், படுவேகத்தில் அவளிடமிருந்து விலகி, முன்னே சென்று, ஒரு புள்ளியாக மறைந்தது. விடைத்து நின்றிருந்த சுப்ரியாவின் உடம்பு மெல்ல தளர்ந்து வந்தது. சுற்றும்முற்றும் நாலாபுறமும் திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு அழுகை நெஞ்சுடைத்து வந்தது.

Loading

3 Comments

  1. Nilaa Bharathi
    ·
    உண்மையில் ஒரு குறும்படத்தை மனதிற்குள் கடத்தியுள்ளீர்கள்.
    பெண்கள் எவ்வித அச்சமும் பயமுமின்றி எவ்வித பயணத்தையோ கடந்து விடமுடிகிறதா ? என்ற கேள்விகள் முளைத்த வண்ணம் இருக்கிறது கதை முடிவு வரை

  2. Annathurai Kasinathan
    கொஞ்சம் கொஞ்சமா மனசுக்குள்ள சுப்ரியாவை விட அதிக பயத்தையும் பதட்டத்தையும் கொடுக்கிறது… எழுத்து.!
    அந்த காட்சிகளை கண் முன் கொண்டு வந்துவிடுகிறது ஓவியங்கள்.!
    ஆஷிபா கொல்லபட்ட இத்தனை வருடங்கள் கழித்தும் அதே சம்பவங்கள் தொடர்வதை தோல் உரிக்கிறது உரையாடல்கள்!
    இறுதியில் அவரவரின் பாதுகாப்பை அவர்களின் கையிலேயே ஒப்படைக்கிறது முடிவு!
    அருமையான சிறுகதை

  3. அருமையான சிறுகதை என்பதைவிட குறும்படம் எனலாம்… கதையின் நிகழ்வுகளுக்குள் வாசகன் தானாக அதன் சட்டகத்துக்குள் (Frame) அவனையுமறியாமல் நுழைந்துக்கொள்கிறான்… எழுத்துக்கு எழுத்து திகில் சூழ்கிறது… அந்த அடர்ந்த முந்திரி காட்டிற்குள் படபடப்போடு புத்தகங்களையும், பயத்தையும் மார்போடு அனைத்துக்கொண்டு கும்மிருட்டுக்குள் ஓட்டமும் நடையுமாய் விரைந்து செல்லும் சுப்ரியாவோடு அதே பயத்தோடு அவளுக்கு அருகாமையில் செல்வதைப்போன்ற பிரம்மை வாசகனை தொற்றிக்கொள்கிறது… சுப்ரியா எதிர்பார்ப்பதை போலவே அவளது அப்பா வந்துவிட வேண்டுமெனும் பரிதவிப்பு நம் மனசெங்கும் அப்பிக்கொள்கிறது… ஆஷிபாவுக்கு நடந்ததைப்போன்று சுப்ரியாவுக்கும் நேர்ந்திடக்கூடாதென மனசு அடித்துக்கொள்கிறது…

    அண்டனூர் சுராவும் அவளொரு பிஞ்சு சிறுகதையும் ஆழ் மனசில் நங்கூரம் பாய்ச்சி நின்றுவிடுகிறார்கள்…
    தொடர்ந்து வரட்டும் மனசை அள்ளும் படைப்புகள்… நண்பர் அண்டனூர் சுரா அவர்களுக்கு
    வாழ்த்துக்கள்…

    மன்னை அற்புதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *