உண்மையை உணர்ந்தேன்!… ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

![]()
பற்றற்றவன்தான் துறவி. பற்றை விடமுடியாத ஒருவரால் துறவியாக இருக்க முடியாது. துறவியாக இருப்பவர்கள் கையில் கோலொன்றை வைத்திருப்பார்கள். அந்த கோலின் உச்சியில் ஒரு துணி ஒன்று கட்டி இருக்கும். நான் வெகுநாட்களாக அதை ஏதோ இதுவும் ஒரு வகை துறவிகளுக்கானகொடி என்றே நினத்து வந்தேன்.
அப்புறம் நண்பன் சிதம்பரநாதன் மூலம் அது கொடியல்ல என்பதை உணர்ந்தேன். ஆனால் அது கொடியல்ல என்று அவன் சொன்னது எனக்கு வியப்பளித்தது. அவன்சொன்னதை இன்றுவரை என்னால் நம்பமுடியவில்லை. காரணம் அவன் சொன்ன விளக்கம் அப்படி. என்ன காரணம் தெரியுமா? அதுதான் அவரின் மாற்றுடை என்றான்.“என்னடா சொல்ற அது மாற்றுடையா? அப்படியானால் அதை ஏன் கோலில் கட்டி வைத்திருக்கிறார்?” என்று கேட்டேன்.“மணி, அவருக்கு அது ஒன்றுதான் மாற்றுடை. தான் உடுத்தியிருக்கும் உடையை துவைத்து சுத்தம் செய்தபின் அந்தகோலில் கட்டி உலர வைப்பார். கோலில் இருக்கும் உலர்ந்த உடையை உடுத்திக் கொள்வார்.” என்றான்.அவன் சொன்னதை எண்ணி மாற்றுடை கூட ஒன்றுக்கு மேலாக வைத்துக் கொள்ளாத துறவியை எண்ணி வியந்தேன். எந்த அளவுக்கு இவ்வுலக வாழ்வில் பற்றற்று இருந்தால் மாற்றுடைகூட ஒன்றுக்குமேல் வைத்துக்கொள்ளாமல் துறவிகள் வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ணி எண்ணி வியந்தேன்.“டேய், இதற்கே இப்படி அசந்து போனா எப்படி? துறவிகளாவது மாற்றுடை ஒன்று மட்டும் வைத்திருந்ததை நம்பலாம். ஏனென்றால் அவர்கள் துறவிகள்” என்றான் சிதம்பரநாதன்.“அப்படியென்றால் வேறு யாராவது இதுபோன்று இருந்திருக்கிறார்களா?”“ஏனில்லை?” சொல்கிறேன் கேள் என்ற சொல்ல ஆரம்பித்தான்.ஒருமுறை காமராஜர் ஒரு பள்ளி திறப்பு
விழாவுக்கு சென்றார். போகிற வழியில் ஜீவா வீடு இருந்ததால் அவரையும் அழைத்தாராம். அதற்கு நீ முதலமைச்சர் திறந்தா போதாதா நான் எதற்கு என்றிருக்கிறார் ஜீவா.அட, அடிக்கல் நட்டு நீ ஆரம்பிச்ச பள்ளியை நீ இல்லாமல் திறப்பதா? என்று காமராஜர் கேட்க, அப்படியானால் நீ முதலில் போ, நான் அரை மணி நேரத்தில் வருகிறேன் என்று அனுப்பி வைத்தாராம்.ஆனால் ஜீவா அரைமணி நேரத்துக்கும் மேல் தாமதமாகச் சென்றிருக்கிறார். அதற்கு, என்ன ஜீவா இப்படிப் பண்ணிட்டியே என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.உடனே ஜீவா நல்ல வேட்டி ஒன்றுதாம்பா இருக்கு. அதை துவைச்சு காய வச்சு கட்டிட்டு வரேன். அதுதான் தாமதம் தப்பாக நினைக்காதே என்றாராம். உடனே காமராஜர் கண்கலங்கிவிட்டார். இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லி முடித்தான்.ஆனால் இன்றுள்ள துறவிகளும் அரசியல் வாதிகளும் அப்படியா? அவர்களின் தோரணை என்ன? ஆடை அலங்காரங்கள் என்ன? ஆட்ட பாட்டமென்ன?துறவிகளுக்கு பல்லக்கு வேண்டும். அரசியல்வாதிகளுக்கு சைரன் வைத்த வாகனம் வேண்டும். என்று பலவாறு எண்ணிக் கொண்டிருந்த போது கைபேசி அழைத்தது.கைபேசியை எடுத்தபோது என் நலனில் அக்கறை கொண்ட நண்பர்தான் அழைத்தார். வழக்கம்போல் நலன் விசாரிப்பைத் தொடர்ந்து எனது நண்பன் கபிலனின் படைப்பொன்றை வாசித்தாராம் பாராட்டினார். நண்பனின் சார்பில் நன்றி சொன்னேன். பேசிக்கொண்டிருந்த பொழுது,“சங்கர், உங்கள் நண்பர் எழுதுவதை தொகுத்து ஏன் நூலாக வெளியிடக் கூடாது” என்றார்.“அவர் பல ஆண்டுகளாக எழுதிவருகிறார். ஆனால் அவற்றை நூலாக்கும் எண்ணம் ஏனோ ஏற்படவில்லை. நூலாக்கும் அளவுக்கு பெரிய எழுத்தாளனாக அவர் தன்னைக்கருதவில்லை. அவர் மனதில் பட்டதைஎழுதி வருவதாகச் சொல்கிறார்.” என்றேன்.உங்களைப்போன்றே சிலர் என்னிடம் கேட்டிருக்கின்றனர். அவரது கவிதைகளைப் படித்த ஒரு நண்பரும் இதையேதான் சொன்னார். அவர் கவிதை எழுதுவார்என்று தெரியும். ஆனால் இத்தனை கவிதைகளை எழுதியிருக்கிறார் என்றவர் ஏன் அவற்றை தொகுத்து நூல் வெளியிடக்கூடாது என்றார்.நான் இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர் சொன்னது என்னவெனில் ஒரு பிரபலமான எழுத்தாளர் அவரை நிகழச்சிக்கு அழைக்கும்போது நிபந்தனை விதிப்பாராம். அவர் எழுதிய நூலை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வாங்கவேண்டும் என்பதே அந்ந நிபந்தனை. பெரிய எழுத்தாளர்களின் நிலையே இன்று இப்படி என்றால் வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டாமா? என்கிறார்.நம்மை விட பலமடங்கு சிந்தனை வளமிக்க எழுத்தாளர்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்ப படைப்புக்களை படைத்துக் கொண்டிருப்பார்கள். ஆதலால் எதையும் பாதுகாப்பதற்காக படைக்கத் தேவையில்லை.எதிர்காலச் சந்ததியினருக்கு எந்த அளவுக்குஉணவுப் பொருட்களை சேமித்து வைக்க முடியும்? அவர்கள் வாழும் காலங்களில் அவர்களின் தேவைக்கு அவர்களே உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்வார்கள் அல்லவா என்கிறார். அதிலும் நாம் இப்போது சாப்பிடும் உணவை சாப்பிடுவார்களா? என்பதே சந்தேகம்.அதுபோன்றே அவரவர் வாழும் காலங்களில் படைப்பாளிகள் படைப்பை தந்துகொண்டே இருப்பார்கள். சொல்லப் போனால் இன்றைய படைப்புக்களைவிட சிறந்த படைப்புக்களும் அறிவுசார்ந்த படைப்புக்களும் வரக்கூடும்.இன்னொன்றும் அவர் சொன்னார். அவரதுஎட்டாவது வகுப்பு படிக்கும் பேத்தி அவர்எப்பாவாவது தியாகராஜ பாகவதர் பாடிய பாடலை தொலைக்காட்சியில் யூடியூப் மூலம்கேட்டால் ஐயோ தாத்தா இந்த பாடலில் என்ன இருக்கிறது என்று இப்படி கேட்கிறீர்களோ என்பாளாம்.அதுமட்டுமா அவளைப்பெற்ற அப்பனான அவர் மகனோ அவர் “காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்” என்ற பாட்டைக்கேட்டால் ஐயோ அப்பா என்றபடி இரு காதுகளையும் மூடிக்கொண்டு செல்கிறானாம்.அப்படிச் சென்றவனின் அறையிலிருந்து “கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு, கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு” என்ற பாடல் கேட்குமாம். இப்படியாக ஒரு குடும்பத்தில் இருக்கும் அப்பா, மகன், மற்றும் பேத்திக்குள்ளே சமகாலத்தில்கேட்கும் பாடலில் இவ்வளவு வேறுபாடு.இந்த லட்சணத்தில் நமது படைப்பை எதிர்கால சந்ததியினர் நூலகம் சென்று தேடிப்பிடித்து படிப்பார்கள் என்று எதை வைத்து நம்புவது? அவர்களின் ரசனை எப்படிப்பட்டதாக இருக்குமோ?மதநூலாக இருந்தால் மதத்தைப் பரப்பவும் நீதி நூலாக இருந்தால் வாழ்வை நெறிப்படுத்தவும் வரலாற்று ஆவணங்களாக இருந்தால் நமது வரலாறு பற்றி அறியவும் உதவும். அதைத்தவிர மற்ற நூல்கள் எந்த அளவுக்கு பயன்பாட்டில் இருக்கும் என்பதை யாராலும் கூற இயலாது.இன்றைய எழுத்தாளர்களில் எத்தனைபேருக்கு பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, நற்றினை, குறுந்துகை, பதினென்கீழ்க்கணக்கு, பதினெண் மேல்கணக்குஎன்பனவெல்லாம் தெரியும்? அல்லது வாசித்திருப்பார்கள் என்கிறார்.எழுத்தாளர்களே அவற்றை எல்லாம் வாசிக்காதபோது மற்றவர்கள் இவற்றையெல்லாம் எப்படி வாசிக்க முடியும்என்கிறார்? இப்படியிருக்க, நம் படைப்புக்களை எதிர்கால சந்ததியினர் வாசிப்பார்கள் என்று எந்த அடிப்படையில் நூல்களைப் படைத்துக் கொண்டே இருப்பது?அதற்காக நூலைப் படைப்பதும் வெளியிடுவதும் வீண் செயல் என்று சொல்லவில்லை. ஆர்வத்தையும் கெடுக்கவில்லை. அடுத்த பிறவி இருக்கிறது, பிறப்பெடுப்போம் என்ற நம்பிக்கைதானே எகிப்திய பிரமிடுக்களில் பொன்னையும் பொருளையும் சேகரித்து வைக்கவைத்தது?இறந்த உடலை பதப்படுத்தி பாதுகாத்துவைக்க உதவியது. அதுபோல் நம் படைப்புக்களயும் நூலாக்கி பத்திரப்படுத்துவதில் தவறில்லை, அது அவரவர் விருப்பம் என்கிறார்.பொதுவாக பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் இன்றைய படைப்புக்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் போலாகிவிடும். இப்போதே காலத்தினால் அழிக்க இயலாத நூல்களைத் தவிர மற்ற நூல்கள் தூசுபடிந்து நூல்நிலையங்களில் இருப்பதை காணமுடியும்.ஏதோ நாம்மட்டுமே சிறந்தவர்கள் போன்றும் எதிர்கால சந்ததியினருக்கு நம்மைவிட்டால் அறிவுப் பெட்டகங்களை வேறு யாராலும் கொடுக்க இயலாது என்பது போன்று பாதுகாப்பதில் நம்பிக்கையில்லை. நம்மைவிட பலவழிகளில் சிறந்த படைப்பாளிகள் எதிர்காலத்தில் தோன்றுவார்கள் என்கிறார்.நம் முன்னோர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். அந்த மருத்துவமெல்லாம் பாட்டி வைத்தியமாகவும் நாட்டு வைத்தியமாகவும் எங்கோ ஒருசில இனங்களில் மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன. இன்றைய காலகட்டத்திற்கேற்ப நவீன மருத்துவம்தானே கோலோச்சி நிற்கிறது.நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள். உங்கள்பாட்டனார் பாதுகாத்து பேரன்களுக்கும் கொள்ளுப் பேரன்பளுக்கும் பயன்படும் என்று பாதுகாத்து வைத்திருந்த மிதிவண்டியிலா பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?அல்லது திரைப்படத்தில் காட்டுவார்களேபரம்பரை நகைகள் என்று. அவற்றையா உங்கள் பேத்தி கவிநீ (கவிதாயினி) போட்டுக்கொண்டு திரிகிறாள். அல்லது உங்கள் பேத்திக்கு அபிதகுஜாலாம்பாள் என்றா பெயர் வைத்திருக்கிறீர்களா என்று வழக்காடுகிறார்.
மாட்டு வண்டியை பாதுகாத்து வைக்கவேண்டி இருக்கவில்லை. இன்று பேருந்துகளும் தொடர்வண்டிகளும் விமானங்களும் வந்துவிட்டன. இவற்றை நாம் பாதுகாத்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் சென்றபின் இவைகள்தான் பயன்பாட்டில் இருக்கும் என்று எப்படிச் சொல்ல இயலும்?எத்தனையோ சங்க இலக்கியங்களை இழந்து விட்டோம். ஆட்சியாளரின் அடுப்பங்கரையில் தீக்கிரையாக வேண்டிய திருக்குறள் சமையல்காரரால் தடுத்திருக்கப்படாவிடில் திருக்குறள் இன்றில்லை. ஆதலால் எந்த நூலும் இருப்பதும் மறைவதும் காலத்தின் கையில் உள்ளது என்ற தத்துவமெல்லாம் பேசுகிறார்.இப்போதெல்லாம் பெருமளவில் நூல் வாசிப்பவர்கள் குறைந்தே வருகிறார்கள். அதற்காக நூல் வாசிப்பவர்கள் இல்லை என்று சொல்ல வில்லை.பொழுது போக்கென்று அந்த காலங்களில் நூல் வாசிப்பது வானொலி கேட்பது போன்றவைகள் மட்டுமே இருந்தன. அதனால் தடித்த கனமான நூல்கள் ஐந்தாறு பாகங்களாக வந்தன. இப்போது அந்த நூல்களின் இடத்தில் நான்கைந்து ஆண்டுகள் தொடரக்கூடிய தொடர்கள் தொலைக்காட்சிகளில் வருகின்றன.அதற்கு சான்றாக பொன்னியின் செல்வன் போன்றோ கடல்புறா போன்றோ நாவல்கள் இப்போது வருவதில்லை என்பதில் இருந்து அறியலாம். அதுபோன்ற நாவல்களை தொடராக வெளியிட்டு வந்த இதழ்களின் இன்றைய நிலையே உள்ளங்கை நெல்லிக்கனியாக காணக்கிடக்கின்றன. சில இதழ்கள் தொலைக்காட்சிப் பக்கம் வந்து தொடர்களை வெளியிடத் தொடங்கி விட்டன.இது இப்படியிருக்க எல்லோரும் நூல் வெளியிடுகிறார்கள் என்பதற்காக எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போகிறார் என்ற கதையாக நூல் வெளியிட விரும்பவில்லை என்கிறார்.அதனாலேயே பொழுது போக்குக்காக அவர்எழுதுவதை நூலாக்கவில்லை. அவர்எழுதுவதை பத்துபேர் படித்தாலே அதுவே போதும் என்ற மனமே பொன்செயும் மருந்தாக உள்ளபோது அதையும் மீறி எவ்வாறு அவர் நூல் வெளியிடுவார்?இப்படி பலவாறு கதைத்துக்கொண்டிருந்தபோது நண்பர் ஒன்றைச் சொன்னார்.“சுவாமி விவேகானந்தர் நம்மைப் பற்றிபிற்காலத்தில் பிறர் சொல்லும்படி மூன்றில் ஒன்றைச் செய்ய வேண்டும் என்றிருக்கிறார்”“என்ன அந்த மூன்று” என்றேன்.“அதாவது வீடொன்றை கட்டியிருக்க வேண்டும். பிள்ளையொன்றை பெற்றிருக்க வேண்டும் அல்லது நூலொன்றுஎழுதியிருக்க வேண்டும்” என்றார்.அப்படிச் சொன்னவர் சிறிதுநேரம்பொதுவாக பேசிவிட்டு கைபேசியை வைத்தார்.அவருடன் பேசி முடித்தபின் என்னுள் பல எண்ண ஓட்டங்கள் ஓட ஆரம்பித்தன. அவை நூல் வெளியிடுவது பற்றி என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நான் நினைத்தது சுவாமி விவேகானந்தரை பற்றியதே.மானிட வாழ்க்கையே நிலையற்றது. ஆனால் பற்றற்று இருக்க வேண்டிய விவேகானந்தர் நமக்குப்பின் நம் பெயர் நிலைக்க வேண்டும் என்றால் வீடுகட்ட வேண்டும், பிள்ளைபெற வேண்டும் அல்லது நூல் எழுதவேண்டும் என்ற இந்த மூன்றில் ஒன்றைச் செய்யவேண்டும் என்று சொல்லி சொல்லியிருக்காரே என்று எண்ணி குழம்பினேன்.அதுசரி, வீடு கட்டுவது, பிள்ளை பெறுவது மற்றும் நூல் எழுதுவது இவற்றுள் ஏதாவது ஒன்றின் மூலம் நம் பெயர் நிலைக்கும் என்று பற்றற்று இருக்கவேண்டிய துறவி விவேகானந்தர் சொல்லியிருப்பது விந்தைதான். விறகுஇடை மூடி அழல் கொடுபோடவெந்து விழுந்து முறிந்த நிணங்கள்உருகி எழும்பு கருகி அடங்கிஓர்பிடி நீறும் இலாத உடம்பைஎன்ற பட்டினத்தாரின் வரிகளை படிக்கும்போது பட்டினத்தாரின் பற்றற்ற நிலையையும் நிலையற்ற வாழ்வையும் உணரமுடிகிறது. பின் ஏன் விவேகானந்தர் அவ்வாறு கூறினார் என்ற நினைத்தபோது பதில் கிடைத்தது.
அவர் துறவி என்றாலும் பற்றைத் துறக்கவில்லை என்பதறிந்தேன். அவருக்கு மதத்தின் மேல் பற்று இருந்தது. அதனால்தான் திருவனந்தபுரம் வந்திருந்த அவர் ஒரு கூட்டத்தில் பேசும்போது நாம் எல்லாம் இந்துக்கள் என்றார். அதற்கு மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை நாங்கள் இந்துக்கள் அல்ல, நாங்கள் சைவர்கள் என்றாராம்.இப்போது சுந்தரம் பிள்ளை சொன்னதை எண்ணிப்பார்த்ததும் எனக்கு என்னன்னவோ தோன்றியது. நாமெல்லாம் இந்துக்கள் என்றால் நாம் ராமன், கிருஷ்ணன்என்றெல்லாம் பெயர் வைக்கும்போது இந்துக்கள் என்று சொல்பவர்கள் எல்லாம்ஏன் முனியாண்டி, மாடசாமி என்றெல்லாம் பெயர் வைக்கமாட்டேன் என்கிறார்கள்.நாம் சீதா, ஜானகி என்றெல்லாம் பெயர் வைக்கும்போது அவர்கள் ஏன் இசக்கியம்மாள் பேச்சியம்மாள்என்றெல்லாம் பெயர் வைக்க மாட்டேன் என்கிறார்கள் என்று எண்ணினேன். உண்மையில் நாம் இந்துக்களா? சைவர்களா? வைஷ்ணவர்களா? அல்லது வேறு ஏதாவதா?நண்பர் சுவாமி விவேகானந்தரை பற்றிசொன்னதை எண்ணிக் கொண்டிருந்தபோது கிணறுவெட்ட பூதம் கிளம்பியதுபோல் “மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி கண்ணிருந்தும் குருடானேன், நான் கண்ணிருந்தும் குருடானேன்” என்ற திரைப்பட பாடல் வரிகள் என் நினைவில் வந்ததன.அப்போது“பெயர் புகழெல்லாம் உடன் வராதென்ற உண்மையை அறிந்தேன், நான் உண்மையை அறிந்தேன்” என்ற மாற்றுவரிகள் எனக்கு உண்மையை உணர்த்தியது. – சங்கர சுப்பிரமணியன்.
![]()