கதைகள்

“சவப்பெட்டி” ….. சிறுகதை ….. 07 …. அண்டனூர் சுரா.

அப்பாவை மருத்துவமனையில் சேர்த்த நாட்கொண்டு இருவேறு செய்திகள் என்னை வந்தடைந்தன. அதில் முக்கியமான செய்தி அப்பாவின் ஆரம்பக்கால உதவியாளர் சேதுராமன் சொன்ன செய்தியாக இருந்தது. அப்பா மீது அவர் வைத்திருந்த நன்மதிப்பின் பேரில் ஒரு செய்தியை எனக்குச் சொல்லியிருந்தார். அச்செய்தியைச் சொல்கையில் அவருடைய நா தழுதழுத்ததை விடவும் அச்செய்தியை உள்வாங்குகையில் என் ஒற்றைச் செவியின் குழைவு நடுங்கியது. அவர் கெஞ்சிய கோரிக்கையுடன் அச்செய்தியை என்னிடம் பகிர்ந்துகொண்டார். விக்கல் எடுப்பதைப் போன்று வார்த்தைகளைத் தொண்டைக்குள் உருட்டினார். “தம்பி நான் சொன்னேனு மட்டும் யார்க்கிட்டேயும் சொல்லிடாதீங்க. நான் உசிரோட இருக்க முடியாது. உன் அப்பா ஆஸ்பத்திரியில சேர்த்த மறுநாளே இறந்திட்டார்ப்பா. அதற்குப் பிறகும் உன் அண்ணன்க உன் அப்பாவுக்கு வைத்தியம் பார்க்கிறான்க. உனக்கு எதிராக என்னவோ சூழ்ச்சி நடக்குதுப்பா….” இதை அவர் சொல்லி முடிக்கையில் அவரது வார்த்தைகள் எனக்குள் கனத்தன.

அப்பா இறந்துவிட்டார் என்கிற செய்தியை விடவும் இறந்ததற்குப் பிறகும் உன் அண்ணன்கள் வைத்தியம் பார்க்கிறான்க….என்கிற செய்திதான் என்னைப் பெரும் உலுக்கு உலுக்கியது. துக்கத்திற்குள் ஏமாற்றம் நுழைந்து அரித்தது. அப்பா இருக்கின்ற திருச்சிக்கும் நான் இருக்கிற லண்டனுக்கும் இடையில் மூன்று நீரோட்டக் கடல் இருக்கிறது. ஒரு நாள் முழுக்கவும் பறந்து தரையைத் தொட வேண்டிய விமானத் தூரத்தை என் நினைவுகள் லண்டனுக்கும் திருச்சிக்கும் சென்று திரும்புவதாக இருந்தது. இரத்தவோட்டம் கடலடி வெப்ப நீரோட்டத்தைப் போல ஓடிக்கொண்டிருந்தது .

நான் அணைத்து வைத்திருந்த அலைபேசியை எடுத்து அண்ணன்களுக்கு அழைப்பு விடுத்தேன். சேதுராமன் சற்று நேரத்திற்கு முன் சொல்லி வைத்த செய்தி உண்மையாக இருந்துவிடக்கூடாதென உள்ளுக்குள் வேண்டிக்கொண்டேன். ஒன்றிரண்டு அழைப்புகளுக்குப் பிறகு அக்காள் குரல் என் செவியில் விழுந்தது. அழைப்பை எடுத்ததும் அவள் பேசிவிடவில்லை. நீண்ட அமைதியுடன் கூடிய சுவாசம் என் காதிற்குள் தகித்தது. அவளது அமைதியும் இழுத்துவிடும் மூச்சும் என்னை கலவரப்படுத்தின. சேதுராமன் சொன்னச் செய்தி உண்மைதானோ? அப்பா இறந்துதான் விட்டாரோ? கேள்விகள் எனக்குள் கொம்பு முளைத்து, தலையைச் சிலுப்பின.

“அக்கா,அப்பா எப்படி இருக்கார்?”

“இம், நல்லா இருக்கார்”

என் சிந்தனை முள் ஒரு புள்ளியில் நின்றது. பிறகு அப்படியும் இப்படியுமாக அசைந்தது. பிறகு ஓடத்தொடங்கியது. “அக்கா, உண்மையைச் சொல். அப்பா எப்படியிருக்கார்?. அவர்க்கிட்ட நான் பேச வேணும்”

“அப்பா நல்லா இருக்கார். ஆனா அவருக்கிட்ட இப்போதைக்குப் பேச முடியாது”

“ஏன்?”

“நான் இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன்”

“அப்பா கூட யார் இருக்கா?”

“யாருமில்ல“

“உதவிக்கு?”

“நர்ஸ்கள் பார்த்துக்கிறாங்க”

“ உணவு, பணிவிடை செய்றதெல்லாம்?”

“நர்ஸ்கள் தான்”

“அப்பாவை நீ பார்த்தீயா?”

“பார்த்து ஒரு மாசமாச்சு”

“ஏன் அவ்ளோ நாளாச்சு!”

“நர்ஸ்ங்க யாரையும் உள்ளே விட மாட்டேங்கிறாங்களே”

“அப்பாக்கிட்ட யாருமே இல்லையா?”

“பெரியண்ணன் மட்டும் இருக்கு”

அக்காள் சொல்லும் எதையும் என்னால் நம்ப முடியவில்லை. இத்தனை நாள் சொன்ன அதே பதில்களைத்தான் அப்பொழுதும் சொல்லியிருந்தாள். முந்தைய பதில்களுக்கு இல்லாத கனம் இப்பொழுது இருந்தது.

“அக்கா, எனக்கு அப்பாவைப் பார்க்கணும் போலிருக்கு. அப்பாவைப் போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பி வை”

“நர்ஸ்கள்தான் யாரையுமே உள்ளே விடுறதில்லையே. பிறகு எப்படியாம் போட்டோ எடுக்கிறது?”

“நர்ஸ்க்கிட்ட சொல்லி எடுக்கச்சொல்லு”

“நர்ஸ்க்கிட்ட என்ன கேட்க முடியுது. எரிந்து விழுறாங்க”

அக்காவின் பதில்கள் என்னைப் பயமுறுத்தின. என்னால் ஓரிடத்தில் இருப்புக்கொள்ள முடியவில்லை. அப்பா உண்மையாகவே இறந்துதான் விட்டாரோ. மூன்று பேரும் சேர்ந்து அப்பாவின் மரணத்தை மூடி மறைக்கிறார்களோ. என் சிந்தனையோட்டம் புருவங்களுக்கிடையில் குவிந்து மனதிற்குள் கனத்தது.

அப்பாவை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்த நாட்கொண்டு எத்தனை அழைப்புகள் எனக்கு. “அப்பா ஆபத்திலிருக்கிறார். தேறிவருகிறார், பிழைத்துக்கொள்வார்”

“அப்பாவைப் பற்றி இனி கவலையில்லை”

“பணம் அனுப்பி வை”

“அனுப்பியிருக்கேன்”

“போதாது”

“இந்த நம்பருக்கு அனுப்பு”

“இன்னும் கொஞ்சம் அனுப்பு”

இப்படியாக எத்தனையோ அழைப்புகள், கெஞ்சல்கள், வேண்டல்கள்.

ஒவ்வொரு முறை நான் பணம் அனுப்பும் பொழுதும் நம்பிக்கைக்குரியவர்களிடம் விசாரித்தப் பிறகுதான் அனுப்பி வைத்தேன். ஒரு உறவினர் இப்படியாகச் சொன்னார் “உன் அப்பா சுகமாக இருக்கார்”

“நீங்க அப்பாவைப் பார்த்தீங்களா?”

“பார்க்க முடியலை. டாக்டர் சொன்னார்”

ஒன்றுவிட்ட உறவு அத்தையிடம் விசாரித்தேன். “அப்பா நல்ல இருக்கார்ப்பா”

“பார்த்தீங்களா?”

“இல்லையேப்பா, நான் ஆப்பிள் அது, இதென நிறைய வாங்கிக்கிட்டு போனேன். அத்தனையையும் வாங்கிக்கிட்டு என்னை வெளியே அனுப்பிட்டாங்க”

அடுத்து என்னுடன் படித்த சிதம்பரம், முத்து, வேலுக்கண்ணு எனப் பலரிடமும் அப்பாவைப் பற்றி விசாரித்து பார்த்தேன். அத்தனை பேரிடமிருந்து ஒரே பதில்தான் வந்தது. “நல்லா இருக்காராம். ஆனால் நான் பார்க்கவில்லை”

அப்பாவுக்குப் போட்டியாகத் தொழில் செய்தவர்களெல்லாம் அப்பாவைப் பார்க்க வந்திருக்கிறார்கள். அத்தனை பேரும் மருத்துவமனைக்குள் செல்ல முடியவில்லை. நான் பெரிய அண்ணன் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தேன். பெரிய அண்ணன் ஒரு நாளில் என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். அவருக்கு எப்பொழுது அழைப்பு விடுத்தாலும் அக்காள்தான் எடுத்து பேசுபவளாக இருந்தாள். அக்காள் மீது எனக்கு கோபம் வந்தது. அதுநாள் வரைக்கும் காட்டாத உச்சப்பட்சக் கோபத்தைக் அவள் மீது காட்டினேன். “அப்பாவிற்கு என்ன பிரச்சனை? டாக்டர் என்ன சொல்கிறார்?”

“ காய்ச்சல்தானாம்…”

“ இப்ப எப்படி இருக்கார்?”

“நல்லா இருக்கார்”

“எப்ப டிஸ்ஜார்ஜ்?”

“ஒரு வாரமாகுமாம்”

“ஏன் அவ்ளோ நாள்?”

“வைரஸ் காய்ச்சலாம். தொற்றுமாம். அதனால் ஓய்வில் இருக்கணும்ங்கிறார்”.

இப்படியாக என்ன கேள்விக் கேட்டாலும் நான் நம்பும்படியான பதில்களையே சொல்லி வந்தவள், ஒரு நாள் நடுநிசியில் அழைத்து அழுகைக்கிடையில் “தம்பி, அப்பா நம்மளை விட்டுட்டுப் போயிட்டாருடா” என்றதும் சேதுராமன் சொன்ன ரகசிய செய்திதான் என் முன்னே கைக்கட்டி நின்றது.

இரண்டு நாட்களுக்கு முன்பு இதே அக்காள்தான் சொன்னாள். “அப்பா நல்லா இருக்கார். செய்தித்தாள் வாசிக்கிறார், சாப்பிடுறார், எல்லாரையும் நலம் விசாரிக்கார்,…” என்று. ஆனால் இப்பொழுது சொல்கிறாள் “அப்பா இறந்திட்டார்” என்று.

நான் அக்காவிடம் கேட்டேன். “நேத்தைக்கு வரைக்கும் நல்லா இருக்கார்னு சொன்னீயேக்கா?”

“இருந்தார். திடீர் அட்டாக். போயிட்டார்ப்பா…” அவள் குலுங்கி அழுதது என்னை குலுக்கியது. என் உதடுகள் தடித்தன. அலைபேசியை காதிலிருந்து எடுக்காமல் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றேன்.

அப்பா என்னுடன் லண்டனில் இருந்த காலம் வரைக்கும் அவருக்கு ஒரு பிரச்சனையும் இருந்ததில்லை. மாத்திரைகளால் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருந்தார். நன்றாக நடந்தார். சிரித்தார். பேசினார். லண்டனில் இருந்தவாறே சொந்த நாட்டில் நடக்கும் வியாபாரத்தைக் கவனித்துகொண்டார். அவரது நடை,உடை,பேச்சு இவற்றை வைத்துப் பார்க்கையில் அவரை எந்தவொரு நோயும் அவ்வளவு எளிதில் நெருங்கிவிடாத நிலையில்தான் இருந்தார். சொந்த ஊருக்குச் சென்றதும் திடீர் நோய்த்தொற்றும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் அதன் வழி மரணச் செய்தியும் என்னைப் பெரிதும் முடக்கியது.

அப்பா பெயரில் எவ்வளவு சொத்து இருக்கிறது! அவரது வங்கிக் கணக்கில் பல கோடிகள் புரண்டும், இருந்தும் அப்பாவைக் காப்பாற்ற முடியாத ஏமாற்றம் என்னை துக்கத்தில் ஆழ்த்தியது. அப்பாவிற்குத் தெரிந்து எத்தனை நண்பர்கள், எத்தனை மருத்துவர்கள்…..இத்தனை பேர் இருந்தும் அவர்களில் யாரேனும் ஒருத்தரை வர வழைத்து சிகிச்சைக் கொடுக்க முடியவில்லையே, கவலை எனக்குள் குறுகுறுத்தது.

அப்பாவின் மரணத்தில் என்னவோ ஒரு மர்மம் இருப்பதை என்னால் உணர முடிந்தது. அப்பா உயிருடன் இருந்திருந்தால் இத்தனை நாட்களில் எத்தனையோ முறை என்னிடம் அவர் பேசியிருப்பார். என்னைப் பார்த்தாக வேண்டுமென அடம் பிடித்திருப்பார். என்னை வரவழைத்திருப்பார்.

அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு மூன்று மக்கள். இரண்டு அண்ணன்கள். ஒரு அக்காள். இரண்டாம் மனைவிக்கு ஒரே மகன் நான். முதல் மனைவியின் மக்களை விடவும் என் மீதுதான் அவருக்கு அதிகப் பற்றுதலும் பாசமும் இருந்தது. எனக்குப் பிறகு இவன்தான் என் தொழிலை எடுத்து நடத்தப் போகிறானென என்னை அறிமுகம் செய்து சொல்வதாக இருந்தார்.

அப்பா தொழில் தொடங்கிய காலத்தில் அவரது தொழில் தொடர்ந்து நஷ்டத்தில் மூழ்குவதாக இருந்தது. நான் பிறந்ததற்குப் பிறகுதான் அவரது தொழில் ஏறுமுகமானது. ஆகையால் அவரது தொழிற்வாரிசாக என்னை அவர் அறிமுகம் செய்தார். தொடர்ந்து என் பெயரை உச்சரிப்பவராக இருந்தார். அவர் சங்கத் தலைவராக தேர்வானதும் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதும் நான் பிறந்ததற்குப் பிறகுதான்.

எனது தொடர்புக்குப் பெரியண்ணன் வந்திருந்தார். நான் அழைப்பை எடுத்ததும் சொன்னேன். “அண்ணா,மருத்துவமனை மீது வழக்கு தொடுக்கலாம்”

“இத்தனை நாள் சிரத்தையெடுத்து அப்பாவிற்கு வைத்தியம் பார்த்ததற்காகவா?”

அண்ணனின் பதிலொற்றியக் கேள்வி என்னை எச்சரித்தது. அவரே கேள்விகள் கேட்டார். பதிலும் சொல்லிக்கொண்டார். நான் சொல்ல நினைத்த அத்தனை சொற்களையும் மாத்திரை விழுங்குவதைப் போல விழுங்கிக்கொண்டேன்.

என் நண்பர்களில் பலரும் என் தொடர்புக்கு வந்தார்கள். அவர்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் என்னைப் பயமூட்டியது. “உன் அப்பா என்ன காரியம் செய்திட்டு செத்துப்போயிருக்கார் தெரியுமா?”

“என்ன செய்திருக்கார்?”

“மொத்த சொத்துகளையும் மூத்தத் தாரத்து பிள்ளைகளுக்கு உயில் எழுதி வச்சிட்டு செத்துப் போயிருக்கார்”

நான் லண்டனில் இருந்தபடியே ஒரு வழக்கறிஞரைப் பிடித்தேன். அவருக்குச் சொத்து விபரத்தை அனுப்பி, கண்காணிக்கச் சொன்னேன். அவர் சுறுசுறுப்பாக இயங்கினார். சற்றுமுன் எனது தொடர்புக்கு வந்தவர் ஒரு செய்தியைச் சொன்னார். “பெரிய வீடு பெரிய மகன் பெயருக்கும் மற்ற இரண்டு வீடுகளும் சின்ன மகன், மகள் பெயருக்கும் எழுதப்பட்டிருக்கிறது’

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“வங்கி இருப்பு?”

“ மகள் பெயருக்குப் பரிமாற்றமாகியிருக்கிறது”

“ நிலங்கள்?”

“மொத்த நிலங்களும் முதல் மனைவியின் பி்ள்ளைகளின் பெயரில் எழுதப்பட்டிருக்கிறது”

“தொழிற் வாரிசு?”

“அது பற்றிய பதிவுகள் இல்லை”

“ என் அப்பாவா அப்படி எழுதியிருக்கார்?”

“ஆமாம்”

“அப்பா எழுதிய உயிலா அது?”

“அப்பா எழுதியதோ என்னவோ. ஆனால் அவரின் பெயரால் உயில் எழுதப்பட்டிருக்கிறது”

“ கையெழுத்து போட்டிருக்கிறாரா?”

“இல்லை. ரேகை வைத்திருக்கிறார்”

“ ரேகை செல்லுமா?”

“சிகிச்சையில் இருந்திருக்கார். செல்லும்”

இவ்வளவையும் சொல்லி வந்த வழக்கறிஞர் கடைசியாகச் சொன்ன தகவல் எனக்குள் கலவரம் மூட்டியது.

“ஒரு ரகசியச் செய்தி. உண்மையோ பொய்யோ. உன் அப்பா உடலுக்கு மலர் வளையம் வைத்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்”

“ என்ன?”

“உன் அப்பாவின் இரண்டு கைகளில் ஒரு கை இல்லையாம்”

என் பாதம் என்னையும் அறியாமல் நழுவியது. “என்ன சொல்றீங்க! ஒரு கை இல்லையா!”

“ஆமாம். வலது கை”

“நீங்க பார்த்தீர்களா?”

“யாரும் அவரது உடலுக்கருகில் செல்ல முடியவில்லை”

“விரல்கள் கட்டப்பட்டிருக்கணுமே”

“மேலே வேட்டி போர்த்தப்பட்டுள்ளது”

எனக்குத் தலை சுற்றியது. அப்பாவிற்கு நிகழ்ந்திருக்கும் அகோர மரணத்தை நினைக்கையில் என் இரத்தம் கொதித்தது. சுவரில் முட்டிக்கொள்ளணும் போலிருந்தது. என் உதவியாளன் ஓடி வந்தான். அப்பா மரணத்தின் மீது இருக்கும் மர்மத்தை நான் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

அக்காவிடம் ஒரு செய்தியைச் சொன்னேன்.

“அக்கா…, நான் வந்ததும் அப்பாவை அடக்கம் செய்யலாம்”

“டிக்கெட் கிடைச்சிருச்சா?”

“ ம்…கிடைச்சிருச்சு”

“வந்து சேர எத்தனை நாளாகும்”

“ரெண்டு நாளாகும்”

“அவ்ளோ நாள் வரைக்கும் அப்பாவை வச்சிருக்க முடியாது” அக்காவின் இந்தப் பதில் திடமாக இருந்தது. எனக்கு அவள் மீது கோபம் வந்தது. “ இத்தனை நாட்கள் வச்சிருந்தீங்களே. இன்னும் ரெண்டு நாளைக்கு வச்சிருக்க முடியாதா?”

“என்ன பேசுறே நீ!”

அக்காவின் பதில் சூடாக இருந்தது.

“அங்கே என்ன நடக்கிறதென எல்லாம் எனக்குத் தெரியும். நான் வரும் வரைக்கும் அப்பாவை நீங்கள் வைத்திருக்கத்தான் வேணும்”

“ முடியாது. அடக்கம் செய்றதுக்கான வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு”

“ விடமாட்டேன்”

“ உன்னால முடிஞ்சதைச் செய்துக்கோ”

அக்காவிடம் அப்படியான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. அக்காவை எனது தொடர்பைச் சட்டென துண்டித்துக்கொண்டாள். நான் சுற்றும்முற்றும் பார்த்தேன். அலுவலகத்தின் நான்கு சுவர்களும் என்னை வெறிக்கப் பார்த்தன.

அங்கு இருந்தபடியே சில சட்ட நடவடிக்கைகளில் இறங்கினேன். அத்தனையும் தோல்வியிலேயே முடிந்தன. என் வழக்கறிஞரைத் தொடர்புகொண்டேன். அவரும் விலை போயிருந்தார். இணைய வழியில் காவல்துறையில் புகார் செய்தேன். புகார் ஏற்கப்பட்டு, நிராகரிப்பானது. எனக்காக நேராகச் சென்று புகார் கொடுக்க முன் வந்தவர்கள் சில மணி நேரத்திற்குப் பிறகு பின்வாங்கினார்கள். என் தொடர்பில் இருந்த பலரும் அலைபேசியை அணைத்திருந்தார்கள். நான் வீட்டிற்குச் சென்று நேரடியாக சட்ட நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய ஒன்றைத் தவிர அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன.

நான் நாடு திரும்புதலை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. லண்டனிலிருந்து சென்னைக்குத் திரும்பியதும் நண்பர்களின் உதவியோடு சில நபர்களை அழைத்துகொண்டு ஊருக்கு வந்தேன். எனக்குள் இரண்டு விதமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிந்தன. நேராக வீட்டிற்குச் செல்வதா, இல்லை அப்பாவை அடக்கம் செய்த இடத்திற்குச் செல்வதா? வீட்டிற்குச்

சென்றால் என்னவெல்லாம் நடக்கும்? என்னால் வீட்டிற்குள் நுழைய முடியுமா? என்னை வீட்டுக்குள் அனுமதிப்பார்களா? அக்காள் என்னைக் கட்டிப்பிடித்து அழுவாளா? அவள் அழுகையைக் குற்றம் காண முடியுமா?

ஊர் பங்காளிகள், உறவினர்கள் யார் பக்கம் நிற்பார்கள்? நான் புகார் கொடுத்து, சட்ட நடவடிக்கையில் இறங்குகையில் யாரேனும் இரண்டு பேர் என் பக்கமாக வருவார்களா? அப்பா கை பற்றிய விடயத்தைச் சொன்னால் என் புகார் ஏற்கப்படுமா? அப்பாவின் கை துண்டிக்கப்பட்ட விசயத்தைச் சாட்சியாக சொல்ல யாரேனும் ஒருவர் முன் வருவாரா? ஒருவேளை வந்தால் அவரைக் கூட வைத்துகொண்டு மூன்று பேர்களை என்னால் எதிர்க்க முடியுமா? சட்டம் என் பக்கமாகத் திரும்புமா? குறுகிய காலத்திற்குள் மர்மத்தை உடைத்துவிட முடியுமா? நிஜமாகவே அப்பாவின் இரண்டு கைகளில் ஒரு கை வெட்டி எடுக்கப்பட்டது உண்மையா? அதை நம்பலாமா? ஒரு வேளை எனது சந்தேகம் பொய்யாகிவிட்டால்?!

நான் திருச்சியை நெருங்கையில் இரவு மணி ஒன்றாகியிருந்தது. இந்நேரத்தில் வீட்டிற்குச் செல்வதை விடவும் அப்பாவை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் செல்வதே துரிதமென நினைத்தேன்.

நான் அழைத்து வந்திருந்த ஆட்களுடன் அப்பாவை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்றேன். அவ்விடத்திற்குச் செல்கையில் மணி மூன்றாகியிருந்தது. விடிவதற்குள் புதைக்குழியைத் தோண்டி, சவப்பெட்டியை வெளியிலெடுத்து, பிரித்து அப்பாவின் கையைப் பற்றிய ரகசியத்தை ஊர்ஜிதப்படுத்த நினைத்தேன். கையோடு கொண்டுச் சென்ற மண்வெட்டியால் புதைக்குழியை வெட்டிக் கொத்தினேன்.

ஒரு பக்கம் நரி ஊளையிடும் அரவம் எனக்குள் கலவரப்படுத்தியது. இன்னொரு பக்கம் நாய்களின் குரைப்பு. நான் எதையும் காதினில் வாங்கிக்கொள்ளவில்லை. உடம்பில் வியர்வைகள் சொற்றிட மேட்டைக் கரைத்து புதைக்குழியைத் தோண்டினேன்.

பொழுது மெல்ல விடிந்துகொண்டு வந்தது. பொழுதின் வெளிச்சத்தில் சவப்பெட்டி தெரிந்தது. சவப்பெட்டியை மெல்ல மேலே தூக்கினேன். சவப்பெட்டி மேலே வருவதும் வழுக்கிக்கொண்டு கீழே செல்வதுமாக இருந்தது. பொழுது முழுவதுமாக விடிகையில் சவப்பெட்டி என் பிடிக்கு வந்தது.

சவப்பெட்டியைத் தரையில் வைத்து மேலிருந்த மண்ணைத் தட்டி விட்டேன். முகத்தில் வழிந்த வியர்வைகளைப் புறங்கையால் துடைத்துகொண்டு வேகமாக மூடியைத் திறந்தேன். சவப்பெட்டிக்குள் அப்பா இல்லை. மூன்று பெருச்சாளிகள் இருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *