கதைகள்

அவன்தான் உண்மையானவன் நானல்ல…நானல்ல!… ( உண்மைக் கதை) …. ஏலையா க.முருகதாசன்.

பல தேவைகளுக்காக வீட்டுக்கு வெளியே நடந்தும்,காரிலும்,பஸ்,ரயில் என அவற்றுக்கூடாக எமது பிரயாணங்களை மேற் கொள்கிறோம்.

அவை புதுப்புது அனுபவங்களை எமக்குக் கொடுத்து வருகின்றன..அவை சில வேளைகளில் எமக்கு அறிவுரைகளாகவும் ஆலோசனைகளாகவும் இருக்கின்றன.ஆனால் சில வேளைகளில் மற்றவர்களுக்க நாம் மறைச்சு வைச்சிருந்த எமது சுயரூபத்தையும் காட்டிவிடுகின்றன.

இவ்வனுபவங்ளைப் பெறுபவர் ஒரு எழுத்தாளனாக இருப்பின் இந்த அனுபவங்களே கதைக்கருவாகிவிடுவதும் உண்டு.எழுத்தாளன் என்பதால் அவன் உண்மையானவன் என்று அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது.

25.02.23 அன்று டோட்முண்ட் நகரத்துக்கு போகவென காரில் புறப்பட்டு, பல பஸ்கள் சந்திக்கும் இடத்திலுள்ள கார்களை நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு பஸ்ஸில் பிரயாணத்தைத் தொடர்ந்து பிறகு ரயிலில் ஏறி டோட்முண்ட் போவோமென நினைச்சுக் கொண்டு பஸ்ஸில் ஏறி உள்ளே போனன்.

அங்கு ஒரே பயணிகள் கூட்டமாக இருந்தது.நூற்றுக்கு எழுபத்தைந்து வீதம் இளந்தலைமுறையினரே அதிகமாக இருந்தனர்.

சனக்கூட்டமாக இருக்கின்றதே என்பதால் மஸ்க்கை எடுத்து முகத்தில் மாட்டிக் கொண்டு இரண்டு பேர் இருக்கும் இருக்கையில் யன்னலோரமாக உட்கார்ந்திருந்தவரைக் கவனித்தபடியே அவரருகில் இடைவெளிவிட்டு உட்கார்ந்தன்.

அங்கே உட்காருவது எனத் தீர்மானித்த நான், அவர் ஆணா பெண்ணா எனக் கவனித்த போது அவர் ஒரு பெண் எனக் கண்டு கொண்டன்.

அந்தப் பெண் கைத்தொலைபேசியிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்.

பொதுவாக,பஸ் இருக்கையிலோ ரயில் இருக்கையிலோ பக்கத்தில் ஒருவர் உட்காரும் போது மெதுவாக கண் பார்த்துவிடும்.

ஒரு முகமலர்ச்சி செய்வார்கள் அல்லது பேசாமலிருப்பார்கள்.

இந்த இடத்தில் இருக்கலாமா எனக் கேட்பது பொதுப் பண்பு.சில நேரம் அதைக் கைக்கொள்வோம்,சில நேரம் விட்டுவிடுவோம்.ஆனால் நான் அந்தப் பெண்ணிடம் அனுமதி கேட்கவில்லை.

ஆனால் இந்தப் பெண் நானிருந்த ஆளரவமே தெரியாதது போல் இருந்தார்.சில வேளை நான் அங்கை இங்கை பார்க்கும் போது என்னைப் பார்த்திருக்கலாம்;,

எனக்கெதிரே நின்ற மூன்று இளைஞர்கள் நான் மஸ்க் போடுவதையும் இருப்பதையும்; கண்டு என்னைப் பார்ப்பதும் ஒருவருக்கொருவர் காதுக்குள் ஏதோ சொல்லிச் சிரிப்பதுமாக இருந்தார்கள்.

நான் அவர்களைப் பார்த்தால் அவர்கள் வேறு எங்கேயோ பார்ப்பது போல பாசாங்கு காட்டினார்கள்.

எனக்கும் சிரிப்பாக இருந்தாலும் அது வெளியில் தெரியாது ஏனென்றால் மஸ்க் அதை மூடிமறைச்சுவிடும்.

அவர்கள் சிரிப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணம் இருக்கலாம்.காரணம் ஒன்று அந்த பஸ்சுக்குள் இருந்த எந்தவொரு பயணியுமே மஸ்க் போடாமலிருக்கையில் நான் மட்டுமே போட்டிருப்பது இந்த ஆள் விளக்கமில்லாத மனுசனாக்கும் என்று யோசித்து அவர்கள் சிரித்திருக்கலாம்.

காரணம் இரண்டு நீங்கள் பார்த்த படத்திலிருக்கும் திருக்கோலத்தைக் கண்டதனாலும் அவர்களுக்கு சிரிப்பு வந்திருக்கலாம். இளைஞர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்.உந்த வயதில் நாங்கள் செய்யாத கூத்தா, சேட்டையா.

தெல்லிப்பழை அம்பனைச் சந்தி மதகிலும் மகாஜனாவுக்கு பக்கத்திலிருந்த மதகிலும் இருந்து கொண்டு போற வாறவைக்கு வக்கணை சொல்லாதவவர்களா நாங்கள்,

யாராவது பழைய சைக்கிளில் போகும் போது, ஓயில் இல்லாததால் செயின் கிறீச்சு கிறீச்சு என்று சத்தம் போட்டால் ஓயில் இல்லாட்டில் தேங்காயெண்ணையை விட்டிருக்கலாமே உந்த ஆள், அதுவும் இல்லாட்டில் ஒரு வாளி தண்ணியையாவது செயினுக்கு மேலே ஊத்தியிருக்கலாமே என்று கெக்கட்டும் போட்டுச் சிரித்தவர்கள்தானே நாங்கள்.

இரவில் துலாவில் தொங்கும் வாளிக்கயிற்றை ஆடுகாலில் கொழுவிப் போட்டு அடுத்தநாள் விடிய தண்ணீர் அள்ள வாறவர்களின் பிரதிப்பலிப்பைப் பார்க்கப் போய் அவர்கள் „உதார் உந்த வேலையைச் செய்தது என்று பேசியதை கேட்டும் கேளாத மாதிரி அவர்களுடன் சேர்ந்து „ஓமென்றுறன் இதென்ன காவாலித்தன வேலை என்று சொல்லி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் கீழே பார்த்துச் சிரித்தவர்கள்தானே நாங்கள்.

இதுதான் சொல்லுவினம் „முற்பகல் செய்ய பிற்பகல் கிடைக்கும்’ என்று,தெல்லிப்பழை அம்பனையில் செய்த சொறி சேட்டைகளின் பிரதிபலிப்பு ஜேர்மனியில் வெள்ளைக்காரப் பொடியங்கள் உருவில் வந்திருக்கிறது.அதையும் சிரித்துக் கொண்டே இரசிப்போம்.

அப்படியே பஸ்ஸில் போய் ரயில் பிடிச்சு டோட்முண்ட்ட நகரத்துக்குப் போய் அங்கை அம்மா உணவகத்திலிருந்து பகிடிக் கதையள் கதைச்சுப் போட்டு,சந்திக்க வேண்டிய நண்பரின் கடைக்குப் போய் இலங்கை அரசியல் நட்ட நயத்தைக் கதைச்சு அவர் கடையிலை ஒரு கோப்பி கோசோன் என்ற பலகாரத்தைச் சாப்பிட்டிட்டு(காசு குடுத்துத்தான்) முகமூடியுடன் மீண்டும் ரயிலேறி என்நகர் நோக்கி வந்து கொண்டிருந்தன்.

வந்து கொண்டிருக்கையில்,இடையிலொரு ஸ்ரேசனில் ஏறிய ஒருவர் எனக்கு முன்னால் உள்ள இருக்கையில் உட்கார்ந்தார்.உட்கார்ந்த உடனேயே பயணிகளுக்கான தறகாலிக நட்பை பரிமாறும் விதமாக நட்புடன் தலையையாட்டினார்.

நானும் தiலையையாட்டி முறுவலித்தேன்.ஆனால் எனது முறுவலை அவரால் கண்டு கொள்ள முடியாது.ஏனென்றால் மஸ்க்குத்தான் அதை மூடிமறைக்குதே.அவர் மஸ்க் போடவில்லை.

அவர் ஒரு ரஸ்யராக இருக்கலாம் என்று கணித்துக் கொணடன்.அவர் இருந்த வேகத்திலேயே இரண்டு பியர் ரின்னை எடுத்தார்.ஒரு ரின்னின் மூடியை உடைத்தவர,; அடுத்த ரின்னை எடுத்து கொலாகா(நண்பா – ஜேர்மன் மொழி) என்று எனக்கு நீட்டினார். „பியர் குடிப்பதில்லை அல்ககோல் நிக்ஸ் குட்(alkohol nichts gut)’ என்றேன் அவர் விடுவதாக இல்லை.தனது ஒரு கையை நெஞ்சில் வைத்து மற்றக் கையால் பியர் ரின்னை நீட்டி „குடி’ என்றார்.(நெஞ்சில் கைவைத்துக் கேட்டால் அன்பாகத் தருகிறேன் என்பதாகும் ) அவர் நீட்டியபடியே இருந்தார் நானும் வேண்டாம் என்று சொல்லிக்

கொண்டிருந்தேன்.அவருக்கு ஜேர்மன் மொழியில் கொலகன் மட்டுமே தெரிஞ்சிருந்தது. அவருக்கு ஜேர்மன் மொழி தெரியாது, எனக்கு அவரின் மொழி தெரியாது.அவர் தன் மொழியில் என்னுடன் உரையாட நான் ஜேர்மன் மொழியில் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தன்.

விளங்கிச்சோ விளங்கேலையோ அதுவும் ஒருவகை உரையாடல்தான். இடைக்கிடை நான் அவர் சொல்வது விளங்கியது போல தலையாட்டியும் யா Ja யா Ja என்று சொல்லியும் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தன்.

கதைக்கிளை கதையாக „நீங்கள் ரஸ்யாவா உக்ரைனா’ என்று கேட்க, அவர் நான் கேட்டதில் என்னத்தை விளங்கினாரோ தெரியாது,அவர் ஏதோ சொல்ல எனக்கு அது பிரான்ஸ் என்று தொனித்தது.

பாரீஸா என்று கேட்டேன் அவர் என்னவோ சொன்னார்.டு யு ஸ்பீக் இங்கிலீஸ் Do you speak English என்று கேட்டன்.

நைன் நோ என்றார.; இத்தனைக்கும் பியர் ரின்னை எனக்கு முன்னால் நீட்டிக் கொண்டு அவர் இருக்கையில்தான் இந்த உரையாடல் வெறும் ஒலி உரையாடலாக தொடர்ந்து கொண்டிருந்தது(மொழி விளங்காவிட்டால் கேட்பவர்க்கு அது வெறும் ஒலியேதான்).

நானோ வேண்டாமென்று அடம்பிடித்து வெற்றி கண்ட நேரத்தில்,அவர் பியர் ரின்னை பைக்குள் வைச்சவர் மாஜிக்காரன் மாதிரி பெரிய சொக்லட் பைக்கற்றை எடுத்து இடது கையால்தனது இடது நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு வலது கையால் என் முன்னே நீட்டி அன்பாகத் தருகிறேன் வாங்குங்கள் என்பது போல தனது மொழியில் சொன்னார்.

நான் „வேண்டாம் எனக்குச் சொக்லேட்: பிடிக்காது „ என்றேன். அவர் விடுவதாக இல்லை.எனக்கு ஏதாவது அன்பளிப்பு குடுத்தாக வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்.

இந்த மொழி விளங்கா ஒலி உரையாடலுக்கிடையில் நீங்கள் பேசுவது ரஸ்யப் பாசையா என்றன்.அப்பத்தான் அவர் மோல்டாவா என்று சொன்னாரே தவிர சொக்லேட்டை எனக்குக் குடுப்பதிலேயே இலட்சிய நோக்கத்துடன் இருந்தார்.

ஒரு இடத்தில் அவர் மீது இரக்கம் வந்து சொக்லேட்டை வாங்குவமா இவ்வளவு தெண்டிக்கிறாரோ என்று மனம் நினைக்க,மூளை சொல்லிச்சுது வாங்காதை என்று.

வாங்குவதில்லை என்று தீர்மானிச்ச நான்,; கடைசி அம்பாக எனக்கு சுகர் என்று பொய் சொன்னேன்.சில வேளை,அவர் இந்தச் சொக்லேட் சுகர்(இனிப்பு) குறைஞ்ச சொக்லேட் என்பதால் நான் வேண்டாம் என்று சொல்கிறேனோ என நினைச்சிருக்கலாம்.அவர் சொக்லேட்டை நீட்:டியபடியேதான் இருந்தார்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.தொப்பியும் மஸ்க்கும் அணிந்த எனது கோலத்தைப் பார்த்து „ இந்த பாவப்பட்ட அகதிக்கு இந்தச் சொக்லேட்டையாவது குடுப்பம்’ என்றுகூட நினைச்சிருக்கலாம்.’யார் மனசை யாரறிவார்’.

சொக்லேட்டை வாங்காமல் விடுவதற்கு என்ன செய்யலாம்,சுகர் என்று சொல்லியும் அவருக்கு விளங்கவில்லையே, நான் விட்ட அம்பு குறிதவறிவிட்டதே என்று நினைச்சுக் கொண்டு, கடைசி ஆட்டிலெறி அஸ்திரமாக „ எனக்கு டியேபெற்றிக் என்று ஜேர்மன் மொழியில் பொய் சொன்னன்.உடனே அவருக்கு விளங்கிவிட்டது.

நீட்டிய கை சோர, ஓ…என்பது போல தலையாட்டியபடியே சோர்ந்த முகமானார் அவர்.

சீக்கியரைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள்.அவர்கள் தமது இடுப்புக் கத்தியை எடுத்தால் இரத்தம் காணாமல் வைக்கமாட்டார்கள் என்று.இரத்தம் வரும் சம்பவங்கள் எதுவும் நடக்காவிட்டால்,தமது கையில் சிறு காயத்தை ஏற்படுத்தி அதில் கத்தியைத் தொட வைச்சுத்தான் கத்தியை உறைக்குள் வைப்பார்களாம்.

அது மாதிரியில்லாவிட்டாலும் ஒரு ஐம்பது வீதமாவது அது மாதிரி என்று சொல்லுமளவிற்கு எதிர் இருக்கை பயணிநண்பர் கர்ணனைப் போல எடுத்த சொக்லேட்டை யாருக்காவது குடுக்க வேண்டும் என்ற முனைப்புடன்,அவருக்கும் எனக்குமான எதிர் வலது பக்க இருக்கையில் ஆளுக்கொரு பியர் போத்தலுடன் இருந்த சோடிகளில் ஆணுக்கு அந்தச் சொக்லேட்டை நீட்ட,அந்த ஆண் வெல்ச சொக்லேட்(என்னவகைச் சொக்லேட்) என்று சொல்லிக் கூர்ந்து பார்த்துவிட்டு,ஓ…யா என்று அந்த ஆண் சொல்லிக் கொண்டே வாங்க அவருக்க எதிரில் இருந்த பெண்ணும் வாங்கு என்றார்,அவர் வாங்கி பைக்குள் வைச்சார்.

சொக்லேட்டை கொடுத்துவிட்ட திருப்தியில் என்னைப் பார்த்தவர்,என்ன நினைச்சாரோ தெரியாது,தனது கைத்தொலைபேசியை எடுத்து விரலால் டிஸ்பிளேயரை மேலையும் கீழையும்; போக வைச்சு எதையோ தேடினார். தான் தேடியதைக் கண்டுபிடிச்ச திருப்தியுடன் எனககருகில் வந்து உட்கார்ந்து கைத்தொலைபேசித் திரையில் பருப்பு வகைகளைக் காட்டி கொலாகா(நண்பா) என்று தனது மொழியில் ஏதோ சொன்னார்.

இந்தப் பருப்பு வகைகள் டயபெற்றிசுக்கு நல்லது என்று சொல்கிறார் என்பதை நான் விளங்கிக் கொண்டன்.

கைத்தொலைபேசித் திரையை மேலும் கீழுமாகத் தட்டி விதம் விதமான பருப்ப வகைகளைக் காட்டினார்.அவற்றில் கவ்பியும் இருந்தது.

இவைகளைத் தெரியும் என்று சொன்னன்.அவர,; அவர் மொழியில் சொல்ல நான் ஜேர்மன் மொழியில் சொல்ல அங்கம் பக்கத்து இருக்கையிலிருந்த சக பயணிகள் தங்கள் தங்கள் அலுவல்களைப் பார்த்துக் கொண்டே எமது உரையாடலையும் செவிமடுக்கலாம் என நான் நினைச்சுக் கொண்டன்.

இப்படியாக எனக்கும் அவருக்குமான உரையாடல் பருப்பு வகைகளைக் காட்டியவாறு சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்க,கைத்தொலைபேசித் திரையில் காணப்பட்ட மொழி கிட்டத்தட்ட ரஸ்ய மொழி போல இருப்பதைக் கண்டதும்,நான் அதை விரலால் காட்டி „இஸ் டஸ் ருஸ்லண்ட் ஸ்பிறாக?( இது ரஸ்ய நாட்டு மொழியா)என்று நான் கேட்க,நான் கேட்டதை, இதை எப்படிச் சாப்பிடுவது என்று நான் கேட்பதாக விளங்கிக் கொண்டார் போலும்,’கொலாக மிசின என்று சொல்லி மேலே கையைக் கொண்டு போய் கிரைண்டர்மிசினின் மூடியைத்; திறப்பது போலத் திறந்து கையால் பருப்புகளை அதற்குள் போடுவது போல போட்டு கொலாக மோர்கன் (Morgen)என்று காலை நேரத்தையம் தனது மொழியில் பின்னேரத்தையும் சொல்லி மாவாக்கிச் சாப்பிட வேண்டும் என்று சொன்னதை நான் விளங்கிக் கொண்டு யாJa யாJa என்று தலையாட்டி மோர்கன் ஆபண்ட்(மோர்கன் – காலை,ஆபண்ட் – மாiலை ) என்றேன்.

ஆனால் அவரோ எனக்கு எதுவுமே துப்பரவாக விளங்கவில்லை என்று நூறு வீதம் விளங்கிக் கொண்டார் போலும்,கிரைண்டரில் இந்தப் பருப்பு வகைகளை மாவாக்குவது எப்படி என்பதை விளக்கும் முகமாக கொலாக (நண்பனே) மிசின என்று சொல்லி பருப்புக்களை கிரைண்டருக்குள் போடுவது போல கைகளால் போட்டுக் காட்டி,திரிக்கும் சத்தம் செவியால் உணர வேண்டும் என்பதற்காக மீண்டும் அவர் „கொலாக’ என்று என்னை விளித்து „கிர்…ர்…ர் கிர்…ர்’ (கிரைண்டரிலிருந்து வரும் ஒலி)என்று சொல்லி அரைக்க வேண்டும் என்பதை உணர்த்தினார்.

ஏற்கனவே,யாருமே ரயிலில் மஸ்க் போடாத போதும் நான் மஸ்க் போட்டு தொப்பியும் போட்டிருப்பதைக் கண்ட அவர் நான் கிட்டடியிலைதான் அகதியாக வந்திருக்க வேணும் என்று முடிவெடுத்து, பாவம் என்று நினைச்சு உணவில் அறிவுரை கூறினாரோ தெரியாது. மீண்டும் போய் அவர் இருக்கையில் உட்கார்ந்தார்,

அவர் ரஸ்யரா உக்ரைனரா அல்லது அவர் எந்த நாடாகவிருக்கும் என்பதை அறிய வேண்டும் என்று ஆர்வப்பட்ட நான் அவரிடம் „கொலாக சீ வெல்ச லாண்ட் (நீங்கள் எந்த நாடு) என்று கேட்க,இதற்கிடையில் அவர் கதையோடு கதையாக மோல்டாவா என்று சொன்னதை மூளை ஞாபகப்படுத்திக் கொண்டு நிற்க, எனக்கு முன்னால் உட்கார்ந்த அவர் „கொலாக’ என்று ஐந்து விரல்களையும் நீட்:டி ஒவ்வொன்றாக மடிச்சு இது ரஸ்யா,இது உக்ரைன்,இது போலோ,(போலண்ட்)இது றோமானியா,இது மோல்டோவா என்று பக்கத்து பக்கத்து நாடுகளைச் சொல்லி விளக்கினார்.

நான் உங்களுடைய நாடும் ஒரு காலத்தில் ரஸ்யாவுடன் இணைஞ்சிருந்த நாடுதானே என்பதை அவருக்கு உணர்த்துவதற்காக எனது இரண்டு கைகளையும் அகலமாக விரிச்சு குறோச றுஸ்லண்ட் (ரஸ்ய ஒன்றியம்) என்று சொல்ல அவர் அதை எப்படி எடுத்துக் கொண்டு விளங்கினாரோ தெரியவில்லை,விறு விறு என்று பைக்குள் கையைவிட்ட அவர் தனது பாஸ்போர்ட்டை எடுத்துக் காட்டினார்.

அது மோல்டாவா என்ற நாட்டின் பாஸ்போர்ட்.அவர் மோல்டாவியன்.எந்த நாடு என்று என்னைக் கேட்டார்.சிறீலங்கா என்று சொன்ன நான் சிறீலங்காவைத் தெரியுமா என்று கேட்டன் தெரியாது என்பது போலத் தலையாட்டினார்.

இந்தியாவைத் தெரியுமா என்று கேட்டன்,அவர் இந்தியா என்பதை கேள்விப்பட்டிருக்கிறார் போல தெரியும்,தெரியாது என இரண்டுக்குமிடையில் தலையாட்டினார்.

நான் பக்கத்து இருக்கைக்குசன் துணியில் விரலால் இந்திய வரை படத்தைக் கீறிக் கீழை மாங்காய் வடிவத்தைக் கீறி இதுதான் எனது நாடு என்றன்.

அவர் சிறீலங்காவை சீ லங்கா என்று உச்சரித்தார். நான் சிறீ என்று தனியாகச் சொல்லி லங்கா என்று தனியாகச் சொல்லிப் பிறகு இரண்டையும் சேர்த்து சிறீலங்கா என்று சொன்னன்.

ஆனால் அந்தப் பயணிநண்பன் மீண்டும் சீ லங்கா என்று சொன்னார்.சரி பரவாயில்லை அப்படியே அவர் உச்சரிக்கட்டும் என்று பேசாதிருந்தேன்.

கொஞ்ச நேர சந்திப்பிலேயே தனது முகத்தை எனது மனதில் பதிய வைச்சுவிட்டார் அந்தப் பயணி நண்பன். நான் எவனென்றும் பார்க்காமல் நட்புடன் பியர் தர முயற்சித்தார்.அல்ககோல் குடிப்பதில்லை என்று மறுத்தேன்.தன் இதயத்தில் கைவைத்து அன்புடன் தருகிறேன் சொக்லேட்டை வாங்கிக் கொள் என்றார். சந்தேகத்துடன் அவரைப் பார்த்து சொக்லேட்டை வேண்டாம் என்றன். டயபெற்றிக் என்று பொய் சொன்னன்.அதை அவர் உண்மையென்று நம்பி

அதற்கான பருப்புகளை எனக்குத் தன் கைத் தொலைபேசியில் காட்டி வாங்கிச் சாப்பிடச் சொன்னார். நான் ஒரு பொய்யன் ஆனால் அவர்உண்மையானவர.;.நான் சொன்னதையெல்லாம் உண்மையென்று நம்பினார்.அவரும் அகதி நானும் அகதியேதான். என்னையும் அவரையும் ஒரு தாரசில் இட்டால் அவரைத்தான் தராசு உண்மையானவராகக் காட்டும் . ஒவ்வொரு இனத்திலும் மோசமானவர்கள் இருக்கிறார்கள்.ஒரு இனமே மோசமானது என்று நினைப்பது மிகப் பெருந் தவறு.நாம் சந்திக்கிற அனைவருமே,நாம் கேள்விப்படுகிற செய்திகளை வைச்சு தவறானவர்கள் நினைப்பது தவறிலும் தவறு.அவங்கள் அப்படித்தான் எனப் பொதுப்படையாகப் பேசுவதும்,அதைப் பரிமாறுவதும் தவறு. நிறம் கடந்த,மொழி கடந்த,நாடு கடந்த,மதம் கடந்த மனிதம் ஒன்றுதான் கருணை சார்ந்தது என்பதை அந்த மோல்டோவிய மனிதன் காட்டிவிட்டார்.

இலங்கைத் தமிழர்கள் அனைவரும் நல்லவர்களா?,யோக்கியமானவர்களா இல்லவே இல்லை. நான்தான் பெரிது „நீ அந்தாள்’ என்று இன்றுந்தானே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டவர்கள் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தொன்றிய மூத்தகுடி என்று வீராப்புப் பேசும் நாமாகிய தமிழர்களுந்தான் என்பதை மறுக்கவே முடியாது.

எனது நகரத்து ஸ்ரேசனில் ரயில் நிற்க அவருக்கு கைலாகு கொடுத்து வீடர்சேகன் என்று சொன்ன நான் போததற்கு பிஸ் பல்ட் (வீடர் சேகன் – மீண்டும் பார்போம், பிஸ் பல்ட் -கெதியில்) என்று சொல்லி அவரிடமிருந்து விடைபெறறு ரயிலை விட்டிறங்கினன்.

என் மனச்சாட்சி என்னிடம் ஒரு கேள்வி கேட்டது, உண்மையச் சொல்லு அந்த மோல்டோவியனுக்கும் உனக்குமிடையில் ரயில் பயணத்தில் உரையாடிய உரையாடலில் பொய் சொல்லி அவனை ஏமாற்றியவன் நீதானே என்றது.

உண்மை,நான் அவருக்கு பொய் சொல்லிவிட்டன்.அவர்தான் உண்மையானவர்.அவரின்; மனித நேயத்துக்கு முன்னால் நான் ஒன்றுமேயில்லை.மனம் கூனிக்குறுகிறது,

என் மீது பரிதாபம் கொண்டு அன்பு பாராட்டி மனதில் எதையும் வைக்காமல் உண்மையாக அந்த மோல்டோவியர் நடந்து கொண்டார். ஆனால் நானோ „அறப்படிச்சவன் கூழ்பானைக்குள் விழுந்த கதையானேன்’. அவர்தான் உண்மையானவர் நானல்ல…நானல்ல

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *