போதைப் பொருள் விழிப்புணர்வு ; 10 குறள் ஒப்பித்தால் 2 லீற்றர் பெற்றோல் : இந்தியாவில் சம்பவம்
இந்தியாவில் தமிழகத்தில், போதைப் பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 10 திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு 2 லீற்றர் பெற்றோல் இலவசமாக வழங்கிய எரிபொருள் நிலைய உரிமையாளரின் செயல் அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
தமிழகத்தின் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட புத்தாம்பூர் பகுதியில் செயல்படும் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் நாகம்பள்ளி பகுதியில் வள்ளுவர் ஏஜென்சி என்ற பெயரில் எரிபொருள் நிலையததை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை, கல்லூரி மாணவ – மாணவிகளிடையே போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, “திருவள்ளுவரின் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் உள்ள 10 குறள்களையும் ஒப்பித்து, அதற்கு விளக்கம் கூறும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக 2 லீற்றர் பெற்றோல் வழங்கப்படும். ஜனவரி 15, 16 ,17 ஆகிய மூன்று நாட்கள் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். எத்தனை மாணவ – மாணவிகள் வந்தாலும் வெற்றி பெறுவோருக்கு பெற்றோல் வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை, கல்லூரி மாணவ – மாணவிகள், செங்குட்டுவனிடம் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் உள்ள 10 குறள்களையும், அதற்கான விளக்கத்தையும் ஒப்பித்து, தங்கள் இருசக்கர வாகனத்திற்கு பெற்றோல் நிரப்பிச் சென்றனர். இதுவரை 100-க்கும் அதிகமான மாணவ – மாணவிகள் திருக்குறளை ஒப்பித்து பெற்றோல் பெற்றுச் சென்றுள்ளனர்.
வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன், கடந்த ஆண்டும் இதேபோல் திருக்குறள் போட்டி நடத்தியது குறிப்பிடத்தக்கது. அவருடைய செயல் அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
![]()