புதிய அளவீட்டு நடைமுறைக்கு உலக நாடுகள் ஒப்புதல்; அதன்படி பூமியின் நிறை 6 ரோன்னாகிராம்கள்
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரின் மேற்கே அமைந்த வெர்செயில்லெஸ் பேலஸ் பகுதியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வதேச அலகுகள் அமைப்பை நிர்வகிக்கும் எடைகள் மற்றும் அளவீடுகளின் 27-வது பொது மாநாடு நடந்தது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், உலகில் மிக பெரிய மற்றும் சிறிய அளவீடுகளை குறிப்பிடுவதற்கான அலகுகளை நிர்ணயிக்கும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அதற்கு முன்பு, சர்வதேச அலகுகள் அமைப்பு என்றால் என்ன மற்றும் அதன் பணிகள் பற்றி காண்போம். சர்வதேச அலகுகள் அமைப்பு கடந்த 1960-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் வழியே, பெரிய மற்றும் சிறிய அளவீடுகளை எளிதில் குறிக்கும் வகையிலான அலகுகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். எடுத்துக்காட்டாக, மீட்டர் என்ற அளவையை எடுத்து கொள்ளலாம். அவற்றில், ஆயிரம் மீட்டர் என பெரிய அளவீட்டை குறிப்பதற்கு ஒரு கிலோமீட்டர் என, அளவிடுதலில் எளிய முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோன்று, மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு என்ற சிறிய அளவீட்டை குறிப்பதற்கு ஒரு மில்லிமீட்டர் என, மற்றொரு எளிய முறை அளவீடு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுபோன்று பல்வேறு அலகுகள் பயன்பாட்டில் உள்ளன. கடைசியாக 1991-ம் ஆண்டில் இந்த மாநாடு கூடியது. அதில், மிக பெரிய மூலக்கூறுகளை பெயரிட்டு அழைக்க விரும்பிய வேதியியல் நிபுணர்கள் ஜெட்டா மற்றும் யோட்டா ஆகிய அளவைகளை அறிமுகம் செய்தனர். இதன்படி, யோட்டாமீட்டர் ஆனது, ஒன்றிற்கு பின்னால் 24 பூஜ்யங்களை கொண்டிருக்கும். எனினும், இங்கிலாந்து நாட்டின் தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் அளவீடுகளுக்கான அறிவியலின் தலைவர் ரிச்சர்டு பிரவுன் கூறும்போது, மிக பெரிய யோட்டா அளவீடும், உலகின் வளர்ந்து வரும் தரவுகளுக்கு எற்ற வகையில் கையாள போதிய ஒன்றாக இல்லை.
அதனால், புதிய அளவீடுகளை அறிமுகம் செய்வது தேவையாகி உள்ளது. தூரத்திற்கு பதிலாக நாம் நிறையை எடுத்து கொண்டால், பூமியானது 6 ரோன்னாகிராம்கள் அளவு நிறையுடையது. இது 6 என்ற எண்ணுக்கு பின்னால் 27 பூஜ்யங்களை கொண்டிருக்கும். வியாழனின் நிறையானது, 2 குவெட்டாகிராம்கள் அளவு கொண்டிருக்கும். இதன்படி, 2 என்ற எண்ணுக்கு பின்னால் 30 பூஜ்யங்களை கொண்டிருக்கும்.
அங்கீகாரம் பெறாத புரோன்டோபைட்ஸ் மற்றும் ஹெல்லாபைட்ஸ் ஆகிய அளவீடுகளை தரவுகளின் சேமிப்புக்கு, ஊடகங்கள் பயன்படுத்தி வந்தன. கடந்த 2010-ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ஹெல்லாபைட்ஸ் என்ற அளவீட்டை பயன்படுத்தி வந்தது. இந்த அளவீடுகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கையாளப்பட்டு வந்தன. அதனால், சர்வதேச அலகுகள் அமைப்பு ஏதேனும் புதிய விசயங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்ற தெளிவான நிலைப்பாடு ஏற்பட்டது. எனினும், அளவீட்டுக்கான முன்இணைப்புகள் அதன் முதல் எழுத்துக்களாலேயே குறிக்கப்படும். புரோன்டோ மற்றும் ஹெல்லா ஆகியவற்றை வைத்து பி மற்றும் எச் ஆகிய எழுத்துகள் முன்பே எடுக்கப்பட்டு விட்டன.
இதனால், பயன்படுத்தப்படாத குறியீடுகளாக மீதம் உள்ளவை ஆர் மற்றும் கியூ ஆகும். இதன்படி, கிலோ மற்றும் மில்லி போன்று, ரோன்னா மற்றும் குவெட்டா ஆகியவை மிக பெரிய எண்களை குறிப்பதற்கும், ரோன்டோ மற்றும் குவெக்டோ ஆகியவை மிக சிறிய எண்களை குறிப்பதற்கும் பயன்படும். 3 தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முறையாக, இந்த மாநாட்டில் புதிய அளவீடுகளை இணைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இவற்றில், பெரிய எண்களை குறிக்கும் முன்இணைப்பு முடிவில் ஏ என்ற எழுத்துடனும், சிறிய எண்களை குறிக்கும் முன்இணைப்பு முடிவில் ஓ என்ற எழுத்துடனும் இருக்கும். நடுவில் உள்ள வார்த்தைகள் 9 மற்றும் 10 ஆகியவற்றை குறிக்கும் கிரேக்க மற்றும் லத்தீனை அடிப்படையாக கொண்டவை என இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய முன்இணைப்புகளானது அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளுக்கு உலகத்தின் மிக பெரிய எண்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் என்றும் பிரவுன் கூறியுள்ளார்.