ராஜிவ் காந்தி கொலை..! தமிழீழத்தில் நிகழ்ந்த கொடூரங்களும் சிங்கள சிப்பாயின் கோபமும்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஒரே வருடத்தில் பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையானது தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், ராஜிவ் காந்தி கொலையுண்டதன் பின்னர் அந்தக் குற்றச்சாட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் மீது சுமத்தப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியும், கொலை நடவடிக்கையின் பின்புலம் குறித்தும் ஓய்வுபெற்ற முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி திலகவதி ஐபிஎஸ் விபரித்துள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்கள்தான் சிறப்பு படையொன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.
அவர் அனுப்பிய அந்த படை அமைதிப்படை என்றழைக்கப்பட்டது. அப்போது அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அறிவித்தனர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புலிகள் அமைப்பு கையில் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறினர். ஆனால், அந்த பேச்சுவார்த்தை நியாயமானதாக இல்லை.
அதாவது தமிழர்களுக்கான உரிமையை அவர்களுக்கு தருவதாக அந்த பேச்சுவார்த்தை அமையவில்லை. சமாதானத்தை நோக்கிய பாதையில் அந்த பேச்சுவார்த்தை நகர்ந்ததாக தெரியவில்லை.
மறுபடியும் அந்த பேச்சுவார்த்தை தமிழர்களை வஞ்சிப்பதற்கான ஒரு திட்டம் மாதிரியாகத்தான் நகர்ந்தது.
ஆகவே பேச்சுவார்த்தையை முற்றாக ஏற்றுக் கொள்ள முடியாமல் மறுக்க வேண்டியதாக ஆயிற்று. இந்த பேச்சுவார்த்தை மறுக்கப்பட்டதன் பின்னர் ராஜிவ் காந்தியின் அமைதிப்படை நிறம் மாறியது.
தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு பதிலாக, அந்தப் படை சிங்களவர்களுக்கு ஆதரவாக, தமிழர்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்டது.
இதேவேளை, இலங்கைக்கு ராஜிவ் காந்தி வருகைத் தந்திருந்த போது மரியாதை அணிவகுப்பில் கலந்து கொண்டிருந்த ஒரு சிங்கள இராணுவ சிப்பாய் கையில் இருந்த துப்பாக்கியால் ராஜிவ் காந்தியை தாக்க முற்பட்டார்.
இதற்கு காரணம், இலங்கை வாழ் தமிழர்களின் தொப்புள் கொடி உறவான இந்தியா எப்பொழுதும் தமிழர்களுக்கே சாதகமாக செயற்படும் என்ற எண்ணத்தில் அந்த சிங்கள இராணுவ சிப்பாய் ராஜிவ் காந்தியை தாக்க முற்பட்டார்.
ஈழத்தில் அமைதிப்படை நிகழ்த்திய கொடூரங்கள் இதன் பின்னர், ராஜிவ் காந்தி இலங்கைக்கு அனுப்பிய அந்த அமைதிப் படை மீள இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டது.
எனினும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போகும் போது அமைதிப்படைக்கு இருந்த மரியாதையோ வரவேற்போ மீள இந்தியாவிற்கு அழைக்கப்படும் போது கிடையாது. காரணம், இந்த அமைதிப்படையினர் மீது எண்ணற்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
தமிழீழத்தில் இருக்கும் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது முதற்கொண்டு பல கொடுமைகள் புரிந்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டதுடன், இந்த குற்றச்சாட்டுக்களை அடுக்கி ஒரு புத்தகமும் தயாரானது.
எனினும் அந்த புத்தகம் தடை செய்யப்பட்ட புத்தகமாக இப்போது பார்க்கப்படுகின்றது. இவ்வாறான பின்னணியில், இந்த கொடூரங்களுக்கு எல்லாம் சொந்தக்காரர்களான அந்த அமைதிப்படை மீதும், அதனை அனுப்பி வைத்த ராஜிவ் காந்தி மீதும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு வன்மம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு என்ற அடிப்படையிலும், அமைதிப்படையினரின் அதீத கொடூரங்களுக்கு இலக்கானவர்கள் என்ற காரணத்தினாலும் ராஜிவ் காந்தியை கொலை செய்ய விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவாளிகளாக பார்க்கப்பட்டனர்.
அத்தோடு, ராஜிவ் காந்தி கொலையுண்ட சமயம், சம்பவத்துடன் தொடர்புடைய பலர் ஈழத்தைச் சேர்ந்தவர்களாக காணப்பட்டதும் இதற்கு வலுவூட்டியது என குறிப்பிட்டுள்ளார்.