கட்டுரைகள்

மகாஜனாவின் பழைய மாணவனும் கொல்லங்கலட்டியில் அவர் அமைத்த பூங்காவும்!…. ஏலையா க.முருகதாசன்.

சரஸ்வதி வித்தியாலயமாக இருந்து பின்னர்,மகாஜனாக் கல்லூரியாக வளர்ந்து,தொடர்ந்தும் வளர்ந்து கொண்டிருக்கும் எமது கல்லூரியில் அன்று தொடக்கம் இன்றுவரை படித்தவர்கள் இலட்சக்கணக்கானோர் என்று சொல்லலாம்.

இம்மாணவர்கள்விவசாயிகளாவும்,ஆசிரியர்களாகவும்,மருத்துவர்களாகவும்,பொறியியலாளர்களாகவும்,வியாபரிகளாகவும்,ஓவியக்கலைஞர்களாகவும்,எழுத்தாளர்களாகவும்,இசை நடனக் கலைஞர்களாகவும்,சிற்பிகளாகவும்,புகைப்படக் கலைஞர்களாகவும்,அரசாங்க தனியார்துறைப் பணியாளர்களாகவும்,அதிகாரிகளாகவும், பேருந்துச் சாரதிகளாக,தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாகவும்,தையல்கலை நிபுணர்களாகவும், இப்படியாக மகாஜனாவில் பெற வேண்டிய கல்வியைப் பெற்றுவிட்டு வந்தவர்கள் பலவாயிரக் கணக்கானவர்கள் என்று சொல்லலாம்.

இவர்களில் பலர் தனித்துவமிக்கவர்களாக இருப்பார்கள்.இன்னும் சிலரோ சிலருக்கு மட்டுமே அவர்களின் தனித்துவத்தை அறிந்து கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

சிலருக்கு மட்டுமே தெரிந்த தனித்துவமிக்க ஒருவரைப்; பற்றித்தான் நான் இங்கே குறிப்பிடப் போகிறேன்.அவர் மகாஜனாவின் பழைய மாணவர்.அவருடைய பெயர் திரு.வேலாயுதம்.அவர் வசித்த இடம் கொல்லங்கலட்டி உளுவாங்கலட்டி என்ற குறிச்சியில் அவரின் வீட்டை எளிதாக தெரிதலுக்கு கொண்டு வரவேண்டுமெனில், அம்பனைச் சந்தியிலிருந்து கிட்டத்தட்ட 800 மீற்றரிலிருந்து 1000 மீற்றருக்கு அப்பால் உபமின்நிலையத்தைத் தாண்டி 10 மீற்றரில் மேற்குப்புறமாகச் செல்லும் ஒழுங்கையில் வடக்குப் புறமாக ஒரு உப ஒழுங்கை உண்டு.அந்த ஒழுங்கையின் முடிவில்தான் இவரின் வீடு உண்டு.

இன்னும் பிரதான ஒழுங்கையைத் தெளிவாகச் சொல்ல வேண்டும் எனில்,நான் விபரிக்கும் காலத்தில் இந்தப் பிரதான ஒழுங்கை சைவம் எனபவரின் வீட்டையும் சென்றடைகிறது.அதனோடு தெற்குப்புற மூலையோடு இருக்கும் வீடு மகாஜனாவின் ஆசிரியையாகவிருந்த திருமதி.கனகேஸ்வரி சின்னத்தம்பியின் பெற்றொரின் வீடாகும்.

இவரை 1970களில் சிறுவனாகவோ இளைஞனாகவோ, சிறுமியாகவே யுவதிகளாகவோ இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.அதுவும் கொல்லங்கலட்டி,பன்னாலை,தெல்லிப்பழை மாத்தனைப் பகுதியில் உள்ளவர்களுக்கே தெரியும்.மகாஜனாவின் குளோபல் நெட்வேர்க் தொடர்பாதளர்களாக இருக்கின்ற இன்று திருமணம் முடித்து பேரப்பிள்ளைகளுடன் இருக்கும் தெல்லிப்பழை, தெல்லிப்பழை மாத்தனை மறு;றும் கொல்லங்கலட்டி பன்னாலையைச் சேர்ந்தவர்கள் அவரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்புண்டு.

இவரிடம் அப்படி என்னதான் தனித்துவமிருந்திருக்கிறது என்ற கேள்வி எழலாம்.இவர் ஒரு தையல்கலை நிபுணர்.எப்பொழுதும் வெளிநாடுகளின் முன்னேற்றம் பற்றியும் குறிப்பாக யப்பான் பற்றியும் ஆர்வத்துடனும் சிலாகித்தும் பேசிக் கொண்டே இருப்பார்.மகாஜனாவில் நடக்கும் உதைபந்தாட்டமாகவிருந்தாலென்ன மகாஜனா பங்குபற்றுகின்ற யாழ் மைதானத்தில் நடக்கும் உதைபந்தாட்டமாக இருந்தாலென்ன, அவற்றைப் போய்ப் பார்க்காமல் விடமாட்டார்.பார்த்ததை இரசித்து இரசித்து விளைனயாட்டு வீரர்களின் திறமைகளை நுட்பங்களை, தவறுகளை ஒரு கைதேர்ந்த விளையாட்டுத்துறை நிபுணர் போன்று அணுவணுவாகச் சொல்வார்.

அவர் ஒரு சிறந்த தையல்கலையாளர்.அவரிடந்தான் எனக்கம் அண்ணைக்கும் பள்ளிக்கூடச் சீருடைகளை தைப்பிப்போம்.

சிறுவனாக இருந்த போது, என்னை அம்மா அவரின் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் அளவெடுத்து தைக்கக் கொடுப்பார்.

அப்பொழுது எனது கண்கள் அவரின் வீடு தொடக்கம் வளவினை நோட்டம் விடும்.வீடும் வளவும் ஒரு இலைகூட நிலத்தில் இல்லாதவாறு மிக மிக துப்பரவாக கூட்டி, அழகாக இருக்கும்.துப்பரவாக இருத்தலும் சுகாதாரத்தை கடைப்பிடித்திருத்தலும் ஒரு கலைதான் என்பதை அப்பொழுதே அவர் உணர வைத்தார்.

அவரின் வளவில் குறோட்டன் செடிகள் பூக்கன்றுகள் ஒழுங்காக நடப்பட்டு,அப்பூங்கன்றுகளையும் குறோட்டன் செடிகளையும் பூங்காவில் எப்படிச் சுற்றவர கற்களை அடுக்கி அழகுபடுத்தியிருப்பார்களோ அது போல அடுக்கி அழகுபடுத்தியிருப்பார்.அவரின் வீட்டு வளவிலிருந்து பிரதான ஒழுங்கைவரை தினமும் கூட்டி வேலியோரங்களிலிருக்கும் பூடுபுற்களை பிடுங்கி துப்பரவாக வைத்திருப்பார்.

அழகு எங்கும் எதிலும் இருக்கிறது என்பது மட்டுமல்ல. கூட்டித் துப்பரவாக்கிய ஒழுங்கைகளிலும் வீதிகளிலும்கூட இருக்கின்றது என்பது உண்மையிலும் உண்மையே.யாழ்ப்பாணத்தில் உள்ள சுப்பிரமணியம் பூங்காவுக்கு போயிருக்கிறோம்.காங்கேசன்துறையைச் சேர்ந்த ஜெயபாலசிங்கம் காங்கேசன்துறை பட்டின சபை தலைவராக இருந்த போது காங்கேசன்துறை கலங்கரை விளக்கடியில் அமைக்கப்பட்ட பூங்காவும் இருக்கிறது.மனைவி பிள்ளைகளுடன் அங்கு போயிருக்கிறோம். எனக்கு வேலாயுதம் அவர்களால் நடப்பட்ட பூங்கன்றுகளும் அவற்றை நட்ட இடைவெளிகளையும் கற்களை அடுக்கி ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தைப் பார்க்கையில் அதுவும் கொல்லங்கலட்டியில் இருந்த பூங்கா என்றே எண்ணத் தோன்றுகின்றது.

சராசரி மனிதர்களின் சிந்தனையைவிட, அவர் வெளிநாடுகளின் வளர்ச்சியைப் பார்த்து அவரின் எண்ணங்களும் சிந்தனைகளும் அதையொட்டியே இருந்தன.ஆனால் பலர் அவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளவில்லை,அவருக்கு ஒரு பட்டப்பெயரைக் கொடுத்து தமக்குள் கேலி செய்து கதைத்ததையும் நான் அறிவேன்.

நவீன சிந்தனைகளைக் கொண்டு புதிய புதிய விஞ்ஞானக் கருவிகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளையும், விஞ்ஞானக் கணிப்பீடுகளைச் செய்தவர்களையுமே „பைத்தியக்காரர்கள்’ என்றுதானே அன்றைய உலகம் சொன்னது.

திரு.வேலாயுதம் பிளவுஸ் தைப்பதில் இன்றைய அளவெடுக்கும் முறையினைப் போல அன்றே அளவெடுத்து கச்சிதமாக தைத்தவர்.அவரின் கையில் எப்பொழுதும் கல்கி குமுதம் போன்ற சஞ்சிகைகளடன் யப்பானைப் பற்றிய ஆங்கில புத்தகங்கள் நவீன தையல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இருப்பதைப் பாரத்;திருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை திரு.வேலாயுதம் ஒரு நவீன சிந்தனையாளர்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *