கொரோனாவில் ‘அத்துமீறிய’ இளசுகள்: ஆதரவற்ற குழந்தைகள் அதிகரிப்பு!
கொரோனா காலத்தில் அத்துமீறிய இளசுகளால் சிவகங்கை மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அன்பு காட்ட அன்னையும், தட்டி கொடுக்க தந்தையும், சண்டை போடா சகோதரியும், தூக்கி கொஞ்ச சொந்தமும், வெற்றி பெற எதிரியும், காட்டி கொடுக்க துரோகியும், உயிர் கொடுக்க நண்பனும், உயிரை எடுக்க காதலியும், என்னை காக்க கடவுளும் இல்லை. பாவம் அனாதையாக நான்,” என சிவகங்கை மாவட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் பச்சிளம் குழந்தைகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம், கல்வியில் பின்தங்கிய மாவட்டம் சிவகங்கை. இங்கு 445 ஊராட்சிகளில் 12,000 குக்கிராமங்கள் உள்ளன. 2 ஆண்டுகளாக கொரோனாவால் வேலைவாய்ப்பு இன்றி, பள்ளிகளும் மூடப்பட்டன.
வீட்டில் முடங்கியதால் கர்ப்பம் தரிப்பது அதிகரித்தது. இக்கால கட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் மாதத்திற்கு 200 பிரசவங்கள் வரை அதிகரித்தன. அதேநேரம் திருமண வயதை எட்டாத சிறுமிகள் காதல் வயப்படுதலும் அதிகரித்தது. திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் செப்., வரை 9 மாதங்களில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் அத்துமீறலில் பல சிறுமிகள் கர்ப்பிணியாகின்றனர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகின்றன. வழக்கமாக இம்மாவட்டத்தில் ஆண்டுக்கு 5 முதல் 9 குழந்தைகள் இவ்வாறு ஒப்படைக்கப்படும். ஆனால் 2022 ஜனவரி முதல் செப்., வரை 9 மாதங்களில் மட்டும் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கு கொரோனாவின் ‘பக்க விளைவே’ முக்கிய காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஒருவர் கூறியதாவது: இக்குழந்தைகளை மதுரையில் உள்ள தொண்டு நிறுவன கண்காணிப்பில் விட்டுள்ளோம். சிறுமிகள் கர்ப்பிணியாவதை தடுக்க பள்ளிகள் தோறும் விழிப்புணர்வு முகாம் நடத்துகிறோம். ஆதரவற்ற குழந்தைகளை பாரமரிக்க காரைக்குடி அருகே மானகிரியில் மையம் அமைக்கப்பட உள்ளது, என்றார்.