சதுரங்கப் போட்டியில் மோசடி; ஐந்து முறை உலக வெற்றியாளர் விருதுவென்ற மெக்னஸ் கார்ல்சன் ஆதங்கம்
சிங்கியூபீல்ட் கிண்ண (Sinquefield Cup) சதுரங்கப் போட்டியில் அமெரிக்க விளையாட்டாளர் ஹென்ஸ் நீமன் (Hans Niemann) மோசடி செய்ததாக ஐந்து முறை உலக வெற்றியாளர் விருதுவென்ற மெக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen) முன்வைத்த குற்றச்சாட்டு விசாரிக்கப்படும் எனச் சதுரங்க நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
நீமன் (Niemann) விவகாரம் கடந்த சில வாரங்களாகச் சதுரங்க விளையாட்டுத்துறையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக அந்தப் போட்டியில் நார்வே (Norway) விளையாட்டாளரான கார்ல்சன் 19 வயது நீமனிடம் (Niemann) தோற்றுப் போட்டியிலிருந்து விலகினார்.
கடந்த வாரம் Julius Baer Generation கிண்ண இணையப் போட்டியில் நீமனுக்கு எதிராக விளையாடவிருந்த 31 வயது கார்ல்சன் திடீரெனப் போட்டியிலிருந்து விலகிப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன் பிறகு இந்த வாரம் முதன்முறையாக, நீமன் போட்டியில் மோசடி செய்ததாகக் கூறி கார்ல்சன் எழுதிய கடிதம் Twitter-ரில் வெளியானது.
“இதுவரை நீமன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதைவிட அண்மைக் காலங்களில் அவர் அதிகம் மோசடி செய்திருக்கிறார்” எனக் கார்ல்சன் குற்றஞ்சாட்டினார்.
இருந்தபோதிலும் நீமன் எந்த மாதிரியான ஏமாற்று வேலைகளைச் செய்தார் என்பதைக் கார்ல்சன் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.