கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டி தொடக்கம்!
குஜராத் மாநிலத்தில் 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் அக்டோபர் 12ஆம் தேதி வரை போட்டிகள் களைகட்டவுள்ளன. இதன் தொடக்கவிழா அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டியது. போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைத்த பிரதமர் மோடி தேசிய விளையாட்டுப் போட்டியின் சின்னத்துடன் வாகனத்தில் சென்றார்.
பின்னர் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றி கலைஞர்கள் அசத்தினர். லேசர் ஒளிவண்ணத்தில் வண்ணமயத்துடன் நடத்தப்பட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் மாநில அணிகள் ஒவ்வொன்றாக அணிவகுத்து சென்றன. அப்போது பிரதமர் மோடி எழுந்துநின்று கைத்தட்டி அணிகளை வரவேற்றார்.
தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து உள்ளிட்ட 36 விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் இருந்து சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து 380 பேர் களமிறங்குகின்றனர்.