அறிவீனங்களும் முட்டாள்தனங்களும்கூட முதலீடாக்கப்படுகின்றன (ஏலையா க.முருகதாசன்)

தமிழ் இணையத்தளங்களில் தினம் தினம் அல்லது மணித்தியாலத்துக்கு
மணித்தியாலம் பல செய்திகள் மக்களை வந்தடைந்து
கொண்டிருக்கின்றன.
மக்கள் தங்கள் செய்திகளை பரபரப்புடன் வாசிக்க வேண்டுமென்பதற்காக
உண்மை இருபத்தைந்து வீதமும் பொய் புழுகு என்பவை எழுபத்தைந்து
வீதமும் கலந்து எழுதும் இணையத்தளங்களுக்கு மத்தியில் உண்மையை
மட்டுமே எழுதும் இணையத்தளங்கள் உண்டென்பதை
மறுப்பதற்கில்லை.அவையும் இருக்கத்தான் செய்கின்றன,நேர்மையாக
தமது பணியைச் செய்கின்றன. சில இணையத்தளங்களின் செய்திகள் உண்மையானவைதான் என நம்பிக் கொண்டு (அச்செய்திகள் உண்மையாயின்) செய்திகள் பற்றி ஒரு பார்வையைச் செலுத்துகையில்….
கடந்த எட்டாந் திகதி மறைந்த எலிசபெத் மகாராணியாரைப் பற்றிய செய்திகள் இறுதிக்கிரியைகள் பற்றிய செய்திகள் வகை தொகையாக இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வந்து கொண்டுதானிருக்கின்றன.இவற்றில் பல இணையத்தளங்கள்
வாசிப்போரை முட்டாள்களாக பார்க்க முனைகின்றன. அதில் ஒரு செய்தியாக இணையத்தளமொன்றில் ( அச்செய்தி உண்மையாயின்) வெளிவந்ததை வாசித்த போது, எனது மனதில் பல எண்ணங்கள் தோன்றின.எலிசபெத் மகாராணியார் பாவித்த பல
உடமைகள் இணையத்தளங்கள் மூலமாக விற்பனையாகி வருவதாகவும்,அவற்றில் அவர் 1998 ஆம் ஆண்டு பாவித்த தேநீர்த்தூள் அடங்கிய காய்ந்த பை 12.000 டொலருக்கு விற்பனையாகியுள்ளதாகவும் செய்தி வந்திருக்கின்றது.
இன்று உலகத்தலைவர்கள்; பாவித்த பல பொருட்களை ஏல விற்பனை மூலமும் இணையத்தள மூலமும் விற்க்கப்பட்டு வருகின்றன. மிதமிஞ்சிய பணக்காரர்கள் வணிக நோக்கத்துடன் அத்தகைய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதும்,அவை நாளடைவில்
தொல்பொருட்களாகவும், அருங்காட்சியகப் பொருட்களாகவும் அவை இனங்காணப்படுகின்றன.
இத்தகு பொருட்களை ஏல விற்பனை நிறுவனங்கள் முதலீடாக்கி விடுகின்றன.இன்று உலகம் எல்லாமே நவீனம், எல்லாமே இயந்திரம், எல்லாமே வணிகம் என்ற நிலைக்கு நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமென்பார்களே அது போல மிக மிக வேகமாக வளரத்
தொடங்கியுள்ளது.
இபபடியொரு நிலையில்தான் 1998 ஆண்டு எலிசபெத் மகாராணி பாவித்த தேநீர் பைக்கற் அரண்மனையிலிருந்து கடத்தப்பட்டு ஏலத்தில் விற்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது.
இந்த தேநீர் பைக்கற்றை வாங்கியவர் மீண்டும் அதனை விற்பார்.இப்பைக்கற் அவரிடமிருக்கும் அவரின் அடுத்த விற்பனைக்கான மூலப்பொருட்களாகும்.இது உண்மையில் எலிசபெத் மகாராணியார் பாவித்த ரீ பைக்கற்தானே என்ற ஆர்வம் ஆவலாதியுடன் அதுதானோ என்ற சந்தேகம் தொடர்ந்து இருக்கத்தான் போகிறது.
இன்றைய உலகில் எல்லாமே முதலீடாகின்றன.அதில் முக்கியமானது மக்களின் அறிவீனங்களும், அவர்களின முட்டாள்தனமும் வணிக நிறுவனங்களுக்கு முதலீடாகி வருகின்றது என்பதுந்தான். அதில் ஒன்று எலிசபெத் மகாராணி பாவித்த தேநீர் பைக்கற்றுமாகும்.இதை எப்படிக் கடத்தினார்கள் என்பதற்கு,பைக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்ட குப்பைகளிலிருந்து இதனை
எடுத்தார்களா என்று யோசிக்க இடமுண்டு.
இன்னொரு மோசடி வணிகத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது.சீட்டுக் கொம்பனிகள் நடத்துவோர் பலருடைய பணத்தை மோசடி செய்து தலைமறைவாவது போல,மருத்துவ மனைகளில் இருக்கும் நோயளியின் சத்திரசிகிச்சைக்கு உறவினர்கள் யாருமே பணம் கொடுத்து உதவி செய்ய இல்லையென்ற போது பணம் பெற்றுத்தருகிறோம் என தனிநபர்களாகவும் நிறுவன மயப்படுத்த நிலையிலும் சிலர் அனுதாபிகளிடமிருந்து சத்திரசிகிச்சைக்கும் மேலதிகமாகப் பணத்தைப் பெற்று, சத்திரசிகிச்சையின் செலவு போக மிகுதியை தமது பொக்கற்றுக்குள் போடுவதும், இன்னும் சிலரோ பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிடுவதும் நடந்து கொண்டுதானிருக்கின்றது.
பிரபுதேவா நடித்த பொய்க்கால் குதிரை என்ற படத்தில் இத்தகு வணிக
மோசடியும் நடைபெறுகிறது என்பதையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
மக்களின் அறிவீனங்களும்,ஆராய்ந்து பார்க்காத முட்டாள்தனங்களும்,மக்களின் இயலாமையும் இன்று வணிக மயமாக்கப்பட்டு வருகின்றன என்பது உண்மையே.
![]()