சங்கமம்

இன்று மகாபலியை வரவேற்கும் ஓணம் திருநாள்

கேரள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் திருவோணம் பண்டிகை முக்கியமானதாகும். இந்த பண்டிகையை மட்டும் மலையாள மொழி பேசும் மக்கள் மத, சாதி வேறுபாடு இன்றி உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.

மகாபலி சக்கரவர்த்தி

இந்த பண்டிகை உருவானதற்கு மகாபலி சக்கரவர்த்தியின் வரலாறும், புராண கதையும் தான் முக்கியமாக கூறப்படுகிறது. அதாவது மகாபலி சக்கரவர்த்தி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்து, தன்னை நாடி வந்தவர்களுக்கு கேட்டதை எல்லாம் வாரி வழங்கி, பொற்கால ஆட்சி நடத்தினார். முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியாகவும், பொறாமை கொள்ளும் வகையிலும் மகாபலி சக்கரவர்த்தியின் ஆட்சி இருந்தது. இதனால் பொறாமை அடைந்த தேவர்கள் தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் திருமாலிடம் கூறினார்.

வாமன அவதாரம்

இதனால் தேவர்களின் குறையை போக்கவும், மகாபலி சக்கரவர்த்தி புகழ் பல யுகங்களுக்கு நிலைத்திருக்குமாறு செய்யவும் திருமால் முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து திருமால், குள்ளமான வாமன அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். அவர் மகாபலியிடம் 3 அடி நிலத்தை தானமாக கேட்டார். வாமனரை மகாபலி விழுந்து வணங்கி, 3 அடி நிலம் தானே தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் என்றார். உடனே குள்ள வாமனராக இருந்த திருமால் விஸ்வரூபம் எடுத்து உலகளந்த பெருமாளாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக ஓங்கி உயர்ந்து நின்றார். வானத்தை ஒரு அடியாகவும், பூமியை மற்றொரு அடியாகவும் அளந்தார் வாமனர். மூன்றாவதுஅடிக்கு இடம் எங்கே என்று கேட்ட போது, மகாபலி சக்கரவர்த்தி, இதோ எடுத்து கொள்ளுங்கள் என்று தலைகுனிந்து தனது தலையை காண்பித்தார். இதனால் வாமனர் தனது 3-வது அடியை மகாபலியின் தலைமீது வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார்.

திருவோணம்

அதற்கு முன்பாக மகாபலி சக்கரவர்த்தி, வாமனரிடம் ஒரு வரம் வேண்டினார். அதாவது என் நாட்டு மக்களை பிரிந்து செல்வது எனக்கு வருத்தமாக உள்ளது. எனவே ஆண்டு தோறும் ஒரு நாள் தான் ஆட்சி செய்த இந்த தேசத்தையும், மக்களையும் வந்து கண்டு மகிழ வரம் அருள வேண்டும் என்று வேண்டியதாகவும், அதன்படி வாமனரும், வரத்தை அருளியதாகவும் கூறப்படுகிறது. எனவே மகாபலி மன்னர் திருவோண நன்னாளில் தான் ஆண்ட நாட்டுக்கு வருவதாகவும், அவரை வரவேற்கும் விதமாகத்தான் இந்த ஓணப்பண்டிகை கொண்டாடப்படுவதாகவும், ஓணப்பண்டிகையின் வரலாறு கூறுகின்றது.

இந்த பண்டிகையை பணக்காரர் முதல் ஏழை வரை அனைவரும் ெ்காண்டாடுவது வழக்கம். அப்படி ஏழையாக உள்ள ஒருவரிடம் பணம் இ்ல்லை என்றாலும், தங்கள் வீடுகளில் உணவுக்காக சேர்த்து வைத்திருக்கும் கானப்பயறை விற்றாவது ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் “கானம் விற்றேனும் ஓணம் கொண்டாடு” என்று மலையாள பழமொழியும் உள்ளது.

அத்தப்பூ கோலம்

கொல்லம் ஆண்டான மலையாள ஆண்டின் முதல்மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஓணப்பண்டிகை கடந்த 30-ந்தேதி தொடங்கியது. ஓணம் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அத்தப்பூ கோலம். இந்த விழாவின் சிறப்பம்சமே இதுதான்.

விருந்து

திருவோணத்தன்று ஓண சத்யா என அழைக்கப்படும் விருந்து நடைபெறும். இதில் அறுசுவைகளில் 64 வகைகளுடன் ஓண விருந்து தயாரிக்கப்பட்டு, நண்பர்கள் உறவினர்களுக்கு பரிமாறப்படும். ஓணம் பண்டிகையையொட்டி, சிறுவர் முதல் பெரியவர் வரை ஊஞ்சல் ஆடி மகிழ்வார்கள். மேலும் கேரளாவில் படகு போட்டி உள்பட பல்வேறு போட்டிகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.