சங்கதிகள்

தேசியக் கொடியின் மீது உள்ள பற்று, தேசத்தின் குடிகளின் மீது இல்லையென்றாலும்!….சீமான் வாழ்த்து.

தேசியக் கொடியின் மீது உள்ள பற்று , தேசத்தின் குடிகளின் மீது இல்லையென்றாலும் வீட்டுக்கு வீடு கொடியேற்றுங்கள்! தேசப்பற்றைக் காட்டுங்கள்! – சீமான் சுதந்திர தின வாழ்த்து | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அனைவருக்கும் சுதந்திர தின நல்

வாழ்த்துகள்!
வியர்வை சிந்தி,
இரத்தம் சிந்தி,
செக்கிழுத்து,
சிறைபட்டு,
வதைபட்டு,
மிதிபட்டு,
தூக்கில் தொங்கி,
உயிரை விலையாகக் கொடுத்து,
போராடி வெள்ளைக்காரனிடம் வாங்கிய சுதந்திரம்
இன்று இந்தக் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொண்டதே..!

நாட்டைக் கூறுபோட்டு சுதந்திரமாக விற்பதற்கு பெயர்தான் சுதந்திரமா? என்று உங்களுக்குள் ஆறாத சினம் உண்டாகிறதா? உங்களுக்கு என் சுதந்திர தின

வாழ்த்துகள்!
அறிவை வளர்க்கும் கல்வி,
உயிரைக் காக்கும் மருத்துவம்,
உலக உயிர்களின் உயிர் ஆகாரமாக இருக்கின்ற குடிநீர்,
போக்குவரத்து,
சாலை போடுதல் – பராமரித்தல்,
தொடர்வண்டி,
வானூர்தி சேவை,
மின்உற்பத்தி – விநியோகம்,
வங்கி,
காப்பீடு,
என எல்லாமே தனியார்மயம் என்றால் , அரசின் வேலை தான் என்ன?
என்று அடக்க முடியாத ஆத்திரத்தில் கேள்வியெழுப்பத் தோன்றுகிறதா?

உங்களுக்கு என் சுதந்திர தின

வாழ்த்துகள்!
ஐயோ, என் காடுகள் அழிக்கப்படுகிறதே!
என் ஆறுகளில் மணல் அள்ளப்படுகிறதே!
மலைகள் நொறுக்கப்பட்டு மணலாகிறதே!
என் நிலம் பாலைவனமாகிவிடுமே! – என்று
உங்கள் மனம் பதறுகிறதா?
பொழுதெல்லாம் எங்கள் செல்வம்
கொள்ளை கொண்டு போகவோ?
நாங்கள் இங்குச் சாகவோ?
அழுது கொண்டிருப்போமோ?
ஆண்பிள்ளைகள் அல்லமோ?
உயிர் வெல்லமோ!
என்ற பெரும்பாவலன் பாரதியின் பாட்டை உரக்கப் பாடவேண்டும் என்ற உணர்ச்சி உங்களை உசுப்புகிறதா?

உங்களுக்கு என் சுதந்திர தின

வாழ்த்துகள்!
வாழுகின்ற பூமியைக் காப்பாற்றாமல்
வணங்குகின்ற சாமியைக் காப்பாற்ற போராடுகிறார்களே
என்ற கோவம் உங்களுக்கு இருக்கிறதா?

உங்களுக்கு என் சுதந்திர தின

வாழ்த்துகள்
‘மொழி செத்தாலும்,
இனம் செத்தாலும்,
எது செத்தாலும்
எங்களுக்குக் கவலையில்லை,
சாதியும்-மதமும் செத்துவிடக்கூடாது!’
என்று இவர்கள் எண்ணுகிறார்களே
என்ற எரிச்சல் உங்களுக்கு வருகிறதா?

உங்களுக்கு என் சுதந்திர தின நல்

வாழ்த்துகள்!
‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!’ – வள்ளுவர் பாடலாம்,
‘அன்பின் வழியது உயிர்நிலை!’ வள்ளலார் பாடலாம்,
‘எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுங்கள்!’ – நபிகள் சொல்லலாம்,
ஏசு சொல்லலாம்,
பகவான் கிருஷ்ணர் சொல்லலாம்,
‘ஆதலால் காதல் செய்வீர்!’ என்று பாரதி கூடப் பாடலாம்,
ஆனால் எங்களுக்கு அன்பை விடவும்,
பெற்ற பிள்ளைகளை விடவும்
குடிப்பெருமை தான் பெரிது என்று இவர்கள் கொலை செய்கிறார்களே!
இவர்களை என்ன செய்யலாம்.?!
என்று எரிச்சலும், கோவமும்
உங்களுக்கு வருகிறதா?

உங்களுக்கு சுதந்திர தின

வாழ்த்துகள்!

!

எதை உடுத்தவேண்டும்,
எதை உண்ணவேண்டும்,
எந்த மதத்தைப் பின்பற்றவேண்டும்,
என்று யாரோ ஒருவன்
என் சுதந்திரத்தில் தலையிடுகிறானே என்று
வெகுண்டெழுபவரா நீங்கள்?

உங்களுக்கு சுதந்திர தின

வாழ்த்துகள்!
சொந்த நாட்டு மக்களையே
இவன் உயர்ந்தவன் – தாழ்ந்தவன்
என்று பிரித்தாளும் ஆட்சியாளர்களின் மீது வெறுப்பு வருகிறதா?

உங்களுக்கும் என் சுதந்திர தின

வாழ்த்துகள்!
பல மொழிவழி தேசிய இனங்கள் வாழும்
நாடுகளைக் கொண்ட ஒன்றியத்தை
ஒரே நாடு! ஒரே மொழி!
என்று ஒற்றைமயப்படுத்தலை உறுதியாக எதிர்ப்பவரா நீங்கள்?

உங்களுக்கு சுதந்திர தின

வாழ்த்துகள்!
என் நாட்டு மீனவனைச் சுட்டுக்கொல்லும்,
அண்டை நாட்டிற்கு
எதற்காகப் போர்க் கப்பல்களைப் பரிசளிக்கிறீர்கள்
என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா?

உங்களுக்கும் என் சுதந்திர தின

வாழ்த்துகள்!
உப்புக்கு வரி,
ஊறுகாய்க்கு வரி,
அரிசிக்கும் வரி,
பருப்புக்கும் வரி,
பாலுக்கு வரி,
தயிருக்கும் வரி,
உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடையிலிருந்து, படுக்கும் பாய் வரை எல்லாவற்றிற்கும் வரி! வரி! வரி!
சரக்கு மற்றும் சேவை வரி;
சரக்குக்கு மட்டும் இல்லை வரி!
என்ன கொடுமை இது?
நாங்கள் வாழ்வதற்காக வரி கட்டுகிறோமா?
அல்லது வரிகட்டுவதற்காகவே வாழ்கிறோமா?
என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா?

உங்களுக்கு சுதந்திர தின

வாழ்த்துகள்!
வாகனங்கள் வாங்குகிறபோது,
சாலைக்கு என்று வரி கட்டிவிட்ட பிறகு,
அதே சாலையில் பயணிக்க 50 கிலோமீட்டருக்கு ஒருமுறை
எதற்காகச் சுங்கம் கட்ட வேண்டும்
என்கிற கேள்வி உங்களுக்கு எழுகிறதா?

உங்களுக்கு சுதந்திர தின

வாழ்த்துகள்!
இருந்த கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தவர்கள் தேசியவாதிகள் என்றும், அதை
மீட்கவேண்டும் என்று போராடுபவர்கள் பிரிவினைவாதிகள் என்றும் கூறுவதை எப்படி ஏற்பது என்ற எரிச்சல் வருகிறதா?

உங்களுக்கு சுதந்திர தின

வாழ்த்துகள்!
பெண் பிள்ளைகளைப் பள்ளி-கல்லூரிக்கு அனுப்பிவிட்டு ஒவ்வொரு நொடியும் பயமாகவும், பதற்றமாகவும் இருக்க வேண்டியிருக்கிறதே? இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவில்லையா என்று ஏங்குகிறீர்களா?

உங்களுக்கு சுதந்திர தின

வாழ்த்துகள்!
‘நீட்’, ‘எக்சிட்’ என எண்ணற்ற தேர்வுகளை வைத்து,
மாணவர்களின் அறிவை மதிப்பெண்களை வைத்து மதிப்பிடுவது சரியான முறைதானா என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா?

உங்களுக்கு சுதந்திர தின

வாழ்த்துகள்!
தெருவுக்கு ஒரு படிப்பகம் இருக்க வேண்டிய இடத்தில், இரண்டு குடிப்பகங்கள் இருக்கின்றதே அதைக்கண்டு கோவப்படுகிறீர்களா?

உங்களுக்கு சுதந்திர தின

வாழ்த்துகள்!
நாம் நோட்டை வாங்கிக்கொண்டு ஓட்டை விற்கிறோம்!
அவர்கள் அந்த ஓட்டை வாங்கிக்கொண்டு நாட்டை விற்கிறார்கள்!
மாண்புமிக்க சனநாயகத்தை, கேடுகெட்ட பணநாயகமாக மாற்றிவிட்டார்களே!
மதிப்புமிக்க மக்களாட்சியை, தங்களின் மக்களாட்சியாக ஆக்கிவிட்டார்களே!
என்ற கோவம் உங்களுக்கு வருகிறதா?

உங்களுக்கு சுதந்திர தின

வாழ்த்துகள்!
எப்படிப் பார்த்தாலும்,
இறுதியாக…
கொடியேற்றுங்கள்!
வீட்டுக்கு வீடு கொடியேற்றுங்கள்!
வீடு இல்லை என்றால் என்ன?
வீதியில் ஏற்றுங்கள்!
தேசப்பற்றைக் காட்டுங்கள்!
தேசியக் கொடியின் மீது உள்ள பற்று ,
தேசத்தின் குடிகளின் மீது இல்லையென்றாலும்
வீட்டுக்கு வீடு கொடியேற்றுங்கள்!
தேசப்பற்றைக் காட்டுங்கள்!

உங்களுக்கு என் சுதந்திர தின

வாழ்த்துகள்!
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?
சர்வேசா!
இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்;
கருகத் திருவுளமோ!
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.