சங்கதிகள்

மனிதர்கள் இறப்பது ஏன்?

சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி.

கடலிலும் ஆறுகளிலும் உலவும் ஹைட்ரா வகை உயிரினங்களை இதுவரை நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம். பவளப்பாறை, கடல்தாமரை, ஜெல்லிமீன் ஆகியவற்றின் நன்னீர் வடிவமாகிய ஹைட்ராக்களில் பார்த்து ரசிக்க பெரிதாக ஒன்றுமில்லைதான். ஆனால், இந்த உயிரியின் வியக்க வைக்கும் பண்பு ஒன்று உயிரியலாளர்களை இந்தப் பக்கம் திரும்ப வைத்துள்ளது. அதுதான் மீட்டுருவாக்கம். இதனை எத்தனை துண்டுகளாக வெட்டினாலும், மீண்டும் முழு உடல் வளர்ந்து ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரியாக வாழத் தொடங்கிவிடும்.

அப்படியானால், இறக்காமல் வாழ்வதற்கான சாத்தியம் என்பது இயற்கையிலேயே இருக்கிறதா என்று உயிரியலாளர்களை எண்ண வைத்திருக்கிறது இந்த பண்பு. எனில் மரணம் தவிர்க்க முடிந்ததுதானா? ஏன் இந்த உயிரி மட்டும் மரணிப்பதில்லை?

(இந்தக் கட்டுரையில் இயற்கையான தேர்வு முறை என்று அடிக்கடி சொல்லப்படும். உடலின் செல்கள், ஆற்றல் ஆகியவை அடங்கிய வளத்தை, தானாகவே உடல் ஆரோக்கியத்துக்காக உடலே எடுத்துக் கொள்ளும் முறைதான் இயற்கை தேர்வு முறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி கட்டுரைக்குள் போகலாம்)

வயது மூப்பு என்பது இனப்பெருக்கத்துக்கும் செல் பராமரிப்புக்கும் இடையிலான ஒரு சமாதான வர்த்தகம் என்று 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சொல்லப்பட்டது. ஒவ்வொரு உயிரியின் உடலிலும் உள்ள வளங்களை (செல்கள்) அவை, ஆரோக்கியமாக வைத்திருக்க பயன்படுத்துகின்றன. குழந்தைப்பருவம் மற்றும் பதின்பருவத்தின் போது, உடல் தசைகளை வலுவாக வைத்திருக்க இந்த வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பாலியல் முதிர்ச்சி வந்ததும் முன்னுரிமை இனப்பெருக்கத்துக்கு போய்விடுகிறது. ஏனெனில், பெரும்பாலான உயிரிகளில் குறைந்தளவே வளங்கள் உள்ளன. அவை இனப்பெருக்கத்துக்காக பயன்படுத்தப்படுவதால், உடலின் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்தப்படுவது குறையும்.

ஆனால், உயிர்கள் ஏன் இறக்கின்றன என்பதில் தற்போதைய புரிதல் கவனிக்கத்தக்கது. பாலியல் முதிர்ச்சி வந்ததும், இயற்கையாகவே வளங்களை பயன்படுத்தும் உடலின் பண்பு தளர்வடைந்து, வயதாகத் தொடங்குவது இறப்புக்கு வழிவகுக்கிறது என்கிறார் பிரிட்டன் கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழக உயிரியல் மற்றும் உயிரியக்கவியல் பேராசியர் அலெக்சி மெக்லகோவ்.

நம் வாழ்நாளில் நமது மரபணுக்கள் ஏராளமான திரிபுகளைச் சேர்த்துக் கொள்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை தீங்கு விளைவிப்பவையாகவோ அல்லது ஏதும் செய்யாதவையாகவோ இருக்கலாம். வெகு சில மட்டுமே பயனுள்ளவை.

பாலியல் முதிர்ச்சிக்கு முன்பாக, “இனப்பெருக்கத்துக்கான திறனை குறைக்கும் அல்லது இனப்பெருக்கத்துக்கு முன்பாக அந்த உயிரியை கொல்லும் எந்த ஒரு மரபணு திரிபும் உடலால் தேர்ந்தெடுக்கப்படும்.” ஆனால், பாலியல் முதிர்ச்சியை ஒரு உயிரினம் அடைந்த பிறகு, தன் மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியும். இதன்பிறகு, இயற்கையாக தேர்வு செய்யப்படும் முறை பலவீனமடைகிறது.

உதாரணத்துக்கு, முட்டையிடும் சால்மன் மீன்களை எடுத்துக் கொண்டால், அவை இளம்பருவத்துக்கும் இனப்பெருக்கத்துக்கும் நன்றாக தயாராகின்றன. கடலில் பெரும்போராட்டத்தை வென்று முட்டையிட்ட பிறகு அவற்றின் சந்ததிகளும் இதே போன்று போராடி முட்டையிட வேண்டியிருக்கும். அதன்பின்னர் அவை இறந்துவிடுகின்றன. ஒருவேளை பிழைத்திருந்தால் (வாய்ப்பு குறைவு) இன்னொரு சுற்று முட்டையிடுமானால், அவை முந்தைய சந்ததி அளவுக்கு சிறப்பானதாக இருக்காது. காரணம், ஏற்கனவே ஒரு தலைமுறைக்கு (திரிபுகளற்ற மரபணுவை) அது வழங்கிவிட்டது.
Brain

ஆனால், எல்லா உயிரினங்களும் அப்படி இல்லை. சில உயிரினங்கள் பலமுறை இனப்பெருக்கம் செய்கின்றன. அப்போது ஒவ்வொரு முறையும் டி.என்.ஏ.வில் மாற்றம் ஏற்படுகிறது. அவை சில சமயங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் விளைவுகளற்றும் இருக்கலாம். நம் உடலே அதை சரி செய்து கொள்ள முடியும். ஆனால், நாள் செல்ல செல்ல வயது மூப்பும் இணைந்து கொண்டு, இயற்கையாகவே செல்களை பயன்படுத்தும் முறையை வெகுவாக பலவீனப்படுத்தி விடுகிறது.

வயதாவதும் இறப்பதும் இரண்டு வழிகளில் நடைபெறுகின்றன. ஒன்று இயற்கையாகவே செல்களை தேர்வு செய்வது குறைந்துவிடுவதால் உடலில் உருவாகும் எதிர்மறை திரிபுகளின் தொகுப்பு; இன்னொன்று இனப்பெருக்கத்துக்கு பெருமளவு உதவவல்ல ஆனால், நீண்ட ஆயுட்காலத்துக்கு எதிரான தேர்வு முறை.

வயதாவதைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் சில உயிரினங்கள் மிகவும் வெற்றிகரமாக இருக்கின்றன. அது, “எதிர்மறை முதுமை” என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் போதிய அளவுக்கு இல்லை என்கிறார் பேராசிரியர் மெக்லகாவ்.

ஏதோ காரணங்களுக்காக குறைவாக இனப்பெருக்கம் செய்யும் அல்லது இளமை முதலே இனப்பெருக்கம் செய்ய முடியாத சுற்றுச்சூழல் இருந்தால், அந்த உயிர்களில் செல்களை தேர்வு செய்வதற்கான முறையில் மாற்றம் நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கிறார் பேராசிரியர் மெக்லகாவ்.

எப்படியாயினும், முதுமையடைவது என்பதில் கலவி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த ரூத் மேஸ் மற்றும் மேகன் ஆர்னாட் ஆகியோரின் ஆய்வின்படி, தொடர்ச்சியாக கலவியில் ஈடுபடும் பெண்களுக்கு மெனோப்பாஸ் தாமதமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்தரிக்க வாய்ப்பில்லாத சமயங்களில், ஆற்றலை, முதிர்ந்த முட்டைகளை வெளியேற்ற பயன்படுத்துவதற்கு பதில், அந்த ஆற்றலை உடலின் மற்ற பாகங்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிறது இந்த ஆய்வு. அதாவது, ஆற்றலை பயன்படுத்திக் கொள்வதில் பரஸ்பர சமாதானம் இங்கு ஏற்படுகிறது என்பதற்கான உதாரணமாக இந்த செயல்முறை உள்ளது.

ஆனால், மீதமுள்ள விலங்குலகில், அதிகமான இனப்பெருக்க திறன் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு வேகமாக வயதாவதாகத் தெரிகிறது. வௌவால்கள் அதிகமான முறை இனப்பெருக்கம் செய்கின்றன ஆனால் குறைந்த காலமே வாழ்கின்றன. “இளமைக்காலத்தில் அதிகமுறை இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்கள் வாழ்வின் பிற்பகுதியில் சிறப்பாக இல்லை” என்கிறார் பேராசிரியர் மெக்ஹக்.

சில உயிரினங்களில் பாலினத்தைப் பொறுத்தும் ஆயுட்காலம் வேறுபடுகிறது. குறிப்பாக எறும்புகள், தேனீக்கள் ஆகியவற்றில் ராணி எறும்பு / ராணித் தேனீ அதிகமான இனப்பெருக்க வல்லமையும் அதிகமான ஆயுட்காலமும் கொண்டுள்ளது. இங்கு மட்டும் ஏன் கலவிக்கும் முதுமைக்குமான தொடர்பு வேலை செய்யவில்லை? காரணம், இரண்டுக்குமான வாழ்வியல் முறைகளின் வேறுபாடுதான். பெரும்பாலும் பிரச்னைகளை காவல் எறும்புகளோ/தேனீக்களோ கையாளும் சூழலில் அவை வாழ்கின்றன. அதுபோக, மூப்பு அடைவதற்கான சூத்திரங்கள் இங்கு எல்லாவற்றுக்கும் சமமாக பொருந்துவதில்லை.
சரி, மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயிப்பதில் இனப்பெருக்கத்துக்கு இப்படி ஒரு முக்கியத்துவம் உண்டு என்றால், குழந்தைகள் பெறுவதை நிறுத்திய பிறகும் ஏன் மனிதர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்?

‘பாட்டி கருதுகோள்’ சொல்வதன்படி, வயது மூத்த நம் உறவினர்கள் உயிரோடு இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில், இனப்பெருக்கம் என்பது விலைமதிப்புமிக்க கடினமான செயலாகிவிட்டது. ஒரு பாட்டி தன் பேரக்குழந்தையுடன் நேரம் செலவிடுவதன் மூலம் அந்தக் குழந்தைக்குள் இருக்கும் தன் சொந்த மரபணுவை தூண்டி விட முடியும். இயற்கையான தேர்வு முறை என்ற அளவில், இது அவசியமாகிறது.

பாட்டிகள் இருக்கும் குடும்பங்களில் அதிகமான இனப்பெருக்கத்திறன் காணப்படுகிறது. பாட்டிகளின் உதவி இருப்பதால் அடுத்த குழந்தை குறித்து அந்தத் தாயால் சிந்திக்க முடிவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் கவுன்ரிடஸ்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.