அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி!
அவுஸ்திரேலியாவில் கடந்த 34 வருடங்களாக இயங்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப் பெற்றுவரும் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான முதல் ஆறுமாதங்களுக்குரிய நிதிக்கொடுப்பனவு வழங்கப்பட்டுவிட்டது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு , அம்பாறை, திருகோணமலை, நுவரேலியா மற்றும் மேற்கு இலங்கையில் கம்பகா மாவட்டம் ஆகியவற்றில் வறுமைக்கோட்டில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு இந்நிதியம் உதவி வருகின்றது.
முன்னர் நீடித்த போரினால் தந்தையை அல்லது குடும்பத்தின் மூல உழைப்பாளியை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம், கடந்த சில வருடங்களாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களையும் தேர்ந்தெடுத்து உதவி வருகின்றது.
கடந்த காலங்களில் கொவிட் பெருந்தொற்றினை கவனத்தில்கொண்டு இம்மாணவர்களின் குடும்பங்களுக்கும் உலர் உணவுப்பொதிகளை வழங்கிய கல்வி நிதியம், இந்த ஆண்டு தொடக்கம் ( 2022 ) இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கவனத்தில்கொண்டு மாணவரின் நிதிக்கொடுப்பனவையும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் பிரகாரம் மாணவர்கள் மாதம் ஒன்றுக்கு இலங்கை நாணயத்தில் மூவாயிரம் ரூபா பெற்று வருகின்றனர்.
அவர்களின் கல்வி சார்ந்த தேவைகளுக்காக உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தன்னார்வத் தொண்டினை நடத்திவருகின்றது.
நேற்றைய தினம் 02 ஆம் திகதி கம்பகா மாவட்டத்தில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் அதிபர் திரு. புவநேஸ்வரராஜா தலைமையில் நடந்த நிகழ்வில் மாணவர்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான முதல் கட்ட நிதியுதவி வழங்கப்பட்டது.
மாணவர்களின் தாய்மாரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மாணவர் தொடர்பாளரான ஆசிரியை செல்வி வி. லோஜினி இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
—00—