மது வேண்டாம்; கஞ்சா அடிங்க – பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
மதுபானங்கள் பல்வேறு குற்றச் சம்பவங்களுக்கு காரணமாக இருப்பதால் அதனை தவிர்த்துவிட்டு கஞ்சாவை பயன்படுத்துங்கள்” என்று பாஜக எம்எல்ஏ பேசியிருப்பது சத்தீஸ்கரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மஸ்தூரி தொகுதி எம்எல்ஏவான கிருஷ்ணமூர்த்தி பந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் சத்தீஸ்கரில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, பாலியல் வன்புனர்வு ஆகிய குற்றங்கள் பெருகி வருகின்றன. இதுபோன்ற குற்றங்கள் நடைபெற என்ன காரணம்? மதுபானங்கள் அருந்துவதே இதுபோன்ற குற்றங்களை செய்ய மனிதர்களை தூண்டுகிறது. அதே சமயத்தில், கஞ்சா, பாங்கு போன்றவற்றை புகைக்கும் போது இத்தகைய எண்ணம் யாருக்கும் ஏற்படுவதில்லை.
எனவே, சத்தீஸ்கரில் மதுபானங்களை ஒழித்துவிட்டு கஞ்சா, பாங்கு பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். போதை தேவைப்படுவோருக்கு கஞ்சாவை விநியோகிக்க வேண்டும். இதுகுறித்து சட்டமன்றத்திலும் நான் பேசியிருக்கிறேன். மது ஒழிப்பு நடவடிக்கைக்காக மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, கஞ்சாவை விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தியின் இந்த பேச்சு சத்தீஸ்கரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், “கஞ்சா உபயோகிப்பது குற்றம் என சட்டம் கூறுகிறது. அப்படியிருக்கும் போது, ஒரு மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் எப்படி இவ்வாறு பேசலாம்? இந்தியாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டுமெனில், மத்திய பாஜக அரசுக்கு அவர் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுக்கட்டும்” என்றார்.