இந்திய கிரிக்கெட் அணி நல்ல ‘டீம்’, ஆனா பாகிஸ்தான் ‘சூப்பர்’ – சொல்வது யார் தெரியுமா?
“இந்திய கிரிக்கெட் அணியை காட்டிலும் பாகிஸ்தான் அணி தான் தற்போது சிறப்பாக உள்ளது” என்று முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரான ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளார்.
இதுகுறித்து ‘கிரிக்கெட் பாகிஸ்தான்’ தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்திய கிரிக்கெட் அணி தொடர்பாக என்னிடம் யாராவது கேட்டால், நிச்சயம் அது ஒரு நல்ல அணி என்று தான் கூறுவேன். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், பாகிஸ்தான் அணி தற்போது இருக்கும் ஃபார்முடன், இந்திய அணியை மட்டுமல்ல வேறு எந்த அணியையும் ஒப்பிட முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஷாஹின் ஷா அஃப்ரிடி, பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகிய நிகரற்ற வீரர்கள் உள்ளனர். இவர்களை மிகச்சிறந்த வீரர்களாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலே (ஐசிசி) அங்கீகரித்துள்ளது.
எதிர்வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நிச்சயமாக பலத்த போட்டிகள் இருக்கும். ஆனால் பிரதான போட்டி என்பது இந்தியா – பாகிஸ்தான் இடையேதான் இருக்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை தோற்கடித்ததால் பாகிஸ்தான் அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. எனவே, ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு ரஷீத் லத்தீஃப் கூறினார்.