அதிசயம் ஆனால் உண்மை..நாம் தூங்கும்போது நம் முகத்தில் இனப்பெருக்கம் செய்யும் பூச்சிகள்
எட்டு கால்கள் கொண்ட ‘கண்ணுக்கு தெரியாத’ உயிரினங்கள், நீங்கள் தூங்கும் போது உங்கள் முகத்தில் இனப்பெருக்கம் கொள்கின்றன என்று சொன்னால் நம்பமுடிகிறதா? சற்று ஆச்சரியமாகத் தானே உள்ளது. ஆனால் இதனை ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
பிரிட்டனின் பெர்க்ஷயரில் உள்ள ரீடிங் பல்கலைக்கழகம் மற்றும் பிரிடன் வேல்ஸில் உள்ள பேங்கூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், மனித முகத்தில் கண்ணுக்கு தெரியாத பூச்சி இனங்கள் வாழ்வதை கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலந்திகளுடன் தொடர்புடைய பூச்சிகள், நாம் தூங்கும் போது, நம் தோலில் சுரக்கும் மெலடோனின் திரவத்தைபயன்படுத்தி தங்கள் இனப்பெருக்க விருத்திக்கு பயன்படுத்துகின்றன.
இந்த பூச்சிகளை நுண்ணோக்கின் கீழ், அதாவது மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே பார்க்க முடியும். இந்த கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் இனப்பெருக்கம் கொள்ளும்போது, நம் முகத்தில் உள்ள முடிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். நாம் பிறக்கும்போதே இவை நம் உடலில் இருக்கின்றன. எனினும், ஒரு குழந்தை வளர வளர இதன் எண்ணிக்கை அதன் உடலில் அதிகரித்து கொண்டே இருக்கும்.
அந்த பூச்சிகளின் முழுமையான டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் இதனை ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். மனித உடலில் முகம் மற்றும் தோலில் உள்ள சிறு கண்ணுக்கு தெரியாத சிறு துளைகளுக்குள் இவை உயிர் வாழ்கின்றன. 48,000 க்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள் உள்ளன, அவற்றில் இரண்டு வகை இணங்கள் மட்டுமே நம் முகங்களில் வாழ்கின்றன. இந்த பூச்சிகள் முகப்பரு மற்றும் வடுக்கள் ஏற்படாமல், முகத்தில் உள்ள துளைகள் அடைக்கப்படாமல் பாதுகாக்கின்றன.
இந்த பூச்சி இனங்களால், மெலடோனின் எனப்படும் ‘சிறிய வகை முதுகெலும்பில்லாத உயிரினங்களை இரவில் செயல்பட வைக்கும் பொருளை’ உற்பத்தி செய்ய முடியாது. ஆகவே அவை மனித முகத்தில் உள்ள தோலின் மேற்பரப்புக்கு அருகில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சேர்ந்து வாழும்.
அதன்பின்னர், இரவு வேளையில் மனித தோலில் சுரக்கும் மெலடோனினை இவை பயன்படுத்தி இனப்பெருக்கம் கொள்கின்றன. அவற்றின் உடலில் உள்ள தனித்துவமான மரபணு, இத்தகைய விசித்திரமான இனச்சேர்க்கை பழக்கத்திற்கு உதவுகிறது. ஆண் பூச்சிகளுக்கு அவற்றின் உடலில் உள்ள ஆண்குறி, உடலின் முன்பகுதியில் இருந்து மேல்நோக்கி நீண்டுள்ளது.
பெண் பூச்சிக்கு கீழே ஆண் பூச்சிகள் இருந்துகொள்ளும், பின் அவை இரண்டும் மனித முடியில் ஒட்டிக் கொண்டிருக்கும்போது அவை இணைகின்றன. இதற்கு முன்னர் இதுபோன்ற இனப்பெருக்க முறை, சில வகை பேக்டீரியாக்களில் மட்டுமே காணப்பட்டுள்ளன. ஆனால் அதுவும், விலங்குகளின் உடலில் இனப்பெருக்கம் செய்பவை அல்ல. இந்த ஆய்வு கட்டுரை, ‘மூலக்கூறு உயிரியல் மற்றும் பரிணாமம்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இயற்கையின் அதிசயங்களில் இதுவும் ஒன்று!