திருப்பதி அருகே ஏழுமலையான் தாயார் வகுல அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி, பேரூர் மலையில் ஏழுமலையான் தாயார் வகுல அம்மனுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதியதாக கோவில் கட்டப்பட்டுள்ளது. 20 கிலோ எடையுள்ள தங்கத்தால் 5 விமான கோபுரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் மலைமீது இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
இன்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 17ந் தேதி அங்குரார்ப்பணம் மற்றும் யாக சாலைகள் அமைத்து வேத பண்டிதர்களை கொண்டு புண்ணிய கால பூஜைகள் நடந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பூஜையும்.விக்கிரகம் பிரதிஷ்டை நடந்தது. இதையடுத்து யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த ஓம குண்டங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விமான கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜா, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி மற்றும் அமைச்சர்கள், தேவஸ்தான நிர்வாக அலுவலர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.