முதல் பயணம் துவங்கும் முன்பே காயலான் கடைக்கு சென்ற பிரம்மாண்ட சொகுசு கப்பல்; காரணம்?
குளோபல் ட்ரீம் 2 சொகுசு கப்பலை வாகுவதற்கு யாரும் முன்வராததால் இதிலுள்ள பாகங்கள் தனித்தனியாக விற்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல சொகுசு கப்பலான குளோபல் ட்ரீம் கப்பலை நிர்வகிக்கும் MV Werften நிறுவனம், குளோபல் ட்ரீம் 2 எனப்படும் சொகுசு கப்பலை உருவாக்கி வந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வந்த இந்த பிரம்மாண்டமான கப்பல், தற்போது ஜெர்மனி பால்டிக் கடற்கரையில் பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் குளோபல் ட்ரீம் 2 கப்பலை வாங்க யாரும் முன்வராததால் கப்பலின் பாகங்களை விற்கும் நிலைக்கு MV Werften நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்ட இந்நிறுவனம், ஏற்கனவே திவால் அறிக்கையைப் பெற விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குளோபல் ட்ரீம் 2 கப்பலின் கட்டுமானப் பணிகள் கடந்த 2019இல் தொடங்கியது. பாதி கட்டிமுடிக்கப்பட்ட இந்த கப்பலில் இருந்து முக்கியமான விலையுயர்ந்த பொருட்கள் தனித்தனியாக விற்பனை செய்யப்பட்ட பின்னர், இறுதியாக கப்பல் இஞ்சின் ஏலம் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியின் விஸ்மர் கப்பல் கட்டும் தளத்தில் தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் இந்த கப்பல் 2024ஆம் ஆண்டுக்குள் முழுமையாக அங்கிருந்து அகற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குளோபல் ட்ரீம் 2 கப்பல், தனது முதல் பயணத்தை துவங்குவதற்கு முன்னரே, அதன் பாகங்கள் விற்கப்பட இருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.