Featureகட்டுரைகள்

யார் எழுத்தாளன்?….. கிறுக்கல் ஒன்று!…. சங்கர சுப்பிரமணியன்.

ஏதோ மனதில் பட்டவற்றை எழுதிவரும் நான் எழுத்தாளன் என்றால் யார் என்று எண்ணினேன். எப்போதும் எதையாவது எழுதிக்கொண்டே இருப்பவன் எழுத்தாளானா? அல்லது ஏதாவது எப்போதாவது எழுதுபவன் எழுத்தாளனா? நாலுபேருக்கு நம்மை தெரியவேண்டும் என்று எழுதுபவன் எழுத்தாளனா அல்லது நாலுபேருக்கு நம் கருத்து தெரிந்தால் போதும் என்று எழுதுபவன் எழுத்தாளனா? என்று என்னென்னவோ எண்ணங்கள் மனதில் வந்துவந்து போகும்.ஒரு நண்பர் இவ்வளவு எழுதும் நீங்கள் நூல் வெளியிடலாமே? அங்கீகாரம் கிடைக்கும் அல்லவா? என்றார். ஒரு நூலாவது எழுதுங்கள் அங்கீகாரம் கிடைக்கும் என்றார். நான் அவரிடம் கேட்டேன் நூல் வெளியிட்டால்தான் அங்கீகாரம் கிடைக்குமா? அப்படியென்றால் அங்கீகாரம் கிடைக்காவிட்டால் நான் எழுத்தாளன் இல்லையா என்று கேட்டதும் நாடியைத் தடவியபடி மோட்டுவளையைப் பார்த்தவர் திரும்ப முகத்தை கீழிறக்கி என்னை குழப்பத்துடன் பார்த்தார்.பானை பிடித்தவள் பாக்கியசாலி என்ற ஒரு பழைய தமிழ்த் திரைப்படம் வந்தது.சிந்தித்துப் பார்த்தால் பானை பிடித்தவர்களெல்லாம் பாக்கியசாலிகளா என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? அதேபோல்தான் பேனா பிடித்தவர்களெல்லாம் எழுத்தாளர்களா என்ற எண்ணமும் எனக்கு ஏற்படுவதுண்டு. அப்படி பேனா பிடித்தவர்களெல்லாம் எழுத்தாளர்களா? என்று நான் அடிக்கடி சிந்திப்பதும் உண்டு.ஏன் இப்படியான விசித்திரமான எண்ணம்? காரணம் கரண்டி பிடிப்பவர்களை எல்லாம் சமையல்காரர் என்று சொல்லிவிட முடியுமா?ஒரு விருந்தில் நண்பர் ஒருவர் அவரது நண்பரிடம் இன்னொரு நண்பரை அறிமுகப்படுத்தினார். இவர்தான் வைகவண்ட் ஹோட்டலின் செப் என்றார். அங்கு வந்திருந்த மற்ற ஆண்களுக்கெல்லாம் சமைக்கத் தெரியாதா என்ன? சமைக்கத் தெரிந்திருந்தாலும் அவர்களை செப் என்று சொல்லிவிட முடியாது. காரணம் அவர்கள் அத்தொழிலுக்கு படித்திருக்க மாட்டார்கள். ஆனால் எழுத்தாளன் அப்படியல்ல.எழுத்தாளனுக்கென்று படிப்பு இருக்கவா செய்கிறது? எழுதப்படிக்கத் தெரிந்தால் மட்டும் போதுமல்லவா? பள்ளி இறுதிப் படிப்பை முடிக்காதவர்கள்கூட பெரிய எழுத்தாளர்கள்களாக இருந்திருக்கிறார்களே. இந்த நேரத்தில் எனக்கு ஒன்று ஞாபகத்தில் வருகிறது. இதற்கு முன் இதை நான் எப்போதாவது என் படைப்புக்களில் தெரியப்படுத்தி இருக்கலாம். இருப்பினும் இங்கு இன்னொரு முறை கூறினால் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் உங்களிடம் பகிர்கிறேன்.ஒருமுறை இந்தியாவிலுள்ள இந்தியன் தொலைபேசித் தொழிற்சாலையில் பெங்களூரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது நடந்த நிகழ்வு இது. நான் பணியாற்றிய பிரிவில் ஒரு திட்டம் வெற்றிகரமாக நடந்து பெருமளவில் தொழிலகத்துக்கு வருவாயை ஈட்டித் தந்தது. இதனால் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்ற அந்நிறுவனத்தின் இயக்குனர் அத்திட்டத்தில் பங்கேற்றருந்த பொறியாளர்கள் அனைவரையும் கௌரவப்படுத்த எண்ணினார். அதனால் இத்திட்டத்தில் எத்தனை பொறியாளர்கள் பங்கேற்றனர் என்று அப்பிரிவின் மேலாளரைக் கேட்டார்.அதற்கு மேலாளர் இயக்குனரைப் பார்த்து நீங்கள் எந்தப் பொறியாளர்களைப் பற்றி கேட்கிறீர்கள் என்று கேட்டார். கல்லூரியில் இருந்து பொறியாளராக வெளிவந்து இங்கு பணிபுரியும் பொறியாளர்களா  அல்லது இத்தொழிற்சாலையின்  அனுபவத்தால் வந்த பொறியாளர்களா என்றார். அதற்கு இயக்குனர், எல்லா பொறியாளர்களின் பங்களிப்பும் இருப்பதால் அனைவரும்தான் என்றார். ஆனால் எழுத்தாளர்களைப் பொருத்தமட்டில் எழுத்து அனுபவம் மட்டுமே ஒருவனை எழுதத் தூண்டுகிறது. அதன் பின் அவன் எழுத்தே அவனை எழுத்தாளனா இல்லையா என்பதை அடயாளங் காட்டுகிறது.அடுத்ததாக ஒரு சந்தேகமும் உடன் சேர்ந்தது. விருதுகள் வாங்கினால்தான் எழுத்தாளரா? அப்படியும் சொல்லிவிடமுடியாது. விருதுபெறாத எத்தனையோ எழுத்தாளர்களும் உண்டு. விருது பெறாத தலைசிறந்த இசையமைப்பாளர்கள் இல்லையா? நடிகர்கள் இல்லையா? இப்போதெல்லாம் விருதுகளும் டாக்டர் பட்டம்போல மதிப்பிழந்து வருகின்றன. மக்கள் மனதில் நிறைந்திருப்பதுதான் விருது.இந்த விருதைப்பற்றியும் சொல்லிவிடுகிறேன். சில தேசிய இனங்களில் பலகோடி மக்கள் இருப்பார்கள். சில தேசிய இனங்களில் பல ஆயிரம் மக்களே இருப்பர். இந்த பலகோடி மக்களில் எழுத்தாளர் ஒருவர் பெறும் விருதும் பல ஆயிரம் மக்களில் எழுத்தாளர் ஒருவர் பெறும் விருதும் ஒன்றே என்றாலும் வேறுபாடு உள்ளதல்லவா? விருதும் இடம் பொருள் ஏவலைப் பொருத்து மாறுபடுகிறது.ஆண்டிப்பட்டி அரசுபள்ளியில் நூறுமீட்டர் ஓட்டத்தில் பரிசுபெற்றவருக்கும் அகில உலக விளையாட்டுப் போட்டியில் நூறுமீட்டர் ஓட்டத்தில் பரிசு பெற்றவருக்கும் வேறுபாடுள்ளதல்லவா? ஆதலால் இந்த விருதுகள் சில சமயங்களில் இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரி இருப்பதும் உண்டு. படிப்பு என்பதே இல்லாத ஒரு சிற்றூரில் சிறிது படித்தவனும் மெத்தபடித்தவன் ஆவதைப்போலத்தான் இந்த விருதுகளும் நிறம் மாறுவதுண்டு.நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ உருக்கமாக ஒரு கடிதத்தை கதை போல எழுதினாலே அவனும் எழுத்தாளன்தான். ஒருவன் எழுதுவதை சிலர் படித்துவிட்டாலே அவனை எழுத்தாளன் என்று சொல்லலாம் என்ற வரையறை வைத்தால் கடிதம் எழுதுபவனும் எழுத்தாளன்தான். ஏனென்றால் அக்கடிதத்தையும் உறவினர்கள் நண்பர்கள் என்று சிலர் படிப்பார்கள்.எனக்கு தெரிந்தவர் ஒருவர் முகநூலில்ஒரு கட்டுரையை வெளியிட்டார். அவருக்கு முகநூல் நண்பர்கள் ஏராளம். அத்தனைபேரும் அக்கட்டுரையை வாசித்துள்ளார்கள். இன்னொருவருக்கு முகநால் நண்பர்கள் அவ்வளவாக கிடையாது. அவரும் ஒரு கதையை வெளியிட்டார். பார்வையாளர்கள் குறைவுதான். கூவிக்கூவி விற்பதற்கும் கூவாமல் விற்பதற்கும் வேறுபாடு உள்ளதல்லவா? ஒவ்வொருவர் ஒவ்வொருவிதம். பலாப்பழத்திற்கு ஈயைப்பிடித்து விடவேண்டாம் என்றாலும் ஈக்களே இல்லாத இடத்தில் எப்படி ஈக்கள் வரும்.(கிறுக்கப்படும்)-சங்கர சுப்பிரமணியன்.

Loading