இலங்கை வரலாற்றில் இடம்பெறும் மேமாதம் நேற்றைய செய்தி நாளைய வரலாறு!…. முருகபூபதி.

நனவிடை தோய்தற் குறிப்புகள்!… முருகபூபதி.

முற்காலத்தில் பனையோலை ஏட்டிலிருந்து ஆரம்பத்த ஊடகத்துறையானது இந்த நூற்றாண்டில் எண்ணிமத்திற்கு ( Digital ) பரிமாணம் அடைந்துவிட்டது.
அதனால், முன்னர்போன்று செய்திகளுக்காக வாசகர்கள் காத்திருக்கவேண்டியதில்லை. உடனுக்குடன் தம்வசம் வைத்திருக்கும் கைத்தொலைபேசியிலேயே பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ள முடியும்.
நான் வீரகேசரியில் பணியாற்றிய ( 1977 – 1987 ) காலப்பகுதியில் இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களினால் நடத்தப்பட்ட ஆங்கில சிங்கள ஏடுகள் ஏதோ ஒருவகையில் இனவாதத்தை கக்கிக்கொண்டிருந்தன. சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதுமே ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்களின் பிரதான கடமை. சமூகம், நாட்டு நடப்புகளை ஊடகங்களின் ஊடாகத்தான் தெரிந்துகொண்டு பேசத்தொடங்கும்.
அதனால் உண்மைச்செய்திகளை வழங்கவேண்டியது ஊடக தர்மம். பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்க குணாம்சம் அவர்கள் தரப்பின் ஊடகங்களிலும் முன்னர் வெளிப்பட்டது. முக்கியமாக கேலிச்சித்திரங்கள் அந்த குணாம்சத்தை சித்திரித்தன.
யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலய முன்றலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் இலங்கையில் நீறுபூத்த நெருப்பாக இருந்த இனப்பிரச்சினையும் சூடுபிடிக்கத்தொடங்கியது. தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகி சித்திரவதைகளை அனுபவிக்கத்தொடங்கியதும், விடுதலை இயக்கங்களும் உருவாகி தமிழ் இளைஞர்கள் இணைந்தனர்.
ஆயினும் அரசபடையினரின் தேடுதல் வேட்டையில் சிக்கியவர்கள் அப்பாவித்தமிழ் மக்களே. ஆனால், அரசின் தகவல் திணைக்களம்
“பயங்கரவாதிகள் சிக்கினர்” என்ற செய்தியையே வெளியிட்டுவந்தது.
இயக்கங்கள் வைக்கும் கண்ணிவெடிகளில் சிக்கும் இராணுவத்தினர் கொல்லப்படும்போது, அதற்குப்பதிலடியாக தமிழ்மக்கள் மீதே அரச பயங்கரவாதம் ஏவப்பட்டது. இந்த சித்து விளையாட்டுக்கு மத்தியில் மக்களுக்கு உண்மைச்செய்திகளை வழங்கவேண்டிய தார்மீகப்பொறுப்பு ஊடகங்களுக்கு இருந்தது.
உதாரணமாக ஒரு தாக்குதல் சம்பவத்தில் அப்பாவிப்பொதுமக்கள் ஆயதப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டால், பொத்தாம் பொதுவாக தமிழ்ப்பயங்கரவாதிகள்தான் கொல்லப்பட்டனர் என்று அரச தகவல் திணைக்களமும், அரசு சார்பு ஊடகங்களும் செய்திகளை வெளியிடும்.
ஆனால், அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் யார்?, என்ன தொழில் செய்கிறார்கள்?, அவர்களின் வயது என்ன? பெயர் என்ன?, எத்தனைபிள்ளைகளின் தந்தை? முதலான சகல விபரங்களையும் துரிதமாகச்சேகரித்து, அந்தச்சம்பவத்தின் பின்னணியிலிருந்த உண்மைத்தன்மையையும் மக்களுக்கு தெரிவிக்கவேண்டிய புலனாய்வு ஊடகப்பணியையும் அன்று மேற்கொள்ளவேண்டியிருந்தது.
ஏற்கனவே 1971 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் தொடங்கிய மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதக்கிளர்ச்சி, தென்னிலங்கை இளைஞர்களின் பொருளாதார ஏற்றதாழ்வு தொடர்பானது. அந்தக்கிளர்ச்சியின் பின்னணியில் ” இஸங்களும்” இருந்தன. அந்த இளைஞர்கள் தாடி வளர்த்திருந்தனர். செங்கொடி ஏந்தினர். செஞ்சட்டை அணிந்தனர்.
ஆனால், வடக்கிலிருந்து துரையப்பா கொலையுடன் ஆரம்பமான இனவிடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களின் கனவு தமிழ் ஈழமாகவே உருவாகியது. அதனால் அவர்களினால் தொடங்கப்பட்ட இயக்கங்களின் பெயர்களிலெல்லாம் ” ஈழம்” என்ற பதம் நிலைத்திருந்தது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் முதலில் இலங்கையில் தொடங்கி, பூட்டான் திம்புவரையில் சென்று, மீண்டும் இலங்கையில் இந்தியத்தலையீட்டால் ஒப்பந்தங்கள் நடந்து, அங்கிருந்து, பதவிக்கு வந்த புதிய தலைவர்களினால் நீடித்து, நோர்வேயும் தலையிட்டு,
சமாதான காலம் வந்து, அதுவும் குலைந்து, கோர யுத்தத்துடன் 2009 மேமாதத்துடன் பல்லாயிரம் அப்பாவித்தமிழ் மக்களின் உயிரைக்குடித்துக்கொண்டு முடிவுக்கு வந்தது.
இந்த வருடம் மே மாதத்துடன் போர் முடிவுக்கு வந்து பதின்மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன்பின்னர் வருடாந்தம் ஜெனீவாவில் போர்க்குற்றம் பற்றி ஆராயும் திருவிழாவின் கொடியேற்றம் நடந்தது. பல நாள் நடக்கும் இந்தத் திருவிழா “தீர்த்தோற்சவத்துடன்” இனிது நிறைவெய்தி, அங்கு செல்லும் ஈழத்து யாத்திரீகர்களும் இதரநாடுகளிலிருந்து வரும் யாத்ரீகர்களும் ஊடகங்களுக்கு போஸ் கொடுத்து அறிக்கைவிடுத்துவிட்டு தங்கள் வேலைகளை பார்க்கத்தொடங்குவார்கள்.
மீண்டும் ஜெனீவாவில் உற்சவம் தொடங்கும்பொழுது யாத்திரைக்கு ஆரம்பமாவார்கள்.
காணாமல்போனவர்களின் உறவுகள் வருடங்கள் கடந்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு அமைதியான முறையில் அறப்போராட்டம் நடத்திய சிலரும் ஏங்கி ஏங்கியே இறந்துவிட்டனர்.![]()
“உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற கோசத்துடன் நடக்கும் மேதினத்தையும் இலங்கையின் முன்னைய நல்லாட்சி அரசு (?) புத்தர்பெருமானை முன்னிட்டு, மாற்றியதை மறந்திருக்கமாட்டீர்கள். தத்தம் தேசங்களுக்காக கடுமையாக உழைத்த உலகத்தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பிரகடனப்படுத்தப்பட்ட மே 1 ஆம் திகதியன்று நடக்கவேண்டிய மேதினத்தை தேசத்திற்கான எந்த உழைப்பையும் வழங்காத காவிச்சந்நியாசிகளின் உத்தரவுக்கு அமைய மாற்றியது அன்றைய நல்லாட்சி அரசு!
இந்த ஆண்டு அதே மேமாதம், காலிமுகத்திடல் போராட்டத்துடன் வேறு வடிவம் எடுத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் வரும் மேமாதம் இலங்கைக்கும் முக்கியமானதுதான். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், தொழிலாள விவசாய பாட்டாளி மக்களின் மேதினமும், வெசாக் பண்டிகையும் வரும் இந்த மே மாதம், ஈழப்போரில் விடுதலைக்காய் உயிர்நீத்தவர்களையும் தொழிலாளர் உரிமைக்காய் 18 ஆம்
நூற்றாண்டில் சிக்காக்கோவில் போராடி உயிர்நீத்த தோழர்களையும் நினைவுகூரும் மாதமுமாகும்.
மேமாதத்தில் வரும் முழுநிலக்காலத்தில் (பௌர்ணமி) புத்தர்பெருமானின் பிறப்பு, மறைவு, அவர் பரிபூரண நிர்வாணம் எய்திய தினத்தை முன்னிட்டு இலங்கையில் வெசாக்தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு புத்தரும் உலகத்தொழிலாளர்களும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களும் நினைவுகூரப்படும் வரலாறு எழுதப்பட்ட மேமாதம், வரலாற்று ஆசிரியர்களையும் ஊடகவியலாளர்களையும் கவனத்தில்கொள்ளவைத்திருக்கிறது.![]()
தனக்கு அரசும்வேண்டாம், அதிகாரமும் வேண்டாம் என்று பதவியையும் அதிகாரத்தையும் துறந்து அன்புமார்க்கமே வேண்டும் என்று கானகம் சென்ற நிர்வாணம் எய்தியவர் புத்தர்பெருமான். ஆனால், எமது இலங்கையைப்பொறுத்தமட்டில் அவரைப்பின்பற்றும் பௌத்த பிக்குகள்தான் அரசியல் அதிகாரம் பற்றி ஆட்சியாளர்களுக்கு பாலபாடம் கற்பித்துவருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர் இலங்கையில் செனட் சபை இருந்தது. அங்கிருந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகமான உறுப்பினர்கள் யூ. என்.பி. ஆதரவாளர்கள். அதனால் தனது அரசின் தீர்மானங்களை நிறைவேற்றமுடியாதுபோகும் என்பதைக்கருதி 1970 இல் பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசு புதிய சட்டம் இயற்றி அந்த செனட் சபையை இல்லாமல் செய்தது.
1977 இல் பதவிக்கு வந்த ஜே.ஆர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டு அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்திருந்தார். அவருக்குப்பின்னர் வந்த அதிபர்களும் சிற்சில திருத்தங்களும் தம் வசம் வைத்திருந்தனர். அதனால் சிக்கல்கள் பெருகியதே தவிர இலங்கை தன்னிறைவு அடையவில்லை. அதன் பலனை மக்கள் அனுபவிக்கிறார்கள்.
விஹாரைகளிலிருந்து பிரித் ஓதவேண்டியவர்கள் அரசியலில் அதிகாரம் செலுத்துகிறார்கள். அவர்களின் ஆசிவேண்டி ஜனாதிபதி முதல் பிரதமர் மற்றும் அரசியல்தலைவர்கள் படையெடுத்தார்கள்.

இனிவரும்காலத்தில் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தி விஹாரைகளுக்குள்ளிருந்துதான் வரும் என்பதற்கு இந்த ஆண்டு மேமாதம் முன்னுதாரணமாகிறது.
மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க முடியாமல் தன்னெழுச்சியாக காலிமுகத்திடலில் தொடங்கிய போராட்டத்திலும் பௌத்த பிக்குகளை காணமுடிகிறது.
அவர்களில் சிலர் உதிரும் வார்த்தைகளை எழுத்திலும் பதிவேற்றமுடியாது. ஆனால், சமகால எண்ணிம ஊடகம் அவற்றை வைரலாக பரவச்செய்துகொண்டிருக்கிறது.
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு மலையகத்திலிருந்து போதியளவு தமிழ் மக்கள் கலந்துகொள்ளவில்லை என்ற ஆதங்கமும் பலபக்கங்களிலிருந்து எழுந்தாலும், கணிசமான தமிழ் – முஸ்லிம் மக்கள் அங்கே தோன்றியிருக்கிறார்கள். ஊடகங்கள் ஊடாக தமது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அரசுக்கு எதிராக கோஷம் இடம்பெறும் பாடல்களிலும் பங்கேற்கிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவேந்தல் நடத்த முடியாது என்று கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்தி, முன்பு அங்கே இராணுவத்தை குவித்திருந்த அரசு, தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மொட்டு கட்சியின் தீவிர ஆதராவாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டபோது அதே இராணுவமும் பொலிஸும் கைகட்டி வேடிக்கை பார்க்க நேர்ந்தது. இது குறித்த கடும் விமர்சனம் அரச தரப்பு எம். பி. க்களினாலேயே இதே மேமாதத்தில் நாடாளுமன்றில் எழுந்தது.
இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணமும் தங்கமும் எங்கே..? எனக்கேள்வி எழுந்ததை நாம் மறக்க முடியாது.
இந்த மேமாதத்தில் சில முன்னாள் அமைச்சர்கள் தங்கள் வீடுகளில் ஆர்ப்பாட்டக்காரர்களினால் சூறையாடப்பட்ட தங்க நகைகளும் பணமும் எங்கே …? என்று அரசிடமும் காவல் துறையிடம் முறையீடு செய்து வருகின்றனர்.
காலிமுகத் திடலுக்குள் தமிழ் ஈழம் நூழைந்தால் பொறுக்கமாட்டோம் என்றார் முன்னாள் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர். அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள், அதனை காலிமுகத்திடலுக்கே வந்து சொல்லுங்கள் எனக்கேட்டிருந்தனர்.
ஆனால் நடந்தது என்ன..,?
அதே வேளையில் காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவு கூரப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டதுடன், மக்களுக்கு கஞ்சியும் வார்க்கப்பட்டது.
ஒரு பௌத்த பிக்குவே மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். சரித்திரம் திரும்பியிருக்கிறது.
முன்னாள் அதிபர் சந்திரிக்காவும் தமது இல்லத்தில் விளக்கேற்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தார்.![]()
இந்தப்பின்னணியில் மக்களுக்கு உண்மைகளை சொல்லவேண்டிய ஊடகவியலாளர்களின் பணி முக்கியத்துவம்பெறுகிறது.
நேற்றைய செய்திதான் நாளைய வரலாறு. அதனை சரியாக எழுதவேண்டியவர்கள் ஊடகவியலாளர்கள்.
—0—-
![]()