Featureகதைகள்

நடுகைக்காரி!….. 37 ….. ஏலையா க.முருகதாசன்.

பாறுவின் வீட்டை நோக்கிக் போய்க் கொண்டிருந்த படபடப்பு இப்பொழுது ஞானத்தின் மனதில் இல்லை.

பாறுவைப் பார்த்த மகிழ்ச்சி மட்டுமல்ல,அவளின் வீட்டில் நடந்த சம்பவங்களும் பாறுவின் மூலம் அவன் கேள்விப்பட்டவையும் அவனை குதூகலப்படுத்தியது குசாலாக்கியது.

வீட்டை நோக்கி சைக்கிளில் வேகமாகப் போய்க் கொண்டிருந்தவனின் மனதில் திடீரென்று தானும் பாறுவும் பாறுவின் வீட்டுப் படலையை நீக்கிவிட்டு உள்ளே போகும் போது „நல்லாயிருக்கு’ என்று கேட்ட குரலும் அந்தக் குரலுக்குரியவரான கொண்டக்ரர் மணியமும் ஞாபகம் வரவே மனதில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டாலும் அடுத்த விநாடியே அவராலை என்ன செய்துவிட முடியும் எனத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டான்.

மகாஜனாக் கல்லூரியைக் கடக்கையில் சடக்கென்று பிரேக் போட்டு லிங்கம் கபே பாலத்தில் சைக்கிளைத் திருப்பி விட்டவன் பாலத்தில் நின்றபடியே „லிங்கண்ணை ஒரு பிளேன்ரீயும் வடையும்’ என்று சொல்லியபடி கடைக்குள் நுழைகிறான்.

ஞானம் பாறுவைச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு செல்வதையும், அவன் கிழக்குத்திசை நோக்கி எப்பவெல்லாம் சைக்கிளில் போகிறானோ அப்பவெல்லாம் „ உங்கை போகிறார்………. போல’ என லிங்கம் கபே உரிமையாளர் தனது கடையில் தேநீர் குடிச்சுக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டுமிருப்போருக்கு கொச்சை விளக்கத்துடன் சொல்வதும் ஞானம் சொல்வதைக் கண்டதும் சின்னக்கண்டும் மினுக்கிய அயேன் பொக்ஸை நிமிர்த்தி வைச்சுவிட்டு,’சுப்பையற்றை கடைசி பசி தீர்க்கப்: போகுதாக்கும்’ என்று சொல்லிக் கொண்டே கடைக்குள் நுழைந்து „லிங்கம் ஒரு ரீ போடு உவப்பான கதையோடு சூடாகக் குடிப்பம் என்பது அப்பப்ப நடக்கும் சங்கதி.

ஞானமும் பாறுவும் அம்பனையிலிருந்து யூனியன் கொலிஜ் வரை பேசுபொருளாகி பல நாட்களாகிவிட்டன.

ஞானம் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டே கடைக்குள் நுழைந்ததைக் கண்ட சின்னக்கண்டு வழமைபோல அயன் பொக்ஸை நிமிர்த்தி வைக்கவில்லை, அதை வெளியில் கொண்டு வந்து அதன் மூடியைத் திறந்து கொஞ்சம் கரித்துண்டுகளை அதற்குள் போட்டு எரிய விட்டிட்டு „ எனக்கும் ஒரு ரீ „ என்று சொல்லியபடி ஞானம் இருந்த வாங்கில் உட்காருகிறார்.

„என்ன ஞானம் துலையாலையோ உந்தப் பக்கத்தாலை வாறியள்’ என்று எதுவும் தெரியாதது போல கேட்க,சின்னக்கண்டு வேண்டுமென்றே கேட்கிறார் என்பதை உணர்ந்த ஞானம் „ யூனியன் கொலிஜிலை படிக்கிற என்னுடைய பிரண்ட்

வறுத்தலைவிளானிலை இருக்கிறான் சும்மா போயக் கதைச்சிட்டு வாறன் „ என்று பொய் சொல்கிறான்.

ஞானம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே லிங்கமும் சின்னக்கண்டுவும் கண்களால் கதைப்பதையும் கவனிக்காதது போல கவனித்துவிடுகிறான்.

அப்பொழுது சரவணன் என்ற இளைஞன் „கலோ ஞானம் எப்படி இருக்கிறியள் „என்று சொல்லிக் கொண்டே கடைக்குள் நுழைந்தவன் லிங்கத்திடம் தேத்தண்ணிக்குச் சொல்லிவிட்டு, ஞானத்திற்கு அருகில் உட்கார்ந்த சரவணனிடம் „அண்ணை ஒரு விசயம் கேள்விப்பட்டனான் ஏதோ மன்றம் தொடங்கியிருக்கியலாமே „ என்று கேட்க,’ம்..உண்மைதான் வேலை நேரம் போக மிச்ச நேரத்தை பிரயோசனமாய் பயன்படுத்துவம் என்று தொடக்கியிருக்கிறம், பெயர்கூட அம்பனை கலை இலக்கியச் சமூக மன்றந்தான்,நீங்களும் சேருங்களேன் நல்ல சிந்தனையாளன், நல்ல திறமைசாலி, இங்கிலீஸிலும் அவ்வளவு கெட்டிக்காரன் இப்ப சிங்களமும் படினக்கிறதாகக் கேள்விப்பட்டன் நல்ல முயற்சி…’ என்ற சரவணன் ஒருமுறை சின்னக்கண்டுவையும் லிங்கத்தையும் கடைக்கண்ணால் பார்த்தவன் மெதுவாக ஞானத்திற்கு மட்டுமே கேட்கத் தக்கதாக ஒரு விசயம் காத்துவாக்கில கேள்விப்பட்டன் திருமணப் புரட்சி செய்யப் போகிறியளாமே உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாயிருக்குது என்று ஞானத்தின் கையை எடுத்து அவனுக்கு கைலாகு கொடுத்து வாழ்த்துச் சொல்கிறான்.

„சரியண்ணை வாறன் நாளைக்கு யூனியனிலை ஒரு இன்ரவியூ இருக்கு அதுற்கு ஆயத்தம் செய்ய வேணும் என்று சொல்லியபடி போக வெளிக்கிட்டவனுக்கு „முருகையா மாஸ்ரர்தானே தலைவர் அவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின்ரை காங்கேசன்துறைத் தொகுதி அமைப்பாளர்,நிச்சயமாக அவர் கட்சி சார்ந்த கேள்விகளை கட்சி சாராத மாதிரி அரசியல் கேள்விகளைக் கேட்பார் புத்திசாலித்தனமாக பதில் சொல்லுங்கள் „ என்று சரவணன் சொல்ல „ ஓமண்ணை வாறன்’ என்று சொன்ன ஞானம் „சரி வாறன் „ என்று பொதுவாகச் சொல்லியபடியே கடையைவிட்டுப் போகிறான்.

இவ்வளவு நேரமும் சுவரோடு சாய்ந்து நின்று தேத்தண்ணி குடிச்சுக் கொண்டிருந்த சின்னக்கண்டு சரவணனைப் பார்த்து „போறவரைத் தெரியுமோ „ என்று கேட்க,உட்கார்ந்திருந்த வாங்குக்கு மேலால் காலை எடுத்து போட்டு வீதியைப் பார்த்து உட்கார்ந்து கொண்டே’ தெரியும் „ என்று பதில் சொன்னவன் தேத்தண்ணி ஆத்தும் பட்டடைக்கு முன்னால் நின்ற லிங்கத்தையும் சின்னக்கண்டுவையும் மாறி மாறிப் பார்த்தபடி தேத்தண்ணியைக் குடிச்சபடி இவர்கள் இரண்டு பேரும் ஏதோ மனசிலை வைச்சிருக்கினம் கேட்கத் தயங்கினம் என்று நினைத்தவாறு அமைதியாக குடிச்சுக் கொண்டிருந்தான்.

பொயிலை போட்டவன் பொயிலை கிடைக்காவிட்டால் வாய் நசநசப்புக்கு பொயிலைக் காம்பையாவது போட்டு திருப்திப்படுவது போல „ மெய்யே சரவணன் இந்தப் பொடியன் ஆற்றை மகன் என்று தெரியுமோ’ என்று லிங்கம் கேட்க „

தெரியும் சுப்பையா மாமாவின்ரை கடைசி மகன் „ என்று பதில் சொல்லியபடி லிங்கத்தை கூர்ந்து பார்க்கிறான்.

„அவரைப் பற்றி ஊரிலை ஒரு கதை பரவியிருக்குது தெரியுமோ’ என்று சின்னக்கண்டு லிங்கம் விட்ட இடத்திலிருந்து தொடர,பதில் எதுவுமே சொல்லாது அவர்களிருவரும் எங்கே வருகிறார்கள் எனக் கணித்தவனாய் இருக்க’ போயும் போயும் ஒரு புல்லுப்பிடுங்கிறவளோடை சுத்திக் கொண்டு திரியிறான், நாங்கள் இரண்டு பேருமே கண்ணாலை கண்டனாங்கள் சைக்கிளிலை அந்தப் புல்லப்பிடுங்கிறவளை ஏத்திக் கொண்டு போனதை எல்லாம் கலிகாலந்தான் இன்னொரு கதையும் கேள்விப்பட்டனான்,அவளைத்தான் கட்டப் போறான் என்று கதை நடக்குது அப்படி என்னத்தைத்தான் அவளிட்டைக் கண்டிட்டானோ தெரியாது…’ என்று லிங்கம் சொல்லி முடிக்குமுந்தி..’ நிற்பாட்டுங்கேபா கதையை, உங்களுக்கு வேற வேலையில்லையா, அவன் என்ன செய்யிறான் இவன் என்ன செய்யிறான் என்று ஊர்க்கதை கதைக்கிறதை பெருமையாய் நினைக்கிறியளாக்கும், ஞானம் யாரை விரும்பினால்தான் என்ன யாரைக் கல்யாணம் செய்தால்தான் என்ன?.அதனாலை உங்களுக்கு என்ன பிரச்சினை, ஒவ்வொருத்தரும் தங்களைத் தாங்கள் யார் என்று பார்க்க வேண்டும்…..’ என்று கோபமாகச் சொன்ன சரவணன் வேகமாக கடையை விட்டுப் போகிறான்.

சரவணன் கடையை விட்டுப் போய் ஒழுங்கையில் காலடி எடுத்து வைச்சதும் லிங்கம் „இவருக்கு ஏன் சுடுது தெரியுமோ பக்கத்து வீட்டு வெள்ளைச்சியோடு அப்படி இப்படி என்று கேள்விப்பட்டனான், பொதுக்கிணத்தடிதானே இவரின்ரை குளிப்பு உடுப்புத் தோய்ச்சல் எல்லாம்,சில நேரம் வெள்ளச்சிக்கு மாதத் தோய்ச்சலுக்கு இவர்தான் தோய வார்க்கிறதாம், கொம்யூனிசம் என்று விபிக்கு வால் பிடிச்சுக் கொண்டும் ஏதோ திமுகாவாம் அதைப்பற்றிக் கதைச்சுக் கொண்டு திரியிறாராம் இப்ப இவரும் எல்லாரும் சேர்ந்து மன்றம் தொடக்கியிருக்கினமாம், பார்ப்பம் எத்தனை நாளைக்கு நடத்திகினம் என்று சொன்ன லிங்கம் அடுப்படிக்குள் போய் கிளாசில் கொஞ்ச சாராயத்தை ஊத்த, சின்னக்கண்டுவும் அடிப்படிக்குள் போகிறார்.இருவரும் சாராயத்தை குடிச்சிட்டு,செருமியபடியும் வாயைத் துடைச்சபடியும் வெளியே வருகின்றனர்.

சின்னக்கண்டு கரி போட்டு எரிய விட்ட அயேன் பொக்ஸை எடுத்துக் கொண்டு தனது கடைக்குள் நுழைகிறார்.லிங்கம் இரண்டு கைகளையும் பின்னுக்கு கட்டியபடி கடைக்கும் வீதிக்குமிடைலிருக்கும் பாலத்தில் வந்து நிற்கிறார்.

பாறுவைச் சந்தித்த மகிழ்ச்சியுடனும் தன்னுடைய கொள்கைக்கு ஒத்த போக்குள்ள சரவணனுடன் கதைச்ச தெம்புடனும்; நாளைக்கு யூனியனில் நடக்கப் போகிற இன்ரர்வியூவிலை என்னென்ன கேள்விகள் கேட்கப் போகிறார்களோ தெரியாது,சரவணன் சொன்ன மாதிரி முருகையா மாஸ்ரர் எந்தக் கதை கதைச்சாலும் அரசியல் கலக்காமல் கதைக்க மாட்டார்,நாளைக்கு என்னென்ன கேட்பாரோ தெரியாது..கேட்கிறதைக் கேட்கட்டும் சாமாளிப்பம் என்று யோசித்தபடி தனது வீட்டுக் கேற்றை சைககிளில் இருந்தபடியே தள்ளித் திறந்து கொண்டு முற்றத்துக்குப்

போனவன் விறாந்தையில் தாயும் தகப்பனும் மூத்த தமக்கை தனலட்சுமியும் இருப்பதைக் காண்கிறான்.

மூத்த தமக்கை அடிக்கடி தங்கள் வீட்டுக்கு வருபவள் அல்ல.வரும் போதெல்லாம் ஏதாவது பிரச்சினையை உருவாக்கிவிட்டுத்தான் போவாள்.இத்தனைக்கும் அவள் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியை.பன்னாலை சேர் கனகசபை வித்தியாலயத்தில் படிப்பிப்பவள்.பன்னாலையில் இருக்காமல் வீமன்காமத்தில் இருக்கிறாள்.கணவர் பரராசசிங்கம் வீமன்காமம் மகாவித்தியாலயத்தில் படிப்பிக்கிறவர் மட்டுமல்ல, அவரின் இடமும் அதுதான்.

தமக்கையாரின் முகம் வழமைக்கு மாறாக கோபமாக இருப்பதைக் கண்ட ஞானம்,அதைக் கவனிக்காதது போல „பெரியக்கா எப்ப வந்தனீங்கள் „ என்று சொல்லிக் கொண்டு விறாந்தையில் ஏறி அறைக்குள் போகவிருந்தவனை,

„ஞானம் நில்லடா உன்னோடை ஒரு கதை கதைக்க வேணும்’ என்ற தமக்கையின் கோபமான குரல் அவனைத் தடுத்து நிறுத்த, தமக்கையின் கோபத்துக்கான காரணத்தை அனுமானித்துக் கொள்கிறான் ஞானம்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.