Featureகட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்!…. தொடர்:22 …. மௌனஅவதானி.

இக்கட்டுரையின் ஆரம்பத்திலிருந்து, உளவு நிறுவனங்கள் இன்னொரு நாட்டினுடைய அனைத்து கட்டமைப்புகளையும் எவ்வாறு சீர்குலைத்து அந்நாட்டை நலிவடையச் செய்கின்றது என்பதைப் பார்த்தோம்.

ஒரு கட்டுரையை வாசிக்கும் வாசகனுக்குப் பலவிதமான எண்ணங்கள் தோன்றும்.பொதுமகனாக அவன் அதை உள்வாங்கும் பொது கட்டுரையில் சொல்லப்பட்ட விடயங்கள் சாத்தியப்படுகின்ற விடயமா எனக்கூட அவன் எண்ணலாம்.

ஒரு நாட்டினுடைய கட்டமைப்பை உளவு நிறுவனங்கள் ஒற்றர்கள் மூலம் சிதைக்கப்பட்டு பிறகு அதுபற்றிய விசாரணைகளை மேற்கொள்கையில் கட்டம் கட்டமான விசாரணைகளின் தகவல்களைப் பார்க்கும் போது உளவு நிறுவனம் என்பது பற்றியோ ஒற்றர்கள் என்பது பற்றியோ தெரியாத மனிதன் தன்னைப் போல ஒரு மனிதன் ஒரு நாட்டினுடைய சீர்குலைவுக்கு காரணமாக இருந்திருக்கிறானே என அவன் அறியும் போது அவன் வியப்படைந்து தன்னருகில் நிற்கும் மனிதனும் ஒற்றனோ எனச் சந்தேகக் கண்களுடன் பார்க்கத் தொடங்கிவிடுவான்.

அப்பொழுதே அந்தச் சாதாரண மனிதன் சிந்திக்கத் தொடங்கிவிடுவான்.எமக்கருகில் நிற்பவரின் உருவத்தை எடைபோடலாமே தவிர அவன் எத்தகையவன் என்பதை எவராலுமே அனுமானிக்க முடியாது.

அந்த அனுமானம் இல்லாததனாலேயேதான் உயிர்த்த ஞாயிறு மனிதப்பலியெடுப்பை எவராலுமே தடுக்க முடியாது போய்விட்டது.

இனமுரண்பாடுகளினாலும் இனவாதப் போக்கினாலும் இனஉரிமைச் சமநிலையற்று சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகளில் நிலையற்ற போக்கினைக் கொண்டிருந்த இலங்கையில,; உளவு நிறுவனங்களும் அவர்களின் ஒற்றர்களும் இலகுவாக இலங்கையைக் கையாண்டமையை நடந்து முடிந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் மூலம் அறிய முடிந்தது.

இக்கட்டுரையின் ஆரம்பத் தொடர்களில் உளவு நிறுவனங்களின் கைப்பாவையாக அமைச்சர்கள் அதிகாரிகள் மட்டுமல்ல விடுதிகளின் சாதாரண பணியாள் தொடங்கி பொறுப்புக்கூறும் தகுதியுடையவர்கள் வரை செயல்படுவார்கள் என கூறப்பட்டிருந்தது.

பயங்கரவாத தாக்குதல்களோடு சம்பந்தப்பட்டவர்களை உற்று நோக்குகையில் மேற் சொன்ன கூற்று ஒத்துப் போவதை காண முடிகிறது.

இசுலாமிய அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட இப்பயங்கரவாத தாக்குதல் என்பது வெறும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பங்கரவாத தாக்குதல்தான் என்பதை ஒற்றைவரியில் கூறிவிட்டுச் செல்ல முடியாது.

தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை ஊடகங்களிலும், உலக ஊடகங்களிலும் இத்தாக்குதல் தொடர்பாகவும், இத்தாக்குதலை மேற்கொண்ட திட்டமிடல் தொடர்பாகவும் அனுமானத்தின் அடிப்படையிலும் ஊகத்தின் ரீதியிலும் பல செய்திகள் நாளாந்தம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

செய்திகள் பலவாக இருந்த போதும் இலங்கையின் கட்டமைப்பை சீர்குலைத்து நலிவடையச் செய்து இலங்கையைப் பொருளதார ரீதியாக பின்தங்கச் செய்வதே இத்தாக்குதலின் முக்கிய நோக்கம்.

ஒரு நாட்டினுடைய இனங்களின் மத மொழி பண்பாட்டு வேறுபாடுகளை உளவுநிறுவனங்கள் ஆராயந்தறிந்து,அந்நாட்டில் வாழும் ஒவ்வொரு இனமும் மற்றைய இனத்தைப் பற்றி என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்,ஒவ்வொரு இனமும் ஒருவருக்கொருவர் அதிருப்தியை ஏன் கொள்கிறார்கள்,ஏன் கோபம் கொள்கிறார்கள் என்பதையெல்லாம் அக்கு வேறு ஆணிவேறாக ஆய்வு செய்ததன் பின்னரே உளவு நிறுவனங்கள் அதற்கான வேலைத்திட்டத்தை தொடங்குவார்கள்.

இனமுரண்பாடுகளை வளர்ப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதே இவ்வுளவு நிறுவனங்களின் முதல் வேலை.இலங்கையைப் பொறுத்தவரையில் வணிகத்தில் முதன்மை பெற்று இருப்பவர்கள் இசுலாம்; மத்தைச் சார்ந்தவர்களே.இலங்கை முழுவதும் பரவலாக இவர்களின் வணிக ஆதிக்கம் கிளைவிட்டு விசுவரூபம் எடுத்து வளர்ந்த போதிலும் இதன் ஆணிவேராக இருப்பது கிழக்கு மாகாணமே.

இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் அதிகளவில் வாழும் கிழக்கு மாகாணத்தை ஒரு அரேபிய சாயலுடன் உருவாக்குவதில் உளவுநிறுவனங்கள் சத்தம் போடாமல் ஊர்ந்துசெல்லும் நாகபாம்பு போல தமது வேலைத்திட்டத்தைச் செய்தார்கள்.

இசுலாமிய மதத்தைச் சார்ந்த சாதாரண மனிதர்களிடமிருந்து அம்மதத்தின் மதத் தலைவர்கள் வரை தமது மதமே மற்றெல்லா மதங்களையும்விட உண்மையான மதம் என்ற தீவிர நம்பிக்கை உண்டு.

இது உலகளாவிய ரீதியாக இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர்களிடம் இருக்கின்றது.இன்று உலக மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகின்ற இசுலாமிய அடிப்படைவாதிகள் தமக்குள் அணிதிரண்டுதான் இத்தகு அமைப்பை உருவாக்கினார்கள் என்பதை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது.

மதரீதியாக தீவிரதன்மையுடன் சிந்திப்பவர்களின் சிந்தனையை இன்னும் தீவரப்படுத்தி ஒரு திரட்சியாக அணிதிரள வைப்பதே உளவு நிறுவனங்களின் திட்டமிடலாகும்.மதவெறி பிடித்தவர்களை மதரீதியாக அணிதிரள வைப்பதும் மொழிவெறி பிடித்தவர்களை மொழிரீதியாக அணிதிரள வைப்பதும், இனவெறிபிடித்தவர்களை இனரீதியாக தீவரப்படுத்தி அணிதிரள வைப்பதும் உளவு நிறுவனங்களின் வேலையாகும்.

ஒரு நாட்டில் எதைச் சீர்குலைக்க வேண்டுமென்பதற்கமைய அதைநோக்கி நகர்த்துவது என்பதில், இலங்கையின் இலக்கென்பது இலங்கையைத் தளமாக கொள்ள வேண்டும் என்ற வல்லரசு நாட்டின் தேவையாக இருக்கின்ற பட்சத்தில் தாம் எவ்வாறு இலங்கையில் நிலை கொள்ளலாம் என்பதற்கான வழிமுறைகளைக் கையாள்வதில் எல்லா வழிகளைக் கையாண்ட போதும் அவர்களின் இலக்கை அவர்களின் கணிப்பின்படி அடையமுடியாத போது கிழக்கு மாகாணத்தை அரபு நிலமாக மாற்றுவதன் மூலமே இலங்கைக்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்கலாம் என்பதற்கமைய கிழக்கு மாகாணத்திற்கு அரபுச் சாயம் பூசப்பட்டது.

ஒரு நாட்டினுடைய கட்டமைப்புகளில் ஒன்றைச் சீர்குலைக்க வேண்டுமென்றால் உளவு நிறுவனங்கள் ஒரேவிதமான அனுகுமுறையை ஒரு போதுமே கையாள்வது இல்லை.சவூதி அரேபியா கிழக்கு மாகாண இசுலாமியர்களுக்கு உதவி செய்ய முனைந்தமை சவூதி அரேபியாவின் மதரீதியான தன்னிச்சையான செயல்பாடு அல்ல.

சவூதி அரேபியாவோ அல்லது வேறு அரபு நாடுகளோ உதவி செய்ய வல்லரசு நாட்டின் உளவு நிறுவனங்களால் தூண்டப்பட்ட நாடாகும்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் திட்டமிட்ட உளவு நிறுவனங்கள் மிகவும் அதனை நுட்பமாக கையாண்டதைக் கவனிக்க முடியும்.

முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் இடங்களில் இத்தாக்குதல்கள் இடம்பெறவில்லை.தமிழ் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்திலும், சிங்களவர்களும் தமிழர்களும் கலந்து வாழுகின்ற நீர்கொழும்பிலுமே இது இடம்பெற்றிருக்கின்றது.

ஒரு தேவலாயத்திற்கு எவ்வளவு தமிழர்கள் வணங்கவதற்கு வருகிறார்கள், எவ்வளவு சிங்களவர்கள் வருகிறார்கள் என்பது வருடக்கணக்காக ஒற்றர்களால் அவதானிக்கப்பட்டு இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது.

இலங்கையின் வணிகத்தை கையகப்படுத்தி வரும் இசுலாமியர்களின் நடவடிக்கையால் கொதிப்படைந்திருக்கும் சிங்களவர்களை கோபப்பட வைக்க வேண்டுமென்பதில் உளவுநிறுவனங்கள் தாக்குதலில் குறைந்த வீதத்தினரான சிங்களவர்களும் பலியாக வேண்டும் அதன் மூலம் இசுலாமியர்களுக்கெதிரான சிங்களவர்களின் கோபம் அதிகமாக வேண்டுமென்பதை கச்சிதமாகவே உளவு நிறுவனம் கையாண்டு உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தமிழர்கள் மட்டுமே பலியாகி இருந்தால் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை தேடித் தேடி கைது செய்யும் நடவடிக்கை தீவிரமடைந்திருக்குமா என்பது சந்தேகமே.

உளவு நிறுவனத்தின் நோக்கம் சிங்கள மக்களையும் பலியாக்குவதன் மூலம் இசுலாமிய மக்களை நசுக்குவதேயாகும்.வளர்த்துவிடுதல் பிறகு எக்காலத்திற்கும் எழுந்திராதளவிற்கு அழிப்பது என்பது அவர்களின் வேலைத்திட்டங்களில் ஒன்றாகும்.

உளவு நிறுவனங்கள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு விடுதிகளை இலக்கு வைத்ததன் காரணம் விடுதிகளில் தங்கி நின்ற வெளிநாட்டவரின் நாடுகள் ஒரே நேரத்தில் இசுலாமிய அடிப்படை வாதிகள் மீதும், இலங்கை அரசின் நிர்வாகத்தின் மீதும் அதிருப்தி கொள்ள வைப்பதற்கேயாகும்.

இலங்கையின் சுற்றுலாத்துறை கணிசமானஅளவு வருவாயைக் கொடுத்து பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கின்றது.சுற்றுலாத்துறை வருமானமும் குறைய வேண்டும் இலங்கை பாதுகப்பற்ற நாடு எனவே அந்நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்ற போர்வையில் இந்தியா சீனா போன்ற நாடுகளைக் கண்காணிப்பதற்காகவும், இந்து சமுத்திர பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக உளவு நிறுவன ஒற்றர்களால்

மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத் தாக்குதலே உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதலாகும்.

இக்கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தது போல ஒற்றர்களை சாதரண மனிதர்களிடம் இருந்து வேறுபடுத்தி பார்க்க முடியாத அளவுக்கு தனித்துவ அடையாளங்களை கொண்டிருக்கவே மாட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் தற்கொலைக் குண்டுதாரிகளை விடுதிகளிலோ தேவாலயங்களிலோ எவராலுமே இனங்கண்டு பிடிக்க முடியாதளவிற்கு உளவு நிறுவனங்களின் செயல்பாட்டு வலைப்பின்னலும் தாக்குதலுக்கு அனுப்பப்படுபவர்களும் மிகச் சிறந்த பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.