தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஈத்காவிற்கு நிலம் தானமாக வழங்கிய இந்து சகோதரிகள்
மறைந்த தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்து மதத்தைச் சேர்ந்த சகோதரிகள் இரண்டு பேர் ஈத்காவிற்கு சுமார் 1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் ரம்ஜான் அன்று மறைந்த அப்பெண்களின் தந்தைக்காக பிரார்த்தனையும் செய்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டம் காஷிபூர் நகரத்தைச் சேர்ந்தவர் பிரஜ்நந்தன் பிரசாத் ரஸ்தோகி. இவரது இரண்டு மகள்கள் சரோஜ் மற்றும் அனிதா. இவர்கள் டெல்லி மற்றும் மீரட்டில் வசித்து வருகின்றனர்.
பிரஜ்நத்தன் கடந்த 2003-ம் ஆண்டில் இறந்துவிட்டார். ஆனால் அவர் உயிருடன் இருக்கும்போது தனது விவசாய நிலத்தில் இரண்டரை ஏக்கரை ஈக்தாவை விரிவாக்கம் செய்ய நன்கொடையாக நழங்க விரும்புவதாக தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன தங்களது தந்தையின் கடைசி ஆசை குறித்து மகள்கள் இருவருக்கும் சமீபத்தில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சகோதரிகள் இருவரும் காஷிபூரில் வசிக்கும் அவர்களது சகோதரர் ராகேஷ் ரஸ்தோகியை தொடர்பு கொண்டு நிலம் தானம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய கூறினர்.
அதன்படி, ஈத்காவிற்கு சுமார் 1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கனர்.
தொடர்ந்து, “தந்தையின் கடைசி விருப்பத்திற்கு மதிப்பளிப்பது எங்கள் கடமையாகும். எனது சகோதரிகள் அவரது ஆன்மா சாந்தியடையச் செய்யும் வேலையைச் செய்திருக்கிறார்கள்” என்று ராகேஷ் ரஸ்தோகி கூறினார்.
பின்னர் இதுகுறித்து ஈக்தா கமிட்டியின் ஹசின் கான் கூறியதாவது:-
சகோதரிகள் இருவரும் வகுப்புவாத ஒற்றுமைக்கு ஒரு உயிருள்ள உதாரணம். ஈத்கா கமிட்டி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. சகோதரிகள் இருவரும் அவர்கள் செய்த நற்செயலுக்காக விரைவில் பாராட்டப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()