6 வயதில் சீன அதிகாரிகளால் கடத்தப்பட்ட சிறுவனுக்கு 33வயது!

6 வயதில் காணாமல் போனதாக கூறப்பட்ட பஞ்சன் லாமா, சீன குடிமகனாக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமாவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் இருக்கும் மத தலைவர் பஞ்சன் லாமா என்று அழைக்கப்படுகிறார். திபெத்தின் தற்போதைய தலாய் லாமா, கடந்த 1995-ம் ஆண்டு கெதுன் சோக்கி நைமா என்ற, 6 வயது சிறுவனை, 11-வது பஞ்சன் லாமாவாக தேர்வு செய்து அறிவித்தார்.

பஞ்சன் லாமாவாக அறிவிக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் சிறுவன் நைமா காணாமல் போனார்.அதன் பின்னர் அவன் பொதுவெளியில் காணப்படவில்லை. இந்தநிலையில் சிறுவனையும், அவனது குடும்பத்தையும் சீன அரசாங்கமே கடத்தியதாக இன்றளவும் குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால் சீனா இதை தொடர்ந்து மறுத்து வருகிறது.இந்த நிலையில் 6 வயதில் மாயமான நைமாவின் 33-வது பிறந்த நாளையொட்டி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

அதில்,சீன அதிகாரிகளால் 6 வயதில் கடத்தப்பட்ட பஞ்சன் லாமாவின் இருப்பிடம் மற்றும் நல்வாழ்வை பொதுவெளியில் உறுதி செய்யுமாறு சீன அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனை கண்டித்து சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை உறுதியாக எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நைமா ஒரு சீன குடிமகனாக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.அவரும், அவரது குடும்பத்தினரும் தாங்கள் தொந்தரவு செய்யப்படுவதை விரும்பவில்லை.

எனவே இந்த விவகாரத்தில் அமெரிக்கா,அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு, அவர்களின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *