Featureகட்டுரைகள்

நிறைவேற்று அதிகாரமும் நிலையில்லா அதிகாரமும்!…. அவதானி.

இலங்கையில் தற்போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், பல விடயங்கள் உறைபொருளாகவும் மறைபொருளாகவும் தென்படுகின்றன.

கோத்தபாய Go – முழு ராஜபக்ஷ குடும்பமும் Go – நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கு – அமைச்சரவையை முற்றாக கலைத்து, புதிய அமைச்சரவை வேண்டும் – எரிபொருள் – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசியை குறை – மின்வெட்டை நிறுத்து… இவ்வாறு மக்கள் தொடங்கியிருக்கும் போராட்டத்தின் குரல் எழுந்திருக்கிறது.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் வீடுகளுக்கு முன்பாகவும், காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதியின் செயலகம் முன்பாகவும், வீதிகளின் இருமருங்கும் நின்றும் மக்கள் கோஷம் எழுப்பியும் சுலோக அட்டைகள், பதாதைகள் தாங்கியும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

மழை – வெய்யில் பாராமல் தங்கள் போராட்டத்தை தொடருகிறார்கள். கூடாரம் அமைத்து, போராட்டக்காரர்களுக்கு உணவும் தண்ணீரும் குளிர் பானமும் வழங்கி சோர்வடையாமல் அரசுக்கு கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

இலங்கையின் வரலாற்றில் 1953 ஆம் ஆண்டு நடந்த ஹர்த்தால் என வர்ணிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போரட்டத்திற்குப்பின்னர், 69 வருடங்கள் கடந்த நிலையில் நடந்துவரும் மாபெரும் போராட்டம் இதுவாகும்.

அன்று 1952 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா, காலிமுகத் திடலில் குதிரை சவாரி செய்தபோது தவறிவிழுந்து மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது புதல்வன் டட்லி சேனநாயக்கா அதே ஆண்டு ஏப்ரில் மாதம் இடைத்தேர்தல் நடத்தி பிரதமரானார்.

பங்கீட்டு அரிசிக்கான மானியத்தை நீக்கி, ஒரு படி அரிசியின் விலையை 25 சதத்திலிருந்து 70 சதமாக உயர்த்தியதனால், இடதுசாரிகளான லங்கா சமசமாஜக்கட்சியினர் முன்னெடுத்த மக்கள் போரட்டம்தான் மாபெரும் ஹர்த்தாலாக எழுச்சிபெற்றது.

இன்று கோத்தபாயவுக்கு எதிராக மக்கள் திரண்டு ஒன்றுகூடிய அதே காலிமுகத்திடலில்தான் 1953 இலும் மக்கள் திரண்டார்கள்.

அன்று 1953 இல் மக்கள் எழுச்சிப் போரட்டத்திற்குப் பயந்த பிரதமர் டட்லிசேனநாயக்கா, தனது அமைச்சரவைக் கூட்டத்தை கொழும்பு துறைமுகத்தில் நின்ற HMS Newfoundland என்ற பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் நடத்தினார்.

மக்கள் போராட்டத்தை அடக்குவதற்காக அவசரகாலச் சட்டமும் நடைமுறைக்கு வந்தது. எனினும் போராட்டம் தணியவில்லை. இறுதியில் பிரதமர் டட்லி தனது பதவியை துறந்தார். ஆயினும் அவரது ஐக்கிய தேசிக்கட்சிக்கு நாடாளுமன்றில் பலம் இருந்தது. அதே கட்சியிலிருந்து சேர். ஜோன். கொத்தலாவல பிரதமரானார். அதன் பின்னர், நீக்கப்பட்டிருந்த அரிசியின் மீதான மானியம் அரைவாசியாக குறைக்கப்படுமென அவரது அரசு அறிவித்ததையடுத்து நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் குறைந்து, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

ஆயினும் 1956 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வி கண்டது.

இந்த வரலாற்றை நாம் சமகால அரசியலுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். ஆனால், ஆட்களும் காட்சிகளும்தான் வேறு வேறானவை.

கடந்த 69 ஆண்டு காலத்துள் இலங்கையிலும் சர்வதேச அரசியலிலும் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. அன்று அரிசியின் விலையேற்றம் மக்களை எழுச்சிகொள்ள வைத்தது. அமைச்சரவைக்கூட்டம் நடுக்கடலில் கப்பலில் நடந்தது. பிரதமரும் பதவி விலகினார். புதிய பிரதமர் பதவியேற்றார்.

ஆனால், இன்று கதை வேறுவிதமாக அமைந்துள்ளது.

பதவி விலகிச்செல் என்று மக்களும் எதிர்க்கட்சிகளும் சுட்டிக்காண்பிக்கும் ஜனாதிபதி கோத்தபாய, தான் பதவி விலகப்போவதில்லை. “ முடியுமானால் 113 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வாருங்கள் புதிய அரசாங்கத்தை அமைக்கலாம், நான் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்டவன் “ எனச்சொல்கிறார்.

இன்றைய இந்த ஜனாதிபதி, அன்றைய 1953 காலத்திய அரசின் தலைவராக பிரதமர் பதவி வகித்தவர் கொண்டிருந்த அதிகாரங்களை தன்வசம் வைத்திருக்காமல், அதற்கும் மேலாக நிறைவேற்று அதிகார

வல்லமை படைத்தவராக விளங்குகிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

அதனால், இந்த நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக ஒழிக்கவேண்டும் என்ற குரலை எதிர்க்கட்சியினர் ஒலிக்கின்றனர். எதிரணி வரிசையில் அமர்ந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், “ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை குறுகிய காலத்தில் நீக்குவதாக அறிவித்து, நடைமுறைப்படுத்திவிட்டு அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் “ என்று அரசுக்கு புத்திமதி கூறுகின்றது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு தயாராகிறது. ஆளும்தரப்பு, தங்களிடம் இன்னமும் பலம் இருக்கிறது. நாங்கள் பலவீனமடையவில்லை என்று சொல்லிவருகிறது.

சுயாதீனமாக இயங்கவிருப்பதாக சொல்லியிருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, உட்பட சமசமாஜக்கட்சி மற்றும் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச முதலானோரின் அணிகள் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று சொல்லிவருகின்றன.

இலங்கை அரசும் , மக்களும் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை மேற்குலக நாடுகளும் சர்வதேச சமூகமும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.

இக்காலம் ராஜபக்ஷ குடும்பத்திற்கு வந்துள்ள கண்டமா..? அல்லது பொதுமக்கள் கடந்து செல்லவேண்டிய கண்டமா…?

இனிவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு கூட்டணி அமைத்துக்கொள்ளவேண்டும் என்று எதிரணிகள் இரகசியமாக மந்திராலோசனை நடத்தி காய் நகர்த்தும் காலமா..?

கோவிட் பெருந்தொற்றிலிருந்து இலங்கை முற்றாக விடுபடாத வேளையில் தோன்றியிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தற்காலிக தீர்வை நோக்கி நகருவதா..? அல்லது, தனி நபர் ஒருவரிடம் குவிந்துள்ள அதிகாரங்கள் அனைத்தும் மீண்டும் நாடாளுமன்றத்திற்கே வந்துசேரவேண்டும், அதற்கான வழிகளைத் தேடுவதா..? முதலான கேள்விகளே மக்கள் முன்னால் தற்போது துரத்திக்கொண்டிருக்கின்றன.

இலங்கையில் போர் முடிந்து 13 வருடங்களாகிவிட்டன. இன்னமும் பாதுகாப்புத் துறைக்காக அரசு ஒதுக்கும் நிதி குறைக்கப்படவில்லை. அமைச்சர்கள் – இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை

குறையவில்லை. இவர்களுக்கும் படைத்தரப்புக்கும் செலவிடும் நிதியை அரசு குறைக்க முன்வரவேண்டும். உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமும் ஆக்கமும் வழங்கவேண்டும்.

சிறந்த பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் திட்டங்களை வகுப்பதற்கு ஆளுந்தரப்பும் எதிர்த்தரப்பும் முன்வரல் வேண்டும்.

அத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து தேசத்தின் எதிர்கால நலன் கருதி நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக இல்லாமல் செய்துவிடுவதற்கு முயலவேண்டும்.

இல்லையேல் இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியாகத்தான் அமையும்.

நீடித்த போரினால், வளர்ச்சியில் பின்தங்கிய தேசம், கோவிட் பெருந்தொற்றினால், மக்களின் ஆரோக்கிய குறைபாட்டில் பாதிக்கப்பட்ட தேசம், இன்று ஆணவ அரசியலினால் மிக மோசமான நிலையை அடைந்துகொண்டிருக்கிறது.

“ நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் “ என்ற திருக்குறளை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்தலாம்.

இதன் விளக்கம்: நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்!

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *