விமானத்தில் தமிழ் கவிதை; துணை விமானிக்கு பயணியர் பாராட்டு!
தமிழ் புத்தாண்டு அன்று, சென்னையிலிருந்து மதுரை வந்த இண்டிகோ விமான துணை விமானி, தமிழில் வாழ்த்து கவிதை பாடி பயணியரின் பாராட்டை பெற்றார்.
சென்னையில் வசிக்கும் பிரிய விக்னேஷ், 31, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து மதுரை வந்த விமானத்தில், துணை விமானியாக வந்த இவர், ஒத்தக்கடை நரசிங்க பெருமாள், வைகை ஆறு உள்ளிட்ட இடங்களின் மேல் பறந்த போது, அதன் சிறப்புகள் குறித்து தமிழில் அறிவித்து பயணியர் கவனத்தை ஈர்த்தார். இதற்காக மதுரை விமான நிலையத்தில் அவருக்கு சக ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அவர் கூறியதாவது: தமிழின் பெருமைகளை பயணியருக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. அந்த வகையில், தமிழ் புத்தாண்டு அன்று சென்னையில் இருந்து மதுரை விமானம் புறப்படும் முன், தமிழும் அவளும் ஓரினம்… எங்கள் வீட்டில் புராதனமாய் எனது பாட்டி கால் இரண்டையும் நீட்டி இப்படி தான் அறிமுகப்படுத்தினாள் தமிழ் மாதங்களை எனக்கு…’ என, துவங்கி, நான் எழுதிய ஒரு நிமிட வாழ்த்து கவிதையை பாடினேன். அதை பயணியர் பலர் வீடியோ எடுத்து பாராட்டினர்.
வீடியோவை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது ‘டுவிட்டரில்’ பகிர்ந்து பாராட்டியுள்ளார். சென்னை – துாத்துக்குடி விமானத்திலும் இதே கவிதையை பாடினேன். இன்று போல் என்றும் என் தமிழ் பணிகள் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.