அம்பேத்கருடன் ஒப்பிட்டு பிரதமர் மோடியை புகழ்ந்த இளையராஜா!
அம்பேத்கருடன் ஒப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடியை, இசையமைப்பாளர் இளையராஜா புகழ்ந்துள்ளதால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
‘புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனத்தின், ‘அம்பேத்கரும் மோடியும்;- சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற நுாலுக்கு இளையராஜா அணிந்துரை எழுதி உள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: அம்பேத்கரை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அவரது மதிப்பை உணர்ந்து, அவரது சிந்தனைகளை நடைமுறைப்படுத்தி வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும்.பிரதமர் மோடியின் ஆட்சியில், தொழில் துறை, சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என, பல்வேறு துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு, அம்பேத்கரின் சிந்தனைகள் எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பதை, இந்த நுால் ஆய்வு செய்கிறது.
மோடி ஆட்சியில், உலகத்தரமான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஏழைகளுக்கு வீடுகள், பெண்களின் திருமண வயது உயர்வு, இலவச காஸ் இணைப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்கள், முத்தலாக் சட்டம் என, மோடி கொண்டு வந்த சட்ட திட்டங்கள் வாயிலாக, பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டு, அம்பேத்கரே பெருமைப்படுவார்.
அம்பேத்கரும், மோடியும், ஏழ்மையையும், ஒடுக்கு முறைகளையும் அனுபவித்ததுடன், அதை ஒழிப்பதற்காக பாடுபட்டவர்கள். இருவரும், இந்தியா பற்றி பெரிதாக கனவு கண்டவர்கள். செயல்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். பிரதமர் மோடி உருவாக்கும் தற்சார்பு இந்தியா, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. இவ்வாறு இளையராஜா பாராட்டியுள்ளார்.
இப்படி, அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு, இளையராஜா அணிந்துரை எழுதியிருப்பதை கண்டு, தி.மு.க.,வினர் உள்ளிட்ட பா.ஜ., எதிர்ப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனால், இளையராஜாவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருவதுடன், அவரை கண்டித்து சமூக வலைதளத்தில், ‘டிரெண்டிங்’ செய்து வருகின்றனர்.