எழுத்தும் வாழ்க்கையும்!…. ( இரண்டாம் பாகம் )….. அங்கம் -09 …… முருகபூபதி.
மெல்பனுக்கு வருகைதந்த பழ. நெடுமாறன்: கேள்வியும் பதிலும் !
அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு !!
முருகபூபதி.
பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த மெய்யியல் அறிஞர் வோல்டேயர் (1694 – 1778 ) பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் சொன்ன பின்வரும் கூற்று உலகப்பிரசித்தம்.
“ I disapprove of what you say, but will defend to the death your right to say it. “
ஒருவருடைய கருத்துக்கு மாற்றாக கருத்துச் சொல்லும் உரிமை எமக்கு இருக்கும் அதே சமயத்தில், மாற்றுக் கருத்துச் சொல்பவரின் உரிமைக்காகவும் நாம் குரல் கொடுக்கவேண்டும்.
ஊடகத்துறையில் பணியாற்றியமையால், கருத்து முரண்பாடுகள் ஒருவரின் மேன்மையை இனம்காண்பதில் தவறிழைத்துவிடல் தகாது என்ற மனப்பான்மையையும் வளர்த்துக்கொண்டேன்.
அதனால், கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் பல்வேறு கருத்தோட்டம் மிக்கவர்களுடனும் ஊடாட முடிகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களினால் விக்ரோரியாவில் 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இலங்கைத் தமிழ்ச்சங்கம்.
இச்சங்கத்தில் அங்கத்தவராக இருப்பதாயின் என்னைப்போன்று அகதிகளாக இலங்கையிலிருந்து வந்தவர்கள், இந்நாட்டில் நிரந்தர வதிவிடவுரிமை பெற்றிருக்கவேண்டும் என்ற ஒரு எழுதாத விதி அப்போதிருந்தது.
அதனால், நண்பர் “சுந்தர் “ சுந்தரமூர்த்தி அக்காலப்பகுதியில் தங்கள் சங்கத்தின் செய்தி ஏட்டினை தொகுப்பதற்கு என்னை
அழைத்தபோது அதற்கான அருகதை எனக்கில்லை என்பதும் எனக்கு அப்போது புரிந்தது.
எனக்கும் சுந்தரமூர்த்திக்கும் இடையிலான நட்புறவு இற்றைவரையில் எந்த விக்கினமும் இல்லாமல் தொடருகிறது.
1988 இல் நான் இங்கு வதியும் சில அன்பர்களுடன் தொடக்கிய இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சுந்தர் தனது தார்மீக ஆதரவை வழங்கினார்.
ஸ்பிரிங்வேலில் அமைந்திருந்த அவரது அச்சகத்தில் தென்துருவ தமிழ் முரசு அச்சிடப்பட்டது. அத்துடன் அங்கிருந்துதான் சங்கத்தின் பிரசுரங்களும் வெளியாகின.
எமது கல்வி நிதியத்திலும் இணைந்து, ஒரு மாணவருக்கு உதவுவதற்கு முன்வந்த சுந்தர், நிதியத்திற்கான Letterhead ஐ இலவசமாகவும் அச்சிட்டுத்தந்தார்.
இது இவ்விதமிருக்க, நான் எனது அகதிக் கோரிக்கை விண்ணப்பத்தை அச்சமயம் மெல்பன் சிட்னி வீதியில் Brunswick இல் அமைந்த சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் அவர்களின் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தேன். என்னைப்போன்று மேலும் பலர் அவ்வாறு விண்ணப்பித்துவிட்டு விசாரணைகளுக்காக காத்திருந்தனர்.
சட்டத்தரணி ரவீந்திரன் அவர்களுக்கு லண்டன் செல்லவேண்டியிருந்தது. அதற்கு முன்னர் தன்னிடம் விண்ணப்பம் கையளித்த அகதிகள் அனைவரையும் தமது இல்லத்திற்கு அழைத்து பேசவிரும்பியிருந்தார்.
அகதிகளாக – வேலை செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பலரும் வாழ்ந்துகொண்டிருந்தமையால், எவ்வாறு இந்த புகலிடத்தில் நாம் நடந்துகொள்ளவேண்டும் என்பதை சமூக அக்கறையுடன் அவர் எமக்கு சொல்வதற்கு விரும்பியிருந்தார்.
அவரது Ivanhoe இல்லத்திற்கு சென்றோம். அங்குதான் பின்னாளில் எனக்கு நண்பர்களான பலரையும் சந்திக்க முடிந்தது. அமருவதற்கு ஆசனப்பற்றாக்குறையிருந்தமையால் சிலர் தரையில் அமர்ந்துகொண்டனர்.
ரவிந்திரன் அண்ணரின் அன்புத்துணைவியார், நாம் அண்ணி என அழைக்கும் திருமதி ஜெஸி ரவீந்திரன் அனைவரையும் நன்கு உபசரித்தார்.
ரவி அண்ணன் பேசிக்கொண்டிருக்கும்போது, மருத்துவர் பொன். சத்தியநாதனும், “ சோமா “ சோமசுந்தரமும் அங்கே அடுத்தடுத்து வந்து சேர்ந்தனர்.
“ சிவபூசையில் கரடி நுழைவதாக எவரும் கருதவேண்டாம் “ என்று சிரித்துக்கொண்டே “ சேமா “ சோமசுந்தரம் அவர்கள் சொல்லிக்கொண்டு வந்தது, இன்னமும் எனது காதுகளில் ஒலிக்கிறது.
அதன்பின்னர் அங்கே நடந்தது சிவபூசையா..? – வந்தவர்கள் கரடிகளா… ? என்பதை காலம்தான் சொன்னது.
ரவி அண்ணரும் இதர அந்த இரண்டு பெரிய மனிதர்களும் அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தவர்கள் அல்ல என்பதும் எனக்குப்புரிந்தது.
ரவீந்திரன் சட்டத்தரணி – சத்தியநாதன் மருத்துவர் – சோமசுந்தரம் கணக்காளர். மூவரும் அவரவர் தொழில்துறையில் அவ்வாறு இயங்கினாலும், ஈழத்தமிழ் மக்கள் பற்றியும் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த தமிழ் அகதிகள் தொடர்பாகவும் அக்கறை கொண்டிருந்தனர்.
ஆயினும், அவர்கள் மூவர் மத்தியிலும் அரசியல் கருத்தியல்களில் முரண்பாடுகள் இருந்தன.
அந்த சந்திப்பில் விடுதலைப்போராட்டத்திற்கு இங்கு அகதிகளாக வந்துள்ள தமிழர்களும் உதவவேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
அங்கு தரையில் அமர்ந்திருந்த ஒருவர், “ சாம் 67 ( Surface – to – air missile ) ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு கிடைத்தால், விரைவில் தமிழ் ஈழம் வந்துவிடும். “ என்றார். அவரை அண்மையில் ஒரு பொது நிகழ்வில் கண்டேன். பாயாசம் அருந்திக்கொண்டு சிரித்தார்.
இலங்கையில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் வீரகேசரியில் பணியாற்றியமையால், போர் நீடித்தால் என்ன நடக்கும் என்பதில் என்னிடம் தீர்க்கதரிசனமான பார்வை இருந்தது. அதனால்,
எக்காரணம் கொண்டும், ஆயுதங்களுக்கு துணைசெல்லக்கூடாது என்பதில் உறுதியாகவிருந்தேன்.
நான் ஏழாம் வகுப்பில் யாழ். ஸ்ரான்லி கல்லூரியில் படித்த காலத்தில், மேல் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த முருகேசு அண்ணரை நீண்ட இடைவெளிக்குப்பின்னர், அன்றைய சந்திப்பில்தான் கண்டேன். அவர் கொடிகாமத்தைச்சேர்ந்தவர்.
அவரும் தனது குடும்பத்தினரை ஊரில் விட்டு வந்திருந்தார். மற்றும் ஒருவர் அக்காலப்பகுதியில் ‘ சாம் ‘ ஆறுமுகசாமி அண்ணரால் எமக்கு அறிமுகமான “ தர்மா “ தர்மசேகரம் அண்ணர். இவர் Heidelberg என்ற இடத்தில் ஒரு பலசரக்கு கடை நடத்திக்கொண்டிருந்தார். இங்குதான் நாம் எமக்குத்தேவையான மளிகைச் சாமான்களையும் தமிழ்த்திரைப்பட கஸட்டுகளும் வாங்குவோம்.
அன்றைய சந்திப்பில் விடுதலைப் போராட்ட ஆதரவு நிதியை சேகரிக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் தனக்குத் தரப்பட்ட பணியை செம்மையாகச் செய்தார். அச்சந்தர்ப்பங்களில் நான் அவருடன் அரசியல் பேசுவதுண்டு.
1987 நடுப்பகுதியில் வடமராட்சியில் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் உத்தரவுக்கு அமைய லிபரேஷன் ஒப்பரேஷன் தாக்குதல் தொடர்ந்தது.
அதனால் மக்கள் கொல்லப்பட்டும், பாதிக்கப்பட்டும் அவலப்படுவதைக்கண்ட விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கம், இங்கிருந்த தமிழ் மக்களிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, தமிழக முதல்வர் எம். ஜி. ஆருக்கும், பாரதப் பிரதமர் ரஜீவ் காந்திக்கும் தந்திகளை அனுப்பினோம்.
அனைத்துலகத்திலுமிருந்து வந்த அழுத்தங்களினால் இந்திய அரசின் திடீர் உத்தரவுக்கு அமைய வடமராட்சிப் பிரதேசங்களில் இந்திய விமானங்கள் அத்துமீறிப்பிரவேசித்து உணவுப்பொட்டலங்களை வழங்கின.
இந்த சமிக்ஞையை அன்றைய இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனா விரும்பாதமையினால், இந்தியாவுடன் பேசுவதற்கு முன்வந்தார். இலங்கை – இந்திய உடன்படிக்கை கைச்சாத்தானது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும்
சுதுமலை அம்மன் கோயில் முன்றலில் போரை நிறுத்தி ஆயுதங்களை ஒப்படைப்பதாக மக்களிடம் சொன்னார்.
இந்திய அமைதிகாக்கும் படையும் பிரவேசித்தது. இதனையடுத்து நிலைமை முற்றாக தலைகீழாக மாறியது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. யின் வன்முறைகள் தொடர்ந்தன. நாட்டில் பதட்டம் தோன்றியது.
இலங்கை – இந்திய உடன்படிக்கை உருவான காலப்பகுதியில் இலங்கைத் தமிழ்ச்சங்கம் தமிழ்நாட்டிலிருந்து பழ. நெடுமாறனை இங்கு உரையாற்றுவதற்கு அழைத்திருந்தது.
அந்தக்கூட்டம். ஒரு விடுமறை நாளில் முற்பகல் வேளையில் மெல்பன் பார்க்வில்லில் (Parkville) அமைந்த பல்கலைக்கழக உயர்தரக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
அக்காலப்பகுதியில் இந்த மண்டபத்தில்தான் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் நிகழ்ச்சிகளும் குறிப்பாக சிட்னி கலைஞர்களினால் தயாரித்து மேடையேற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் நாடகமும், மெல்பன் தமிழ்க்கலை மன்றத்தின் கலைமகள் விழாவும், அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியத்தின் கதம்ப விழா, மற்றும் பாரதி விழா, விக்ரோரியா இந்து சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் என்பனவும் நடைபெற்றன.
மெல்பன் வாழ் தமிழ் மக்களுக்கு மிகவும் அறிமுகமான மண்டபமாக அக்கல்லூரி அமைந்திருந்தது.
பழ . நெடுமாறன் முன்னர் அகில இந்தியக்காங்கிரஸின் கீழ்மட்டத் தொண்டராக இருந்து, பின்னர் கர்மவீரர் காமராஜரின் நம்பிக்கைக்குரிய அரசியல் சீடராகவும் தமிழக சட்டசபையில் உறுப்பினராகவும் விளங்கியவர். காங்கிரஸ் பிளவுற்றவேளையில் இவர் காமராஜரின் அணியில் இணைந்தார். கர்மவீரரின் மறைவுக்குப்பின்னரும் காங்கிரஸ் பிளவடைந்தது.
பழ. நெடுமாறன் அதன்பின்னர், காமராஜ் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். குமரி அனந்தன் காந்தி – காமராஜ் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். காலப்போக்கில் இவை இரண்டும் இந்திய அரசியல் அரங்கிலிருந்து காணாமல் போய்விட்டன.
எனினும் தமிழ்த்தேசியத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்த பழ.நெடுமாறன், இந்திய – தமிழக அரசுகளுக்கோ கடல் எல்லைக் காவலர்களுக்கோ தெரியாமல் படகில் வந்து வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்துச் சென்றிருந்தமையினால், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு குறிப்பாக விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு அவர் குறித்து ஒரு பெரும் கவர்ச்சி இருந்தது. அவர் எம்மவர் மத்தியில் ஒரு ஹீரோவாக போற்றப்பட்டார்.
அக்காலப்பகுதியில் விக்ரோரியா இலங்கைத்தமிழ்ச்சங்கத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்களே நிரம்பியிருந்தனர். அதனால்தான் அதன் பெயரையும் பின்னாளில் ஈழம் தமிழ்ச்சங்கம் எனவும் மாற்றினர். தற்போது விடுதலைப்புலிகளும் இல்லாத காலத்தில் அச்சங்கம், விக்ரோரியா மாநிலத்துக்குள் சுருண்டுவிட்டது !
பாகிஸ்தான் – இந்தியா மோதலுக்குப்பின்னர், பங்களா தேஷ் உருவானது. இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி பங்களாதேஷை உருவாக்கிக்கொடுத்தமை போன்று இலங்கையிலும் இந்தியா தலையிட்டு தமிழ் ஈழத்தைப்பெற்றுக்கொடுக்கும் என்ற பரவலான நம்பிக்கை புலம்பெயர்ந்த தமிழர்களிடம் அக்காலப்பகுதியில் இருந்தது.
எனினும் வங்கம் தந்த பாடம் என்ற நூல் பற்றி ( இதனை வெளியிட்டவர்கள் உமா மகேஸ்வரனின் இயக்கத்தினர்.) எவரும் பரவலாக அறிந்திருக்கவில்லை.
நெடுமாறன் உரையாற்றி முடித்ததும் எவரும் அவரிடம் கேள்விகள் கேட்கலாம் என்றும் ஆனால், கேள்வியை ஒரு காகிதத்தில்தான் எழுதித்தரல் வேண்டும் என்றும் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சோமா. சோமசுந்தரம் தெரிவித்தார்.
உடனே நான் ஒரு காகிதத்தில் பின்வரும் கேள்வியை எழுதி மேடைக்கு அனுப்பினேன்.
” பாரத நாடு பாகிஸ்தானுடன் போரிட்டு பங்களா தேஷை பிரித்துக்கொடுத்தது. அதுபோன்று இலங்கையிலும் தலையிட்டு தமிழ் ஈழத்தை பெற்றுக்கொடுக்கும் என பலரும் நம்புகிறார்கள். ஆனால், இன்று அந்த அண்டை நாடுகள் இரண்டும் பாரத நாட்டுடன் சுமுகமாக இல்லை. இந்த நிலைதானே தமிழ் ஈழத்திற்கும் – இந்தியாவுக்கும் – இலங்கைக்கும் நேர்ந்துவிடும்…? நீங்கள் இதற்கு என்ன சொல்கிறீர்கள்…?”
” அருகிலிருப்பது தாய்த் தமிழகம். ஈழத்தமிழர்களுக்கு இன்னல் வந்தால், தமிழகத்தமிழர்கள் ஒன்றிணைந்து போராடுவார்கள். ஈழத்தையும் பெற்றுக்கொடுப்பார்கள்.” என அவர் சொன்னதும் அந்த மண்டபம் பலத்த கரகோஷத்தால் அதிர்ந்தது.
உடனே நண்பர் தர்மசேகரம் எழுந்து என்னைச் சுட்டிக்காட்டி “ இவர்களுக்கு கேள்வி எழுப்பவே தெரியும்…. “ என்றார். அதற்கும் மக்கள் கரகோஷம் எழுப்பினர்.
நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கிய சோமசுந்தரம்தான் கேள்வி கேட்கச்சொன்னார். அப்படியாயின், அவரைப்பார்த்தும், ஏதும் சொல்லலாமே என்று தர்மசேகரத்திடம் கேட்டேன். இவ்வாறு மாற்றுக்கருத்துக்கொண்டிருந்தவர்களிடத்திலும் மோதுவதற்கு தன்னம்பிக்கை இருக்கவேண்டும்.
அன்று கரகோஷத்தால் அந்த மண்டபம் அதிர்ந்தது, அதன் பிறகு 22 வருடங்களின் பின்னர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் அதே மக்களின் மனங்கள் அதிர்ந்தன.
அந்தக் கூட்டம் முடிந்ததும் அந்த மண்டபத்திற்கு அருகிலிருந்த மற்றும் ஒரு மண்டபத்தில் நெடுமாறனுடன் தேநீர் அருந்தியவாறு உரையாடினேன்.
அந்தக்கேள்வியை அனுப்பியது நான்தான் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். தொடர்ந்தும் இந்தியத்தலையீட்டில் இருக்கும் எனது சந்தேகங்களை அவருடன் பகிர்ந்தேன்.
ஆனால், இந்தியாவால் முக்கியமாக தமிழகத்தினால் இலங்கைத்தமிழர்களுக்கு அர்த்தமுள்ள நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் பேசினார்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரும் பிரபாகரன் இன்னமும் உயிருடன் எங்கோ இருக்கிறார் என சொல்லிவந்ததும் அவர்தான். அவரது நம்பிக்கை அவருடன், எமது நம்பிக்கை எம்மோடு. எனினும், எனக்கு அவர் மீதுள்ள மரியாதை குறையவில்லை.
வன்னியில் நீடித்த போரினால் பாதிப்புற்றவர்களுக்கும் காயப்பட்டவர்களுக்கும் மருந்துவகைகளை சேகரித்து செஞ்சிலுவைச்சங்கம் ஊடாக கப்பலில் அனுப்புவதற்கு முயன்ற மனிதாபிமானி அவர்.
விடுதலைப்புலிகளுக்குத்தான் அவற்றை அனுப்ப முயற்சிக்கிறார் என்று நம்பிய இலங்கை அரசு அதனைத்தடுத்தது. இறுதியில் பழ. நெடுமாறன் உண்ணாவிரதம் இருந்தும் போராடினார். அந்தப்போராட்டமும் வழக்கம்போன்று கைவிடப்பட்டது. அவர் படகுகளிலே ஆயிரக்கணக்கானோரை அழைத்துக்கொண்டு புறப்பட்டபொழுதும் அந்த முயற்சியும் பலிதமாகவில்லை. இவ்வாறு வடக்கில் வாழும் ஈழத்தமிழர்களுக்காக அவர் பல மனிதாபிமான முன்னெடுப்புகளை மேற்கொண்ட காலங்களில் யாழ்ப்பாணத்தில் சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக காண்பிக்கப்பட்டன.
இதுபற்றி உரையாடுவதற்கு நண்பர் தர்மசேகரத்தை அச்சமயங்களில் நான் தேடுவதுண்டு.
அவர் தற்போது குவின்ஸ்லாந்து மாநிலத்தில் வயது மூப்பின் காரணமாக ஒரு காப்பகத்தில் தங்கியிருக்கிறார். அவ்வப்போது அவருடன் தொலைபேசியில் உரையாடி சுகநலம் விசாரிப்பேன். மீண்டும் மெய்யியல் அறிஞர் வோல்டேயரின் கூற்றை நினைத்துக்கொள்ளுங்கள்.
பழ.நெடுமாறனின் புதல்வர் மாணிக்கம் என்பவர் பின்னாளில் பெளத்த சமயத்தை தழுவி, பிக்குவாக துறவறம் பூண்டு, மெல்பனில் இறை பணிதொடர்ந்தார். இவரை, மருத்துவர் பொன். சத்தியநாதனின் இறுதி நிகழ்வில் சந்தித்து உரையாடினேன்.
தற்போது, பழ. நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற 1208 பக்கங்கள் கொண்ட பெரிய நூலை படித்துக்கொண்டிருக்கின்றேன்.
( தொடரும் )