கட்டுரைகள்
இலங்கை நிலை!…. சங்கர சுப்பிரமணியன்.
எந்த ஒரு செயலுக்கும் ஒரு பின் விளைவு உண்டு. இதேபோல் இலங்கை அரசியலில் பெரும்பான்மையாக இருந்து அரசை நடத்தியவர்கள் செய்த செயல்களின் பின் விளைவுதான் இன்றைய நிலைக்கு காரணம் என்பது பொருளாதார வல்லுனர்களின் கணிப்பு. அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்ற கருத்தின்படி பொருள் இல்லாததால் இலங்கைக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த துன்பநிலைக்கு யார் காரணம்? அப்பாவி மக்களை குற்றம் சுமத்த முடியாது. அதற்காக குற்றம் சுமத்தாமலும் இருக்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் நாட்டின் பொருளாதாரத்தை சரிவர நிர்வாகிக்காததுதான். இதற்கு குறிப்பிட்ட முப்பது ஆண்டுகளாக இலங்கையை ஆட்சி செய்தவர்கள்தான் காரணம். இந்த முப்பது ஆண்டுகளில் இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்ததே காரணம். ஒரு நோய் என்று வந்தால் அதன் காரணத்தை அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சையை கொடுப்பதே நல்லது. அந்த நோய்க்கு, நோய் சிறிதாக இருக்கும்போதே குணப்படுத்தாமல் அதை பெரிதாக வளரவிட்டு அதன்பின் சிகிச்சை என்றபேரில் உள்நாட்டு மருத்துவ நிபணர்கள் மூலம் பணத்தை அதிகம் செலவுசெய்தும் பலன் கிடைக்கவில்லை. அடுத்தபடி பலநாடுகளிலிருந்து மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்து பெரும் பணம் செலவு செய்து சிகிச்சை அளித்தார்கள். வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் வந்து சிகிச்சை கொடுத்ததி்ல் நோயாளி இறந்துதான் மிச்சம். இந்த சிகிச்சைக்காக வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் இலவசமாக சிகிச்சை அளித்திருப்பார்களா? அவர்களுக்கு ஏகப்பட்ட பணம் கொடுக்கவேண்டும். குறைந்த அளவு பணம் என்றால் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்திருக்கலாம். பெருந்தொகை என்றால் என்ன செய்வது? அதிக வட்டிக்குத்தான் கடன் வாங்க வேண்டும். இவ்வாறு அதிக வட்டிக்கு கடன்வாங்கியதால் வட்டியைக் கூட கட்டமுடியவில்லை. வட்டியை கட்ட வருமானமும் இல்லை. சிகிச்சையில் முழுகவனத்தையும் செலுத்தியதால் வீட்டு வருமானத்தைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. கையில் பணமில்லாமல் வட்டி கட்டமுடியாது போனதால் வட்டிகட்ட வட்டிக்கு பணம் வாங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொன், பொருட்களை விற்கும் சூழ்நிலை வந்தது. தன் அழகான வீட்டின் ஒருபகுதியையே கடன் கொடுத்தவருக்கு ஒத்திக்கு கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வளவு நடந்தும் பிரச்சனை தீரவில்லை. பணமில்லாததால் வீட்டில் உள்ளவர்களுக்கு உணவளிக்க முடியவில்லை. மருத்துவ வசதியை கொடுக்கமுடியவில்லை. குழந்தைகளைப் படிக்கவைக்க முடியவில்லை இப்படி பல பிரச்சனைகள் அக்குடும்பத்தை சூழ்ந்து கொண்டன. இதனால் குடும்பத்துக்குள்ளே பிரச்சனை. இந்த பெரும் சிக்கலில் இருந்து வரமுடியாமல் அக்குடும்பம் தத்தளிக்கிறது. கிட்டத்தட்ட இந்த குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள நிலைதான் இலங்கை என்ற நாட்டிற்கும் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டுப் போருக்கு அடிப்படை காரணத்தை அறிந்து அதை அரசாங்கம் சீர்செய்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் போர் நடக்குமளவுக்கு சூழ்நிலையை ஏற்படுத்தியது இந்நிலைக்கு ஒரு காரணம். போர் புரிய இராணுவத்தளவாடங்களை அளவுக்கு அதிகமாக வாங்கிக் குவித்ததால் ஏற்பட்டகடன். போரை முடித்து வைப்பதற்கே தமது செல்வத்தை எல்லாம் இழந்து பெரிய அளவில் கடனாளியாக வேண்டியதிருந்தது. அடுத்ததாக ஒரு நாட்டில் உள்நாட்டு உற்பத்தியை கட்டமைக்க வேண்டும். அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போரில்தான் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது. எந்த ஒரு நாடும் இறக்குமதியை மட்டும் நம்பி வாழ்ந்துவிட முடியாது. இறக்குமதி தேவைதான். அது கட்டுக்குள் இருக்க வேண்டும். ஒருபோதும் கண்ணை விற்று ஓவியம் வாங்கும் நிலைக்கு செல்லக்கூடாது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் இலங்கையில் ஏற்றமதி இருபது சதவீதம் மட்டுமே. ஆனால் இறக்குமதியோ என்பது சதவீதம். பொருளாதார நிபுணர்களும் பத்திரிகையாளர்களும் கூறிவரும் செய்தியில் இருந்து ஒன்றை தெரிந்து கொண்டேன். இலங்கையின் பொருளாதாரமே சுற்றுலா, தேயிலை மற்றும் துணி உற்பத்தி இவற்றில்தான் அடங்கியுள்ளது. கொரோனா தொற்றால் சுற்றுலா என்பது இலங்கையில் பெருத்த அடியை வாங்கியுள்ளது. மற்ற நாடுகளிலும் சுற்றுலாத் துறைமூலம் இழப்பு இருந்தாலும் அதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடிந்தது. இலங்கை போன்ற சுற்றுலா பயணிகளை நம்பிவாழும் நாட்டால் அவ்விழப்பை எதிர்கொள்ள முடியவில்லை. அடுத்ததாக தேயிலை. விவசாயத்தில் புதிதாக கொண்டு வந்த அணுகுமுறையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதுவரை பயன்படுத்தி வந்த செயற்கை உரத்தை மாற்றி இயற்கை உரத்துக்கு மாறியது. இயற்கை உரத்துக்கு மாறுவதில் தவறில்லை. ஆனால் அதை படிப்படியாக செய்யாமல் அதிரடியாக செய்ததுதான் தவறு. இது எப்படி இருக்கிறதென்றால் மதுவுக்கு முழுமையாக அடிமையாகி விட்ட ஒருவனை ஒரே நாளில் அப்பழக்கத்தில் இருந்து மீட்டுவிட வேண்டும் என்பதைப் போன்றுள்ளது. செயற்கை உரத்தினால் மண்ணின் வளமானது முற்றாக மலட்டுத்தன்மை அடைந்துள்ளது. அதைமாற்றி அமைப்பதென்றால் ஒரே நாளில் முடியாது. படிப்படியாகத்தான் செய்யவேண்டும். சிறிய அளவில் இயற்கை உரத்தை ஆரம்பித்து படிப்படியாக இயற்கை உரத்தை கூட்டி செயற்கை உரத்தை குறைக்க வேண்டும். இந்த முறையைக் கையாளும்முன் இத்துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனை கேட்கப்பட்டிருக்க வேண்டும். இப்படி பல பிரச்சனைகளே இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். இப்போது இந்த வீழ்ச்சியில் இருந்து மீள முடியுமா? என்றால் மீள முடியும் என்கிறார்கள் இப்பிரச்சனையை உற்றுநோக்கி வருபவர்கள். முதலில் இலங்கையில் வாழும் எல்லா இனமக்களும் ஒன்றிணந்து பாடுபடவேண்டும். தற்போது நடக்கும் போராட்டத்தில் இலங்கையின் பேரின மக்கள்தான் அதிக அளவில் பங்குபெற்று போராடி வருகிறார்கள் என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. மற்ற இனமக்கள் ஓரளவே போராடி வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஏனேன்றால் இதே பிரச்சனையை பல ஆண்டுகளாக மற்றவர்கள் அனுபவித்து வருகிறார்கள். மற்றவர்களும் முழு அளவில் பங்கேற்க வேண்டுமெனில் பேரின மக்கள் சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெறவேண்டும். எல்லோரும் சம உரிமையுடன் வாழ இச்சமயத்தில் வழிகாண வேண்டும். சம உரிமையையும் முன்வைத்து பேரினமக்கள் போராடினால் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள முன் வருவார்கள். உலக வங்கி கடனுதவி அளிக்க முன்வந்தாலும் சிலவிதி முறைகளின் அடிப்படையில்தான் கொடுப்பார்கள். இவ்வங்கியானது மேற்கத்திய நாட்டுகளின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால் அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். அந்த கட்டுப்பாட்டுக்கு இலங்கை மக்கள் அனைவருமே கட்டுப்பட்டவர்கள். ஒன்றாய் இணைந்து பல இன்னல்களை நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை சீரமைப்பதற்காக பாடுபட்டபின் பலனாக சம உரிமை இல்லை என்றால் சிறுபான்மையினரின் பங்களிப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிடும். இந்த பொருளாதார வீழ்ச்சிக்கான போராட்டத்தில் சிறுபான்மையினரை பயன்படுத்திக் கொண்டு தங்களது எதிர்பார்ப்பு நிறைவேறியதும் மறுபடியும் அவர்களை தொடங்கிய இடத்திலேயே விட்டுவிட்டால் இனிவரும் காலங்களில் எந்த ஒரு போராட்டத்தையும் இணைந்து நடத்தும் வாய்ப்பே இல்லாது போய்விடும். தீமையிலும் நன்மை என்பதுபோல் இச்சூழல் இலங்கைவாழ் மக்கள் அனைவரும் சம உரிமையுடன் வாழ வழித்தடம் அமைக்கும் என்று எதிர்பார்ப்போம். -சங்கர சுப்பிரமணியன்.