“வாக்குமூலம்”…. 10 ….. பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனவாதமே!…. தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு ராஜபக்சாக்களே முழுக்காரணம் எனக் கூறப்படுகிறது. இதில் கணிசமான பின்னமளவு உண்மையிருந்தாலும் கூட இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீரழிவுக்கு ராஜபக்சாக்கள் மட்டுமல்ல (இவர்களுக்குப் பெரும் பங்குண்டு) சுதந்திர இலங்கையில் அவ்வப்போது விட்டுவிட்டு ஆட்சி செய்த சேனாநாயக்காக்களும் பண்டாரநாயக்காக்களும்தான் ராஜபக்சாக்களுடன் சேர்த்துக் கூட்டுக் காரணகர்த்தாக்களாவர். நாட்டில் என்ன பிரச்சினையெழுந்தாலும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்திடமே முறையிடுவதும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தையே குறைகூறுவதும் கண்டிப்பதும் ஆட்சியிலுள்ள அரசாங்கமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டுமென்பதும் தவிர்க்க முடியாதது; இயல்பானது. இதுவே நடைமுறை. ஆனால், காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக ராஜபக்சாக்களில் ஒருவரான கோட்டபாய ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் இந்தப் பொருளாதாரச் சீர்கேடு ஏற்பட்டாலும்கூட இந்நிலைமை சேனநாயக்காக்களும் பண்டாரநாயக்காக்களும் முன்னர் செய்த தவறுகளினதும் பின்னர் ராஜபக்சாக்களும் செய்த தவறுகளினதும் தொடர்ச்சிதான் – ஒட்டுமொத்த விளைவுதான் என்பதை இலங்கை மக்கள் உணரும்போதுதான் இந்தச் சீரழிவிலிருந்து மீளுவதற்குரிய உபாயம் வெளிப்படும். இனவாத அரசியலைக் கடந்து சிந்திக்க வேண்டிய விடயம் இது.
இலங்கை பிரிட்டிஸ் ஆளுகையிலிருந்து சுதந்திரம் பெறும்போது (1948) இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தது தேயிலை, இறப்பர் முதலான பெருந்தோட்டக் கைத்தொழிலாகும். இக்கைத்தொழிலின் நெம்புகோலாகத் திகழ்ந்தவர்கள் இலங்கையின் மலையக மண்ணின் இந்திய வம்சாவளித் தொழிலாளர்களாவர். சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா தலைமையிலான அரசாங்கம் 1948இல் மலையகத்தமிழர்களின் வாக்குரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கி அதன் விளைவாகக் காலப்போக்கில் சுமார் பத்துலட்சம் இந்திய வம்சாவளியினரை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாடு கடத்தியமைதான் இலங்கைப் பொருளாதாரத்தின் மீது விழுந்த ‘முதல் அடி’ ஆகும்.
இந்த ‘முதல் அடி’க்கு அடியெடுத்துக் கொடுத்தவர்கள் சேனநாயக்காக்கள்தான்.
இவ்வாறு நாடு கடத்தப்பட்ட மலையகத் தமிழர்கள் பெருந்தோட்டக் கைத்தொழிலில் பரிச்சயப்பட்ட-தொழில்சார் நிபுணத்துவம் பெற்ற திறமைத் தொழிலாளர்கள் (Skilled Workers) ஆவர். இவர்களது வெளியேற்றம் பெருதோட்டக் கைத்தொழிலில் பாதிப்பை ஏற்படுத்திற்று. ஆனால், இலங்கையின் இனவாத அரசாங்கங்கள் இதனைப் பொருட்படுத்தவில்லை.
1956இல் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர். பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் கொண்டுவந்து நிறைவேற்றிய அரசகரும மொழிச்சட்டம்தான் 1958இன் நாடளாவிய தமிழ் சிங்கள இனக்கலவரத்திற்கு வித்திட்டது. 1958 கலவரத்தின் போது தென்னிலங்கையில் காவுகொள்ளப்பட்ட தமிழர்களின் உயிர்களும் சேதப்படுத்தப்பட்ட தமிழர்களின் சொத்துக்களும் இலங்கை மக்களின் உயிர்களும் இலங்கையின் சொத்துக்களும்தான் என்பதை இக்கலவரத்திற்குக் காரணமாயிருந்த தென்னிலங்கைச் சிங்களத் தலைவர்கள் உணரத்தவறினார்கள். இக்கலவரத்தில் தென்னிலங்கையில் சிங்களவர்களால் சிதைக்கப்பட்ட தமிழர்களின் சொத்துக்கள் இலங்கைப் பொருளாதாரத்தின் மீது விழுந்த ‘இரண்டாவது அடி’ ஆகும். இந்த ‘இரண்டாவது அடி’க்கு அடியெடுத்துக் கொடுத்தவர்கள் பண்டாரநாயக்காக்கள்தான்.
பின்னர், பண்டாரநாயக்கா வழிவந்த பிரதமர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான 1970 -1977 காலப்பகுதியில் இவ்வரசாங்கத்தின் இனவாத நடவடிக்கைகளுக்கு அப்பால் இலங்கையின் பொருளாதாரத்தில் சீர்திருத்த முயற்சிகள் சில முன்னெடுக்கப்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை. உள்ளூர் உற்பத்திகளை ஊக்கப்படுத்தி அதிகரிக்கும் முற்போக்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் இந்த அரசாங்கத்தின் இனவாத அரசியலால் இப்பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் இந்நாட்டு மக்கள் அனைவரும் முழுமனதோடு பங்கேற்கவில்லையென்பதைக் கூறித்தான் ஆக வேண்டும். எத்திட்டமாகவிருந்தாலும் நாட்டுமக்களின் முழுமையான – உளப்பூர்வமான பங்களிப்புத்தான் வெற்றியைக் கொண்டுவரும். 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியும் பொருளாதாரம் பாதிப்புறப் பங்களித்தது.
மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் தோட்டங்களிருந்து பலவந்தமாக வாகனங்களில் ஏற்றப்பட்டுத் தெருக்களில் இறக்கிவிடப்பட்ட கொடுமையும் இவரது ஆட்சியில் இடம்பெற்றது என்பதையும் வரலாறு பதிவுசெய்து வைத்திருக்கிறது.
1977இல் பிரதமரானவரும் சேனநாயக்கா வழிவந்தவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா திறந்த பொருளாதாரத்தை அறிமுகம் செய்தார். உலகமயமாக்கலைக் கண்ணை மூடிக்கொண்டு அனுமதித்தார். ‘தர்மிஸ்ட அரசாங்கம்’ என்று தனது அரசாங்கத்தை வர்ணித்துக் கொண்டு 1977இல் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட தமிழ் சிங்கள இனக்கலவரத்திற்கு அரச அனுசரணை வழங்கினார். விளைவு தென்னிலங்கையில் நூற்றுக்கணக்கான தமிழர்களின் உயிர்களும் தமிழர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களும் அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்டவை தமிழர்களினது உயிர்களும் சொத்துக்களுமே என்று அரசாங்கம் அலட்சியமாக இருந்ததே தவிர அவை இலங்கை மக்களினது உயிர்களும் இலங்கையின் சொத்துக்களும் என்பதை மனங்கொள்ளத் தவறியது. இக் கலவரத்தின்போது அழிக்கப்பட்ட சொத்துக்கள் இலங்கைப் பொருளாதாரத்தின்மீது விழுந்த ‘மூன்றாவது அடி’ ஆகும். இம் ‘மூன்றாவது அடி’க்கு அடியெடுத்துக் கொடுத்தவர்கள் சேனநாயக்கா வழிவந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் அவரது சிங்கள அமைச்சரவைச் சகாக்களுமேதான்.
1977இல் பிரதமராகிப் பின் புதிய அரசியலமைப்பின் மூலம் தன்னை 1978இல் நிறைவேற்று ஜனாதிபதியாக ஆக்கிக் கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ‘ஆணைப் பெண்ணாக்குவதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்து காட்டுவேன். ‘ இலங்கையைச் சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவேன் என்று தம்பட்டமடித்து அவர் அறிமுகம் செய்த திறந்த பொருளாதாரக் கொள்கையால் இலங்கைப் பொருளாதாரம் வீங்கியதே தவிர வளரவில்லை. வீக்கத்தை வளர்ச்சியாகக் கொள்ளமுடியாது.
‘திறந்த பொருளாதாரம்’ உள்ளூர் உற்பத்தியினைப் பாதித்தது. இலங்கை மக்களுக்கு அத்தியாவசியமற்ற பொருட்களின் சந்தையைத் திறந்து விட்டது. இலங்கை மக்களின் பாரம்பரிய நுகர்வுக் கலாசாரம் பாதிப்புற்று நுகர்வுக் கலாசாரத்தில் ஆடம்பரப் பொருட்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. ஆயுதங்களும், போதைப்பொருட்களும் மக்களின் அன்றாட வாழ்வில் நுழையத் தொடங்கின. திறந்த பொருளாதாரக் கொள்கையும் உலகமயமாக்கமும் வெறுமனே பகட்டுத் தனமான வாழ்க்கையையே மக்களுக்குக் கற்றுக்கொடுத்தது. இது மக்களின் ஆடம்பரத் தேவைகளை அதிகரித்துப் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்திற்று. போதாதென்று 1983 ஜுலையில் அரசாங்கமே திட்டமிட்டுத் தென்னிலங்கையில் தமிழர்களுக்கெதிராக மேற்கொண்ட வன்முறைகளால் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களும் பலகோடிச் சொத்துக்களும் பேரழிவுக்குள்ளாக்கப்பட்டன. இக்கலவரத்தால் ஏற்பட்ட அழிவுகள் இலங்கைப் பொருளாதாரத்தின்மீது விழுந்த ‘இன்னோர் அடி’ என்பதை சிங்கள இனவாத ஆட்சியாளர்கள் எண்ணத்தவறினர்.
1983 இனக்கலவரம் பொருளாதார நட்டத்தை மட்டுமல்ல இன்னுமொரு பயங்கர விளைவையும் அறுவடையாகத் தந்தது. சுதந்திர இலங்கையில் காலத்திற்குக் காலம் ஆட்சியிலிருந்த பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களின் இனவாத நடவடிக்கைகளால் ‘அடிமை நோய்’ கண்டிருந்த இலங்கைத் தமிழர்களிடையே அம்மை நோய் கண்ட உடம்பில் ஆங்காங்கே கொப்புளங்கள் தோன்றுவதைப்போல 1970களிலிருந்து ஆரம்பித்த தமிழர்களின் அரசாங்கத்திற்கெதிரான ஆயுத நடவடிக்கைகள் 1983 கலவரத்தின்பின் மேலும் கூர்மையடைந்து உள்நாட்டு யுத்தமாக வடிவெடுத்தது.
பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கத்திற்கெதிரான தமிழ் இளைஞர்களின் போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் மேற்கொண்ட ஆயுத நடவடிக்கைகள் முடிவில் மரபுவழி யுத்தமொன்றை உள்நாட்டில் உருவாக்கி அரசாங்கங்களின் பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரித்தது. இந்த யுத்தத்தினால் இலங்கையைப் போன்று அபிவிருத்தியடைந்துவரும் நாடொன்றின் பாதுகாப்புச் செலவீனம் ‘ குருவி தலையில் தேங்காய்’ ஆனது. தேசிய ஒருமைப்பாட்டின்மீதும் சமூக நல்லிணக்கத்தின்மீதும் கட்டியெழுப்பப்படும் பொருளாதாரமே வலிமையானது.
தனிப்பட்ட முறையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாவிட்டாலும்கூட இவர் தலைமையிலான (1977-1989) பன்னிரண்டு வருடகால ஆட்சியில் அரசாங்க நிறுவனங்களில் அதிகார துஸ்பிரயோகங்களும் ஊழல் மோசடிகளும் இடம்பெறத்தொடங்கின.
1977இல் ஆட்சிக்கு வந்தபோதே பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களை விளித்துப் “போர் என்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்.” என்றுரைத்து யுத்தப் பேரிகையை முழங்கித் தமிழர்களுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை மேலும் முடுக்கி வைத்து இலங்கையின் வரவுச்செலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்கெனப் பெருமளவு நிதியை ஓதுக்கீடு செய்தார். வரவுசெலவுத்திட்டத்தில் வருடாவருடம் பாரிய பற்றாக்குறை (துண்டு விழும் தொகை) ஏற்படத் தொடங்கியது. ஏற்றுமதிப் பொருளாதார வீழ்ச்சியும் இதற்குக் காரணமாகும்.
வருடாவருடம் அதிகரிக்கும் பாதுகாப்புச் செலவீனமும்- அரச இயந்திரத்தில் புரையோடிப்போன அதிகார துஸ்பிரயோகங்களும் ஊழல் மோசடிகளும் நாட்டின் பொருளாதாரத்தைச் செல்லரிக்கத் தொடங்கியதை அமெரிக்க ஏகாதிபத்தியவாதியும்- முதலாளித்துவப் பொருளாதாரத்தின்மீது நம்பிக்கை கொண்டவரும்-சர்வாதிகாரப்போக்குடையவரும் – தெற்காசியாவின் ‘அரசியல் குள்ள நரி’ என்று வர்ணிக்கப்பட்டவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கண்டும் காணாதது போல் இருந்துவிட்டார்.
1988இன் இறுதிப்பகுதியில் ஐனாதிபதியான ரணசிங்க பிரேமதாச கிராம மட்டத்திலிருந்து சில பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை அதாவது கீழிருந்து மேல் நோக்கிச் செலுத்தியது முற்போக்கானதென்றாலும்கூட அவரது அதிகாரப்பகிர்வுக்கெதிரான- 1987இல் கைச்சாத்தான இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்திற்கு எதிரான இனவாத அரசியல் முன்னெடுப்புகளால் ஏற்பட்ட அழிவுகளும்- 1989இன் ஜே.வி.பி கிளர்ச்சியும் -1991இலே அவர் கொல்லப்பட்டமையும் அவர் மனங்கொண்டிருந்த சோசலிச பொருளாதாரக் கொள்கையைத் தோல்வியுறச் செய்தன. இதற்கும் காரணம் யுத்தமும் யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகளும் அதற்குக் காரணமாயிருந்த தீர்க்கப்படாத இனப்பிரச்சினையுமே.
ரணசிங்க பிரேமதாசாவின் கொலை மரணத்தின் பின்பு ஜனாதிபதிப் பதவியை மிகுதிக் காலத்திற்கு (1991-1994) வகித்த டி.பி.விஜயதுங்காவின் ஆட்சிக்காலம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஓர் ‘இருண்ட காலம்’ ஆகும்.
1994இல் இலங்கையின் மூவின மக்களினதும் அமோக ஆதரவைப்பெற்றுச் ‘சமாதானத் தேவதை’ யாக ஜனாதிபதிப் பதவியேற்ற திருமதி.சந்திரிக்கா விஜயகுமாரணதுங்க பண்டாரநாயக்கா அவர்கள் மீண்டும் 1999 ஜனாதிபதித் தேர்தலில் வென்று 2004 வரை பதவிவகித்தார். அவருடைய மொத்த ஜனாதிபதிப் பதவிக்காலம் பத்து வருடங்கள் (1994-2004) ஆகும்.
சந்திரிக்கா அவர்கள் 1977இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அறிமுகம் செய்த திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றீடாக ‘மனிதாபிமானம் கொண்ட திறந்த பொருளாதாரம்’ (Open Economy With Human Face) எனும் புதிய கலப்புப்பொருளாதாரக் கொள்கையை அறிமுகம் செய்தார். அது ஒரளவு சோசலிசப் பொருளாதாரத்தை ஊடுநோக்காகக் கொண்டிருந்தது.
அத்துடன் பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் கீழான மாகாணசபைகளுக்கான அதிகாரத்தை முழுமையாக அமுல்செய்ய அவர் அரசியல் அவாக் கொண்டிருந்தார்.
மட்டுமல்ல இலங்கையின் இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வை எட்டக்கூடிய ‘இலங்கையானது பிராந்தியங்களின் ஒன்றியம்’ எனும் அடிப்படையிலான அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் முற்போக்கான’ ‘அரசியல் பொதி’ யொன்றையும் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து இலங்கையின் பொருளாதாரத்தை விழுங்கிக் கொண்டிருந்த யுத்த அரக்கனை முடிவுக்குக் கொண்டுவர உளமார முனைந்தார்.
ஆனால், சந்திரிக்காவின் சமாதான முயற்சிகளை ஜே.பி.பி கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் குழப்பின. இதனை ஓரளவு புரிந்துகொள்ளமுடியும். ஆனால் தமிழர்களுக்குச் சாதகமான இச்சமாதான முயற்சிகளைத் தமிழீழ விடுதலைப்புலிகளும் அப்போது தமிழர்தரப்பில் அரசியல் தலைமையை ஏற்றிருந்த முன்னாள் தமிழர் விடுதலைக்கூட்டணியும் (செயலாளர் நாயகமாக இரா.சம்பந்தன் இருந்தார்) தொடர்ந்து தமிழ்தேசியக் கூட்டமைப்பும் (தலைவராக இரா.சம்பந்தன் இருந்தார்) குழப்பியது துரதிஸ்டவசமானதே.
தமிழர்தரப்பு தனது தலையிலே தானே மண்ணள்ளிப் போட்டுக்கொண்டதாகத்தான் இதனைக் கருதவேண்டியுள்ளது.
சந்திரிக்காவுக்குப்பின் 2004இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மஹிந்தராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றை விபரிக்கத் தேவையில்லை. அது அனைவரும் அறிந்ததே. யுத்தம் தீவிரமடைந்தது. பேரழிவுகள் ஏற்பட்டன பொருளாதாரச் சீரழிவு இனவாத அரசியலால் மூடி மறைக்கப்பட்டது 2004ல் இருந்து 2014 வரையிலான காலத்தில் இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட ‘புறவீக்கம்’ வளர்ச்சியாக மக்களுக்குக் காட்டப்பட்டது ‘கார்பட்’ வீதிகளும் – அதிவேக நெடுஞ்சாலைகளும் – தாமரைத் தடாகக் கட்டிடங்களும், கோபுரங்களுமே அபிவிருத்தி எனத் தோற்றம் காட்டின. என்றுமேயில்லாதவாறு வெளிநாட்டுக் கடன்களும் அவற்றிற்குரிய வட்டிக் கொடுப்பனவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து அதன்விளைவு (பொருளாதார) வீக்கம் வெடித்து இப்போது சீழ் வடியும் பெரும் ‘புண்ணாகி’விட்டது.
மஹிந்தராஜபக்ச அவர்களின் ஆட்சிகாலத்தில் கட்டுப்பாடற்ற வெளிநாட்டுக் கடன்களும், அந்நிய முதலீடுகளும் – பல்தேசியக் கம்பனிகளின் பெருக்கமும் – உள்நாட்டு உற்பத்திகளின்மீதும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின்மீதும் ஏற்பட்ட இறக்கங்களும்- நாட்டுடைமைகளினதும் வளங்களினதும் தாரைவார்ப்புக்களும் – ‘கொமிசன்’ வியாபாரமும் அதிகரித்தன. அதனால் பெரும்வர்த்தகர்களும் – அரசியல்வாதிகளும் – ஒப்பந்தக்காரர்களும் -‘கொமிசன்’ வியாபாரிகளும் ஆதாயம் அடைந்தார்களே தவிர சாதாரண மக்கள் நன்மையடையவில்லை. மேற்கூறப்பட்ட எதிர்மறையான விடயங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் யுத்த வெற்றி பற்றிய வீரதீரப்பிரதாபங்களாலும் அதனை வழிநடத்திய பௌத்த சிங்களப் பேரினவாத அரசியலாலும் மக்களுக்கு மறைக்கப்பட்டன. இலங்கையின் நீதித்துறை மற்றும் காவல்துறைச் செயற்பாடுகளின் மீதும் மனித உரிமைகள் செயற்பாடுகளின் மீதும் சர்வதேச சமூகம் எதிர்மறையான அபிப்பிராயங்கள் கொள்ளத் தொடங்கியதைக்கூட கவனத்தில் கொள்ளாது தட்டிக்கழிக்கும் மனோபாவமே மஹிந்தராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிலவிற்று. இதுகூட இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின்மீது ஒரு தார்மீகத்தாக்கத்தை வெளித்தெரியாமல் ஏற்படுத்திற்று.
2015 ஜனவரி ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்தராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகிப் பின் அதே ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலின்பின் நிறுவப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ‘நல்லாட்சி’க் காலத்திலும் (2015- 2019) எந்த மாற்றமும் ஏற்படவில்லை. யுத்தம் முடிவடைந்திருந்தாலும் கூட அதிகாரப்பகிர்வு விடயத்திலும் இனங்களுக்கிடையேயான நல்லெண்ண விவகாரத்திலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதிகாரப்பகிர்வும் பொருளாதார அபிவிருத்தியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த விடயங்களானதால் நல்லாட்சிக் காலத்திலும்கூட பொருளாதார அபிவிருத்தியென்பது பொய்க்கோலமே காட்டிற்று
2019 நவம்பர் ஜனாதிபதித்தேர்தலில் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாகிப் பின்னர் 2020 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜனபெரமுன வென்று மஹிந்தராஜபக்ச பிரதமராகி ராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ள இன்றைய நிலையில்தான் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி வெடித்துக் கிளம்பியிருக்கிறது.
சுமார் முப்பது ஆண்டு காலமாக நடைபெற்று 2009இல் ஏதோ ஒரு வழியில் முடிவுக்கு வந்த யுத்தம் எந்தக் கட்சி அதிகாரத்தில் இருந்தபோதிலும் யார் ஆட்சித் தலைவராயிருந்தபோதிலும் பலலட்சம் கோடிப்பணத்தை பாதுகாப்புச் செலவீனமாக விழுங்கியது மட்டுமல்ல பல்லாயிரம் உயிர்களையும் பலலட்சம் கோடிச் சொத்துக்களையும் காவுகொண்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் பல்லாயிரக் கணக்கான ‘மூளைசாலிகள்’ நாட்டை விட்டு வெளியேறினர். வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து சுமார் பதினைந்துலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றார்கள். இதனால் விவசாயம் உட்படப் பல உள்ளூர் உற்பத்தித் தொழில்கள் நலிவுற்றன. அல்லது கைவிடப்பட்டன. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீன்பிடித் தொழிலும், வேளாண்மைத் தொழிலும், கால்நடை வளர்ப்பும், கிராமியப் பொருளாதார முயற்சிகளும், இயற்கை விவசாயமும் – பாரம்பரியக் கைதொழில்களும், உப உணவு உற்பத்திகளும் வெகுவாகக் குறைந்தன. இவை இலங்கைப் பொருளாதாரத்தின்மீது மறைமுகமாக ஏற்படுத்திய பாரிய பொருளாதாரத் தாக்கத்தைத் தமிழர்களுக்கெதிரான யுத்தமுனைப்பில் மட்டுமே கவனத்தைச் செலுத்திய அரசாங்கங்களால் கண்டு கொள்ள முடியாமல் பௌத்த சிங்களப் பேரினவாத அரசியல் அவற்றின் கண்களை மறைத்தது.
சுதந்திர இலங்கையில் அவ்வப்போது ஏற்பட்ட வெள்ளம் (1957) – சூறாவளி (1978) – சுனாமி (2004) போன்ற இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கங்கள் தவிர்க்க முடியாதவையானாலும்கூட அவை தற்காலிகமானவை மட்டுமல்ல, அவை சிறுகாரணிகளே. அண்மையில் ஏற்பட்ட “கொவிட் – 19” ம் அவ்வாறானதே. ஆனால், யுத்தம் தவிர்த்திருக்கக் கூடியதொன்றாகும். சுதந்திர இலங்கையில் கடந்த எழுபது வருடங்களாக இயங்கிவரும் இனவாத அரசியல்தான் இன்று வீங்கி வெடித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படைக் காரணமாகும்.
ஆனால், முப்பது வருட காலமாக நடைபெற்ற யுத்தப் பாதிப்புகளும் அவ் யுத்தத்திற்குக் காரணமாயிருந்த இதுவரை தீர்க்கப்படாத இலங்கையின் இனப்பிரச்சனையுமே இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்குப் பிரதானமான காரணமென்பதை ஏனோதெரியவில்லை, இலங்கையின் பொருளாதார நிபுணர்களும் அரசியல்வாதிகளும் வெளிப்படுத்தத் துணிகிறார்களில்லை. இன்றைய இலங்கையின் பொருளாதாரக் கையறுநிலைக்குக் காரணம் பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்கள் மட்டுமல்ல அத்தகைய பௌத்த சிங்களப் பேரினவாதத்தை எதிர்கொள்வதற்காகத் தமிழர் தரப்பு கையிலெடுத்த குறுந்தமிழ்த்தேசியவாதக் கொள்கையும் ஓர் “ஊக்கி”யாகத் தொழிற்பட்டது என்ற உண்மையையும் இங்கு பதிவு செய்வது தர்மமாகும்.
எது எப்படியிருப்பினும், 1987இல் ஏற்படுத்தப்பெற்ற இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தமும் – அதன்வாயிலாகக் கொணரப்பட்ட இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டமும் அதன் கீழமைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்த அதிகாரப்பகிர்வு அலகும் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கு அத்திவாரமிட்டன. ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை அரசாங்கமும் – அதனால் அனுகூலங்களைப்பெற வேண்டிய தமிழர் தரப்பும் இவ்வரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறின. இத்தவறுதான் இன்றைய பொருளாதாரச் சீரழிவுக்கான பிரதான காரணியான யுத்தத்தை மேலும் தீவிரமாக்கியது. முன்னைய காலங்களைவிட்டாலும்கூட, 1987இன் பின்னர் ஏற்பட்ட உயிர் அழிவுகளுக்கும் – பொருளாதாரப் பேரழிவுகளுக்கும் – அவற்றின் விளைவாக – நீட்சியாக இன்று இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதாரப் பிரச்சனைக்கும் பிரதானமான காரணம், பதின்மூன்றாவது அரசியல் சட்டத்தின் ஏற்பாடுகளை முழுமையாகவும் – முறையாகவும் – அர்த்தமுள்ள விதத்திலும் – அரப்பணிப்புடனும் – அரசியல் விருப்புடனும் அமுல் செய்யத் தவறிய ஜெயவர்த்தனாக்களும் (ஜே.ஆர்.ஜெயவர்த்தன -1987/88) – பிரேமதாசாக்களும் (ரணசிங்க பிரேமதாச – 1988/1991) – விஜயதுங்காக்களும் (டி.பி.விஜயதுங்க 1991/94) – பண்டாரநாயக்காக்களும் (திருமதி. சந்திரிக்கா விஜயகுமாரணதுங்க பண்டாரநாயக்கா 1994/2005) பண்டாரநாயக்கா வழிவந்த ராஜபக்சாக்களும் (மஹிந்தராஜபக்ச 2005/2015) – பண்டாரநாயக்கா வழிவந்த மைத்திரிபால சிறிசேனாக்களும் சேனநாயக்கா வழிவந்த ரணில்விக்கிரமசிங்காக்களும் இணைந்த ‘நல்லாட்சி’ அரசாங்கமும் (2015/2019)- 2019இல் ஜனாதிபதி பதவிக்கு வந்து இன்றுவரை ஆட்சிப் பொறுப்பிலுள்ள ராஜபக்சாக்களில் ஒருவரான கோத்தபாயவும் என இவர்கள் எல்லோருமே கூட்டுக் காரணகர்த்தாக்களாவர். இலங்கை மக்களின் துரதிஸ்டம் சுதந்திர இலங்கையில் அரசியல்வாதிகள் உருவானார்களே தவிர அரசியல் தலைவர்கள் எவருமே தோன்றவில்லை.
இதனை இக்கட்டத்திலாவது உணர்ந்து இனவாத அரசியலை – பதவி அரசியலைக் கடந்து தென்னிலங்கை அரசியல் சக்திகளும், பௌத்த சிங்களப் பேரினவாத குணாம்சத்தைத் துறந்து தற்போது ஆட்சியிலுள்ள கோட்டபாய அரசாங்கமும் ராஜபக்சாக்களும் அதேபோல் குறுந்தமிழ்த் தேசிய வாதத்தைக் கைவிட்டு இலங்கைத் தமிழர்தரப்பும் (தமிழ்த் தேசியக்கட்சிகளும்) பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை உளப்பூர்வமாக ஏற்று அரசியல் விருப்புடன் அதனை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதற்கு விரைந்து செயற்படுவார்களாயின் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலிலிருந்து இலங்கையை மீட்பதற்குப் புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் இந்திய அரசாங்கமும் அதி உச்சமாக முன்வரலாம் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குப் பகிரப்படும் முழுமையான – நிரந்தரமான உச்ச அதிகாரங்கள் மட்டுமே புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் இலங்கை முதலீடுகளுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்தும். அப்படியானால்தான் இந்தியாவும் அத்தகைய முதலீடுகளுக்கு அனுசரணை வழங்கும்.
இன்று இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் ஏற்கெனவே இந்தியா கைகொடுத்துள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் புவிசார் அரசியல் நீரோட்டங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ற பொருத்தமான திசையில் தமிழ்த்தரப்பு புத்திசாலித்தனமாக நீந்த வேண்டுமே தவிர வெறுமனே எடுத்ததற்கெல்லாம் ‘எதிர்நீச்சல்’ போடுவது என்று கூறி முட்டிமோதுவது (அரசியல்) மதியீனம் ஆகும்.