இலங்கை அரசியலிலும் இலக்கியத்திலும் பௌத்த பிக்குகளின் வகிபாகம்!…. அங்கம்…. 03…. முருகபூபதி.
ஹிஸ்ஸல்லே தம்மரத்தின தேரோ என்ற பெளத்த பிக்கு, ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர், இலங்கையில் சிறப்பாக தமிழ்ப் பணியாற்றினார் என்பது இன்றைய தலைமுறையினருக்கும் இலங்கையிலிருக்கும் மூவினங்களையும் சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கும் தெரியுமா…?
அல்லது இன்று இனவாதம் கக்கும் பொது பலசேனா, இராவண பலய, ஹெலஉருமய முதலான சக்திகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்டிப்படைக்கும் பெளத்த பிக்குகளுக்காவது தெரியுமா? அந்த பௌத்த தேரர், தனது பட்டப்படிப்பிற்கு தமிழை ஒரு பாடமாக பயின்றவர்.
தமிழ் இலக்கணம் சிங்கள மொழியில் கொண்டிருக்கும் செல்வாக்கு பற்றி ஆய்வு நூல்களை எழுதியவர். இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தை பத்தினி தெய்யோ என்ற பெயரில் சிங்களத்தில் மொழிபெயர்த்தார். திருக்குறளையும் தமிழ்ப்படுத்தினார்.
இவரை பாராட்டும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்து டொமினிக்ஜீவா வெளியிட்ட மல்லிகை மாசிகையில், 1972 ஆம் ஆண்டே அட்டைப்பட அதிதியாக கௌரவிக்கப்பட்டார். அத்துடன் நில்லாமல், மினுவாங்கொடையைச்சேர்ந்த தமிழ் அபிமானி பண்டிதர் எம். ரத்னவன்ஸ தேரோவுக்கும் மல்லிகை அதே அட்டைப்பட அதிதி கௌரவத்தை வழங்கியிருக்கிறது. அதுமட்டுமன்றி, மார்டின் விக்கிரசிங்கா, குணசேன விதான, ஆரியரத்தின விதான, சிறிலால் கொடிகார, கே. ஜயதிலக்க, ஜீ.பி. சேனநாயக்கா முதலான சிங்கள இலக்கியவாதிகளின் படைப்புகளையும் மல்லிகை தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்களின் சிறுகதைகளை மொழிபெயர்த்தவர்களில் முஸ்லிம்கள்தான் அநேகம்.
கொழும்பிலிருந்து வெளிவரும் ஞானம், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் ஜீவநதி, மட்டக்களப்பிலிருந்து வரும் மகுடம், அநுராதபுரத்திலிருந்து வரும் படிகள் முதலான இலக்கிய இதழ்களும் பல சிங்களப்படைப்புகளை தமிழுக்குத்தந்துள்ளன. இந்த அரிய பணிகளில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் சகோதரர்களும் சகோதரிகளும்தான்.
இலங்கையில் இனக்கலவரங்கள் வந்த காலத்தில் அநுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்களும் தமிழ்பேசும் முஸ்லிம்களும் தாக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சென்ற ரயிலில் பயணித்த தமிழர்களுக்கு அநுராதபுரம் ரயில் நிலையம் ஒரு கண்டமாகவே அன்று காட்சியளித்தது. அதனால் அதனை அநியாய புரம் என்றும் நாம் முன்னர் வர்ணித்திருக்கின்றோம்.
பல திகிலூட்டும் செய்திகளை கலவர காலத்தில் தந்த அதே அநுராதபுரத்தில்தான், தமிழர்கள் பலர் இரத்தம் சிந்திய அதே மண்ணில்தான் , வண. வரகாவெஹர தம்ம பாலதேரோ என்பவர் சிங்கள மக்கள் சிலருக்கு தமிழ் கற்பித்துவந்தார். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் போயா தினங்களில் தமிழில் பெளத்த தர்மம் பற்றி உரையாற்றியிருக்கிறார்.
இவர் எழுதிய நூல்தான், தமிழ் இலக்கண விமர்சனம். தமிழ் கற்க விரும்பும் மாணவர்களுக்கும் – சிங்கள மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் சிங்கள ஆசிரியர்களுக்கும் பயன் தரக்கூடிய 160 பக்கங்கள் கொண்ட இந்த நூலுக்கு பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தகவுரையும் அரச மொழிகள் திணைக்களத்தின் இணை ஆய்வு அதிகாரி வஜிர பிரபாத் விஜயசிங்க அணிந்துரையும் எழுதியுள்ளனர்.
இந்த அரிய தகவல்களை இலங்கையில் தினகரன் பத்திரிகையில் பல வருடங்களுக்கு முன்னரே எழுதியிருப்பவரும் ஒரு முஸ்லிம்தான். அவர் பெயர் அபூபாஹிம்.
1978 இல் வெளிவந்த கவிய என்ற சிங்கள ஏட்டில் எங்கள் மஹாகவி உருத்திரமூர்த்தியின் பிரபல்யமான மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்ற கவிதையை பராக்கிரமகொடிதுவக்கு என்ற சிங்கள எழுத்தாளர் “சுபவேவா ” ( நல்வாழ்த்து ) என்று சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தத்தகவலையும் தமிழ் வாசகர்களுக்கு மல்லிகை 1979 பெப்ரவரி – மார்ச் இதழில் தந்திருப்பவரும் ஒரு முஸ்லிம்தான். அவர்தான் புத்தளத்தில் வசிக்கும் கவிஞர் ஜவாத்மரைக்கார்.
தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மத்தியில் வாழ்ந்துகொண்டு தமிழுக்காகவும் தமிழ் இலக்கியத்திற்காகவும் பாடுபட்ட பல முஸ்லிம் எழுத்தாளர்களையும் கல்விமான்களையும் நாம் நினைத்துப்பார்க்கின்றோம்.
இவர்கள் செய்திருக்கும் அரிய பணிகளை இன்று முஸ்லிம் மக்களுக்காகவே பிளவுண்டு – அணிதிரண்டு தேர்தல் காலங்களில் வெற்றுவேட்டுத்தீர்க்கும் முஸ்லிம் தலைவர்கள் அறிவார்களா? தமது இனத்திற்கு ஆபத்து வந்தவுடன் வெளிநாட்டிலிருந்து வரும் ஐ.நா.
பிரதிநிதிகளிடம் ஒன்றாகச்சேர்ந்து சென்று முறையிடும் இந்தத் தலைவர்கள், தங்களுக்குள் நீடிக்கும் வேற்றுமைகளை களைந்துவிட்டு இனியாவது ஓரணியில் நின்று தங்கள் இனத்தின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தங்களை அர்ப்பணிக்கமாட்டார்களா?
இலங்கையில் விஹாரையிலிருந்து தம்மபதம் சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய பல பிக்குகள் வெளியே வந்து அரசியல்வாதிகளாகியிருக்கின்றனர். இலங்கையில் என்ன தீர்வு வந்தாலும் அந்த செனட்டர்களின் முடிவுக்குத்தான் அரசு காத்திருக்கிறது! பௌத்த பிக்குகள் நாடாளுமன்றமும் சென்றனர். அவர்கள் தங்களின் புலன் அடக்குவதற்காக மதியம் 12 மணிக்கு முன்பே உணவருந்தவேண்டியவர்கள்!
“விக்கா பதங் சமாதிஹாமி” என்று ஒரு வாக்கியம் அவர்களின் பிரார்த்தனையில் வரும். அவர்கள் மதியத்திற்குப்பின்னர் எதனையும் விழுங்கி உண்ணக்கூடாது. புலன்களை அடக்கி, மக்களிடம் சென்று இரந்துண்டு வாழ்பவர்களும், தமது இருப்பிடம் தேடி பக்தர்கள் கொண்டுவரும் உணவை வாங்கி உண்பவர்களும்தான் உண்மையான பௌத்த தேரர்கள் என்பார் மினுவாங்கொடையில் வாழ்ந்த தமிழ் அபிமானி வண. ரத்னவன்ஸ தேரோ. இவருக்கு முதலில் தமிழ் சொல்லித்தந்தவரும் ஒரு முஸ்லிம்தான்! அவர்தான் பத்திரிகையாளர் எம். ஏ. எம். நிலாம்.
எஸ். டபிள்யூ. ஆர்.டீ. பண்டாரநாயக்கா தனது அரசியல் தேவைக்காக பஞ்சமா பலவேகய (ஐம்பெரும் சக்திகள்) என்ற இயக்கத்திற்குள் இந்த பிக்குகளையும் என்றைக்கு இழுத்தாரோ அன்றே அவருக்கும் கண்டம் வந்தது! தேசத்திற்கும் கண்டம் தொடங்கியது!
இந்தச் செய்திகளிலிருந்து அனைத்து பிக்குகளையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. இந்தப்பதிவில் நான் குறிப்பிடும் ஹிஸ்ஸல்லே தம்மரத்தின தேரோ, ரத்னவன்ஸ தேரோ, வரகாவெஹர தம்ம பாலதேரோ, தம்மதஸ்ஸி தேரோ முதலான பலர் தமிழ் – சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் மதிப்பிற்குரிய அறிஞர்களாகவும் மனிதநேயம் மிக்கவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.
இலங்கையில் வடமேல் மாகாணத்தில் அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம். முன்னாள் பிரதமர்கள் பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா ஆகியோரின் பரம்பரை தேர்தல் தொகுதியையும்
பரம்பரைக்காணிகளையும் கொண்டு விளங்கும் அத்தனகல்லை என்ற நகரத்துக்கு சமீபமான கிராமம்தான் இங்கு நான் குறிப்பிடும் கொரஸ்ஸ. மினுவாங்கொடை என்ற மற்றுமொரு ஊரைக்கடந்து உடுகம்பொலை என்ற இடத்தையும் கடந்து சென்றால் இந்த கொரஸ்ஸ கிராமம் வரும். அங்கே ஒரு பௌத்த விகாரை. அதன் பிரதம குரு (விஹாராதிபதி) வணக்கத்துக்குரிய பண்டிதர் ரத்னவன்ஸ தேரோ. அவரைப்பார்க்கச் செல்பவர்கள் பெரும்பாலும் அந்தக்கிராமத்திலும் அதனைச்சுற்றியுள்ள ஊர்களையும் சேர்ந்த சிங்கள கிராமவாசிகள்தான். அவர்கள்தான் அந்த பௌத்த பிக்குவுக்கு தினமும் தானம் ( மதிய உணவு ) முறைவைத்து கொண்டுவந்து கொடுப்பவர்கள். தினமும் பகலில் மாத்திரம் ஒரு வேளை உணவுண்டு பௌத்த தர்மத்தை மக்களுக்கு போதித்துவந்த அவரைப்பார்க்க அடிக்கடி தமிழ் எழுத்தாளர்களும் சென்றுவந்திருக்கிறார்கள் எனச்சொன்னால் இதனை வாசிக்கும் வாசகர்கள் ஆச்சரியப்படலாம். அதிசயம்தான். ஆனால் உண்மை. பௌத்த பிக்குகள் மத்தியில் இவரை ஆயிரத்தில் ஒருவர் என்றும் குறிப்பிடலாம். காரணம் அரசியலுக்குள் பிரவேசிக்காத இலக்கியவாதி.
இப்பொழுது இலங்கையில் பல பௌத்த பிக்குகள் தமிழ் படிக்கிறார்கள், தமிழ் பேசுகிறார்கள். இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர்தான் இங்கு நான் குறிப்பிடும் வண.ரத்னவன்ஸ தேரோ. 1970 களிலேயே தமிழை மாத்திரமல்ல, நவீன தமிழ் இலக்கியங்களையும் படித்து தேர்ந்தவர் அவர். தமிழ் நூல்களையும் இதழ்களையும் படித்து தமது தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்ட ரத்னவன்ஸ தேரோ, தமது கொரஸ கிராமத்திலும் அருகிலிருந்த வியாங்கொடை, மினுவாங்கொடை முதலான நகரங்களிலும் தமிழ் கற்பிக்கும் வகுப்புகளை உருவாக்கினார். பல சிங்கள ஆசிரியர்களும் பௌத்த பிக்குகளும் மிகுந்த ஆர்வமுடன் தமிழ் கற்க முன்வந்தார்கள்.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவையும் அவருக்கு அறிமுகமானதும் மல்லிகைக்கு சந்தா செலுத்தி தருவித்து படித்தார். அப்பொழுது மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. 1976 ஆம் ஆண்டு மல்லிகையின் முகப்பில் தேரோவின் படம் வெளியானது.
இலங்கை வானொலியில் நடந்த சங்கநாதம் நிகழ்ச்சியில் தேரோ அவர்கள் கலந்துகொண்டு இனிய தமிழில் சிறந்த பேட்டியை வழங்கினார். பேட்டி கண்டவர்:- அன்று வானொலியில் குறிப்பிட்ட சங்கநாதம் நிகழ்ச்சியை தொகுத்து தயாரித்து வழங்கிய பிரபல வானொலி ஊடகக் கலைஞர் வி.என்.மதியழகன். (இவர் தற்போது கனடாவில்)
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை நடத்தியபொழுது முதல் நாள் காலையில் தொடக்கவுரையையும் தமிழில் நிகழ்த்தினார். பின்னர் தமது கொரஸ்ஸ கிராமத்திற்கு முற்போக்கு எழுத்தாளர்களை வரவழைத்து ஒரு சிறப்பான கருத்தரங்கையே ஊர்மக்களைக்கொண்டு நடத்தினார். தேசிய ஒருமைப்பாடு தொடர்பான குறிப்பிட்ட கருத்தரங்கு பற்றிய செய்தியை அன்று வீரகேசரிப் பத்திரிகை தலைப்புச் செய்தியாக வெளியிட்டதுடன் மறுநாள் அதுகுறித்து ஆசிரியத்தலையங்கமும் எழுதியது. தினகரன் வாரமஞ்சரி விரிவான செய்தியை வெளியிட்டது. அக்காலப்பகுதியில் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் இந்த கொரஸ கருத்தரங்கு பரபரப்பாகப்பேசப்பட்டதற்குக் காரணம், அதில் தேரோ அவர்கள் தமிழில் நிகழ்த்திய கருத்தாழம் நிரம்பிய உரைதான். அப்படி என்னதான் பேசிவிட்டார் என்று வாசகர்கள் கேட்கலாம். “ ஒரு இனத்தையோ மொழியையோ அடிமைப்படுத்தி வேறு இனமோ மொழியோ சுபீட்சம் பெற முடியாது. தமிழ் மக்களின் அடிப்படைப்
பிரச்சினைகளுக்கு ஜனநாயகத்தீர்வு காணப்படல்வேண்டும். அப்பொழுதுதான் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும்.” “ ஒரு தமிழ்ப்பெண்ணை ஒரு சிங்கள ஆடவர் திருமணம் முடித்தால் அல்லது ஒரு சிங்களவரை தமிழ்ப்பெண் மணம் முடித்தால் தேசிய ஒருமைப்பாடு பிறந்துவிடும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், நான் அப்படிச்சொல்ல மாட்டேன். அவ்விதம் திருமணம் முடித்தால் தேசிய ஒருமைப்பாடு பிறக்காது, பிள்ளைதான் பிறக்கும்.” அவரது நீண்ட உரை தமிழில்தான் நிகழ்த்தப்பட்டது. கொழும்பிலிருந்து வருகை தந்த தமிழ் எழுத்தாளர்கள் திகைத்துப்போனார்கள். அந்தக்கருத்தரங்கில் எழுத்தாளர் சங்கச் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, சோமகாந்தன், மு. பஷீர், மு.கனகராஜன், உரும்பராய் செல்வம், அண்மையில் மறைந்த டொக்டர் வாமதேவன், சுப்பிரமணியன், பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் எம்.கே.இராகுலன் ( இவர் பின்னாளில் இலங்கை ஜனாதிபதிகளின் மொழிபெயர்ப்பாளரானார் ) ஆகியோர் உரையாற்றினர். ரத்னவன்ஸ தேரோ, இக்கருத்தரங்கின் பின்னர், செங்கை ஆழியானின் வாடைக்காற்று நாவலை சிங்களத்தில் மொழிபெயர்த்தார். அதனை மொழிபெயர்க்க முன்னர் அவர் மொழிபெயர்க்க முயன்றது தமிழக எழுத்தாளர் உமாசந்திரனின் முழுநிலவு நாவல் உமாசந்திரனின் நாவல் மொழிபெயர்ப்பை திடீரென கைவிட்டு, செங்கை ஆழியானின் வாடைக்காற்றை அவர் எடுத்துக்கொண்டதற்கு சொன்ன காரணம், “ ஆழியான் இலங்கையில் இருக்கிறார். மொழிபெயர்ப்பில் ஏதும் ஐயப்பாடுகள் நேர்ந்தாலும் தொடர்பு கொள்ள முடியும். ஆனால், இந்தியாவிலிருக்கும் உமாசந்திரனை நான் எங்கே போய்த்தேடுவது…? “ அவர் திக்குவல்லை கமாலின் எலிக்கூடு என்ற சிறிய கவிதை நூலையும் சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
அவர் வாராந்த விடுமுறை நாட்களில் கம்பகா மாவட்டத்தில் நாலந்தா கல்லூரியில் ஆசிரியர்களுக்கு தமிழ் கற்பித்தார்.
தென்னிலங்கையில் களுத்துறையை பூர்வீகமாகக் கொண்டுள்ள வண. ரதன தேரர், தமிழைக்கற்று, சமகாலத்தில் உலகெங்கும் பல தமிழ் அன்பர்களை தனது முகநூலில் இணைத்துக்கொண்டு இனிய தமிழில் பேசிவருகின்றார்.
இலங்கையில் பௌத்த பிக்குகளின் வகிபாகம் அரசியலில் மாத்திரமல்ல, தமிழ் மொழி, இலக்கியம் சார்ந்தும் வளர்ந்துள்ளது. எதற்கும் மறுபக்கம் இருக்கும். அதுபோன்று இலங்கை தேரர்கள் மத்தியிலும் மறுபக்கங்கள் இருக்கின்றன.
( முற்றும் )
நல்ல ஒரு வரலாற்றுப் பதிவு.பிரதமராக இருந்த கொதஇதலாவலை ஒருவர்தான் பௌத்த பிக்குகள் அரசியலில் தலையிடக்கூடாதென்று துணிந்து கூறியவர். அவரை ஒரு தீர்க்கதரிசி என்றுகூடக் கூறலாம்.எதிர்காலத்தில் பௌத்தமத வெறியர்களால் இலங்கை என்ன பாடுபடப் போகின்றது என்பதை அவர் உணர்ந்திருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகின்றது.
ஏலையா க.முருகதாசன்