படிப்புதான் மனிதனுக்கு அவசியம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள். கல்வியறிவு என்ற பின்புலம் சிறிதும் இல்லாத குடும்பத்தில் பிறந்த கதிரேசன் எப்படியோ தட்டுத் தடுமாறி ப்ளஸ்டூ வரை படித்துவிட்டன். அதற்குமேல் படிக்க வாய்ப்பில்லை. அரசாங்கத்தினால் ஏற்பட்ட ஆதரவால் பொதுமக்களுக்கு நன்மையும் நடக்கிறது தீமையும் நடக்கிறது. கதிரேசன் குடும்பத்துக்கு தீமைதான் நடந்தது.
தேனீர் கடையில் ஒரு தேனீரை வாங்கி வைத்துக் கொண்டு ஐக்கிய நாட்டு சபை எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று ஒன்றரை மணிநேரம் விவாதம் செய்து அரசியல்பேசும் அளவுக்கு வல்லமை பெற்றவர்கள் கோபாலும் சீனுவும். அன்று அவர்களுக்கு உள்நாட்டு அரசியலே கைகொடுத்து உதவ, “அரசாங்க ஆதரவான மலிவு விலையால் கிடைத்த மதுவே கதிரேசன் அப்பனை குடித்து குடித்து குடல் வெந்து மேலுலகம் செல்லவைத்தது.” என்றான் கோபால் சீனுவிடம். “சரியாத்தான் சொன்ன கோபால். இந்த மது பழக்கம் மட்டும் இல்லாதிருந்தால் அவனும் இருந்திருப்பான் கதிரேசன் குடும்பத்துக்கும் இவ்வளவு துன்பம் ஏற்பட்டிருக்காது.” என்றான் சீனு. இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருந்தது என்னவோ சரிதான். கதிரேசன் அப்பனால்தான் அவன் அம்மா கூலி வேலையும் வீட்டுவேலையும் செய்து மகனை படிக்கவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். இப்படி குடும்பத்தின் மேல் அக்கறையில்லாமல் நடுத்தெருவில் விட்ட கதிரேசனின் அப்பன் மேலுலகம் சென்றிருப்பானா அல்லது கீழுலகம் சென்றிருப்பானா அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். மேற்கொண்டு வேலை செய்து கதிரேசனை படிக்கவைக்க அவளது உடல் ஒத்துழைக்கவில்லை. இதையுணர்ந்த கதிரேசன் ஏதாவது வேலைக்கு சென்று அம்மாவுக்கு ஓய்வு கொடுக்க எண்ணினான். எவ்வளவோ பெரிய படிப்பெல்லாம் படித்தவர்களே வேலையில்லாமல் ஆண்டுக் கணக்காக திண்டாடி வரும் இந்நாளில் ப்ளஸ்டூ படித்த தனக்கு என்ன வேலை கிடைக்கும் என்று எண்ணி கவலையடைந்தான். அப்போது அவன் எதிர்பாராமல் ஒன்று நடந்தது. அன்று வேலைதேடி களைத்து வந்த சமயம் அவனக்கு தெரிந்த வேலுச்சாமி என்ற முதுகலை பட்டதாரி அவர் வீட்டின்முன் ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதற்கு பூஜை செய்து கொண்டிருந்தார். அவரிடம் சென்ற கதிரேசன், “ அண்ணா, என்ன வண்டியெல்லாம் வாங்கியிருக்கீங்க ஏதாவது விசேசமா?” என்று கேட்டான். “ஆமா தம்பி, ஒரு உணவகமொன்றில் கேட்டிருந்த உணவை வீட்டுக்கே எடுத்துச் செல்லும் வேலை கிடைத்துள்ளது. வீடு வீடாய் உணவை எடுத்துச்செல்லத்தான் இந்த வாகனம்” என்றான். “இவ்வளவு படித்த நீங்கள் இந்த வேலைக்கா செல்வது?” “இந்த வேலைக்கென்ன? நேர்மையான தொழில் இல்லையா? நேர்மையான எந்த தொழிலையும் செய்யலாம்”. வேலுச்சாமியின் பதிலைக் கேட்டதும் அவனுக்கு பொட்டில் அடித்தாற்போல் இருந்தது. சிலைபோல் நின்றிருந்ந கதரேசனைப் பார்த்து என்ன நான் சொல்வது சரிதானே என்றதும் ஆம் என்று தலையாட்டியவன் கொஞ்சநேரம் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அப்போது அவனுக்கு சில தினங்களுக்கு முன் நடந்ந நிகழ்வொன்று நினைவுக்கு வந்தது. அவனது குடும்ப நிலையை உணர்ந்த பெரியவர் ஒருவர் நகராட்சியில் துப்புறவு தொழிலாளிக்கு ஆள் தேவப்படுவதாகவும் நீ விரும்பினால் அதற்கு உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தார். அதை எண்ணிப் பார்த்தவன் அந்த வேலைக்குப்போக தான் தயங்கியதையும் நினைத்துப் பார்த்தான். எந்த வேலையும் இழிவில்லைதான். அதுவும் அம்மா தற்போதுள்ள நிலையில் உடனடியாக ஏதாவது ஒரு வேலை அவசியம் என்பதையும் உணர்ந்தவன் தனக்கு வேலை வாங்கித்தர உதவுவதாகச் சொன்ன பெரியவரை நாடிச்சென்றான். சில வாரங்கள் சென்றன. அவனுக்கு துப்புறவுத் தொழிலாளி வேலைக்கு வரும்படி கடிதமும் வந்தது. வேலுச்சாமி அண்ணா அவர் செய்யும் தொழிலுக்கு உதவியாக இருக்கவேண்டிய வாகனத்துக்கு பூஜை செய்ததை எண்ணிப்பார்தான். தன் தேவைக்கு உதவியாக இருக்கப்போகும் பெருக்குமாறை வைத்து பூஜை செய்தான். பூஜை என்றால் பூ, பழங்கள் மற்றும் பட்சணங்களை கடவுளுக்கு வைத்து வழிபடுவதுதான் பூஜை என்பது போல் தொழிலுக்கு உதவும் ஆயுதங்ளை வைத்து ஆயுத பூஜை செய்வதை ஏற்கும் நாம் கதிரேசன் செய்யும் பூஜையும் ஏற்றுத்தானே ஆகவேண்டும். ஆம். முற்றிலும் சரி. ஆளுக்கொரு வீடு என்ற படத்தில் வரும் “செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்” என்ற பாடலை கதிரேசனின் தாய் கேட்டிருப்பாள் போல் தெரிகிறது. அவள் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. காலில் விழுந்து ஆசி வணங்கிய மகனை தூக்கி நிறுத்தி வாழ்த்தினாள். -சங்கர சுப்பிரமணியன்.