ராமாயி அம்மாள்!… திருப்பூர் கிருஷ்ணன்….. ( தொகுப்பு: கிறிஸ்டி நல்லரெத்தினம் )
ராமாயி அம்மாள் என்றால் யாரென இன்று பலருக்கும் தெரியாது.
காலஞ்சென்ற சுதந்திர போராட்ட வீரர் ஐயா திருப்பூர் கொடி காத்த குமரன் அவர்களின் துணைவியார் என்றாலே புரியும்.
திருப்பூர் குமரன் (O4 அக்டோபர் 1904 – 11 ஜனவரி 1932) : இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். ஐந்தாம் வகுப்புடன் தன் பாடசாலை படிப்பை முடித்துக் கொண்டு தன் குடும்பத் தொழிலான நெசவுத் தொழிலில் ஈடுபட்டார் திரு.குமரன். தனது 19வது வயதிலேயே 1923ல் ராமாயி அம்மாளை மணந்து கொண்டார்.
1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜனவரி 11 இல் உயிர் துறந்தார். இதனால் இவர் “கொடிகாத்த குமரன்” என்றும் அழைக்கப்படுகிறார்.
ராமாயி அம்மாள் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் இப்படி நினைவு கூருகிறார்:
“திருப்பூரில் ஓடக்காடு பகுதியில்தான், திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் வசித்து வந்தார். என் வீடிருந்த ரங்கநாதபுரம் பகுதியிலிருந்து, சைக்கிளில் போய் நான் ராமாயி அம்மாளை அடிக்கடிச் சந்தித்ததுண்டு. இளைஞர்களிடமெல்லாம் சொந்தப் பிள்ளைபோல் பாசமாகப் பழகும் பண்பு அவரிடம் இருந்தது.
கல்லூரி மாணவனாக இருந்த நான், வேலை கிடைத்து பத்திரிகையாளனாக மாறிய பின்னும் ராமாயி அம்மாளைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். தினமணிகதிரில் அவரைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறேன்.
ராமாயி அம்மாள் இளம் வயதிலேயே வெள்ளைச் சேலை அணிந்தவர். வெள்ளைச் சேலையோடு தொண்ணூறு வயதுக்குமேல் வாழ்ந்து மறைந்தார். பதினேழு வயதில் கணவனை இழந்தவர் அவர். எழுபத்து மூன்று ஆண்டுகள் கணவனை இழந்த கைம்மை வாழ்வு.
குமரன் காலமான ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, ராமாயி அம்மாளின் இல்லத்திற்குச் சென்று குமரனின் தியாகத்தை எண்ணி நெகிழ்ச்சியோடு அவரைக் கைகூப்பி வணங்கினார். காந்தியே அவரை வந்து பார்த்தார் என்பதால், அதன் பின்னர்தான் மக்களிடையே அவருக்கு மதிப்பு ஏற்பட்டது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் `ராஜபார்ட் ரங்கதுரை` என்ற படத்தில், இறுதிப் பகுதியில் சிறிதுநேரம் திருப்பூர் குமரன் வேடத்தில் நடித்திருப்பார்.
திரைப்படங்களையே பார்த்தறியாத ராமாயி அம்மாள், தன் கணவர் வேடத்தில் நடிகர் திலகம் நடிப்பதாக அறிந்து அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினார்.
திருப்பூரில் டைமண்ட் தியேட்டரில் அந்தப் படம் ஓடிக் கொண்டிருந்தது. படத்தை அவர் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்த அவர், திருப்பூர் குமரன் பாத்திரமேற்றிருந்த நடிகர் திலகம் இறந்ததாக நடித்த காட்சியைப் பார்த்தவுடன், மயக்கமடைந்து கீழே விழுந்தார். பிறகு அவருக்கு மயக்கம் தெளிவிக்கப்பட்டு, வீட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.
“நடிகர் திலகத்தின் நடிப்பு எல்லோரையும் மயக்கக் கூடியதுதான். ஆனால் நீங்கள் ஏன் மயங்கி விழுந்தீர்கள்?` என்று அவரிடம் பின்னொரு நாள் நான் கேட்டேன்.
அவர் கண்ணைத் துடைத்துக் கொண்டு சொன்ன பதில் இதுதான்:
“கண்ணு! பத்து வயசுல எனக்குக் கல்யாணம். வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே பதினேழு வயிசுலே தாலியறுத்தேன். புருசனோட வாழ்ந்த வாழ்க்கை ஏழு வருசம். அவர் போலிஸ்லே அடிபட்டு சாகறப்ப கூட நான் திருப்பூர்ல இல்லே. எத்தினி வருசம் ஓடிபபோச்சு. அவர் முகமே எனக்கு மறந்துபோச்சு. இதோ என் புருசன்னு சிவாஜி நடிச்ச அந்தப் பாத்திரத்தையே என் புருசனா நினைச்சுப் பார்த்தேன். அந்தப் பாத்திரம் செத்து விழுந்தப்ப உண்மையிலேயே என் புருசன் அபபத்தான் செத்ததா நினைச்சு மயக்கம் போட்டு விழுந்திட்டேன் ராசா. அடடா! என்னமா நடிச்சிருக்காரு!”
“ஆசை முகம் மறந்துபோச்சே! அதை யாரிடம் சொல்வேனடி தோழி” என்ற பாரதியார் பாடல் என் நினைவில் ஓடியது. நாம் அடைந்திருக்கும் சுதந்திரத்தின் பின்னணியில், இதுபோல் எத்தகைய மகத்தான தியாகங்களெல்லாம் இருக்கின்றன!
உண்மையில், கொடி காத்த குமரன் மட்டுமல்ல, பலருக்கும் பல சுதந்திர போராட்ட தியாகிகளின் முகம், நடிகர் திலகத்தையே நினைவை கூற
வைக்கிறது. “வீர சிவாஜி யார்?” கேட்டால் கூட நடிகர் திலகம் தான் அது என இன்றும் நினைப்பவர்கள் உண்டு.
பல வருடம் கணவரின் முகம் கூட மறந்து வாழ்ந்த ராமாயி அம்மாள், குமரனாக வாழ்ந்த சிவாஜி கணேசனை பார்த்து அதிர்ந்ததில், எத்தனை பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது நடிப்பு!
இதில் யாரை கண்டு பெருமிதம் கொள்வது?
இதேபோல் இன்னொரு நிகழ்வு….
எம்.ஜி. ராமச்சந்திரன் காலமான ஓரிரு நாட்கள் கழித்து நான் ராமாயி அம்மாளைச் சந்தித்தேன். `என் பிள்ளை போயிட்டானே!` என அவர் கண்கலங்கினார். நான் வியப்போடு `எம்.ஜி.ஆர் எப்படி உங்கள் பிள்ளையாவார்?` எனக் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இன்று முதியோர் இல்லங்களில் பெற்றோரைத் தவிக்கவிடும் பிள்ளைகள் அனைவரும் அறிய வேண்டியது. அவர் சொன்னார்:
“ரொம்ப வருசம் முன்னாடி என்னைப் பாக்க அவர் வந்தாரு. நீ என்ன செஞ்சுக்கிட்டிருக்கேன்னு கேட்டேன். சினிமால நடிச்சுக்கிட்டிருக்கேன்னு சொன்னாரு. நான் சினிமாவெல்லாம் பாக்கறதில்லியேன்னு சொன்னேன். என் வீட்டைச் சுத்துமுத்தும் பாத்தாரு. நீங்க என் அம்மா மாதிரின்னு சொல்லி கையில ஒரு பெரிய தொகையைக் கொடுத்தாரு. பிறகு மெட்ராஸ் போனப்புறம் கவர்மென்டில சொல்லி எனக்கு மாசாமாசம் பென்சன் கிடைக்கவும் ஏற்பாடு செய்தாரு. இப்ப அவரு காலமாயிட்டாரு. ஆனா நான் காலமாற வரையிலும் அவர் ஏற்பாடு செஞ்சு தந்த பென்சனை நான் வாங்கப் போறேன். அப்பா அம்மாவை பொருளாதார சிரமம் இல்லாம பாத்துக்கறவன் தானே பிள்ளை? அப்படிப் பாத்தா எம்.ஜி.ஆர்.தான் எனக்குப் பிள்ளை! என் பிள்ளை போயிட்டானே!” என்ற ராமாயி அம்மாள் முந்தானையால் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டார்.
குமரன் உயிர்நீத்த தொடக்க காலத்தில் தான் பட்ட பொருளாதார சிரமங்களை ராமாயி அம்மாள் என்னிடம் பகிர்ந்து கொண்டதுண்டு. அதைக் கேட்டு என் உள்ளம் கசியும்.
பிற்காலங்களில் ஒரு நடுத்தர வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரம் எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்த ஓய்வூதியம் மூலம் அவருக்குக் கிடைத்தது. அவர் இருப்பது போதும் என்று தன்னிறைவோடு வாழும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.
ராமாயி அம்மாளின் வாழ்நாள் முழுவதும் எல்லா அரசியல் கட்சிகளும் அவரைத் தங்கள் கட்சியில் சேரச் சொல்லித் தொடர்ந்து வேண்டுகோள் வைத்தன. `என் கணவர் உயிர்நீத்தது இன்றைய இந்த ஊழல் அரசியலுக்காக
அல்ல!` என்று சொல்லி இறுதிவரை எந்தக் கட்சியிலும் அவர் சேராமலிருந்தார்.
சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் திருப்பூர்ப் பள்ளிகளில் அவரைக் கொடியேற்றக் கூப்பிடுவார்கள். அவர் மறுக்காமல் அந்த அழைப்புக்களை ஏற்றுக் கொள்வார்.
அதிகப் படிப்பறிவு இல்லாத அவருக்கு இறுதிநாள் வரை இருந்த சிந்தனைத் தெளிவு வியக்க வைக்கிறது.
ராமாயி அம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர் நீத்தார். அன்னார் காலமாகி 24 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அவரை அன்புடன் நினைவு கூருவோம்.
“மட்டிலாத துன்பமுற்று
நட்டு வைத்த கொடியது!
தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்துபோக நேரினும்;
தாயின்மானம் ஆன இந்த
கொடியை என்றும் தாங்குவோம் !”
(நாமக்கல் கவிஞர்)
மூலம் : முகநூல் பதிவு: திருப்பூர் கிருஷ்ணன்.
தொகுப்பு: கிறிஸ்டி நல்லரெத்தினம்
(முற்றும்)