Featureகட்டுரைகள்

இலங்கை அரசியலிலும் இலக்கியத்திலும் பௌத்த பிக்குகளின் வகிபாகம்!…. அங்கம் 01 ….. முருகபூபதி.

கௌதம புத்தர் ஒரு இந்து மன்னன். எனினும் துறவறம் பூண்டு, தனக்கு நாடும் வேண்டாம், அரசுரிமையும், அதிகாரங்களும் வேண்டாம், அன்பு மார்க்கம் ஊடாகவே மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று வனம் சென்று நீண்ட தவமிருந்து, பரிசுத்த நிர்வாணம் எய்தி அந்த மார்க்கத்தை போதித்தார்.

இந்த வரலாற்றின் பின்னணியுடன்தான் இலங்கை அரசியலையும் நாம் பார்க்கவேண்டியிருக்கிறது.

சமகாலத்தில் இலங்கை அரசியலில் மதகுருமார்களின் ஈடுபாடு அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

அண்மையில் தென்னிலங்கையில் தொடங்கிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பௌத்த பிக்குகளும் ஈடுபட்டனர். கடந்த 05 ஆம் திகதி ஆண்டகை மல்கம் ரஞ்சித் தலைமையில் கத்தோலிக்க மதகுருமாரும் கன்னியாஸ்திரிகளும் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட சுலோக அட்டைகளுடன் மௌனமாக நடந்து சென்று தங்கள் கண்டனத்தையும் அமைதிவழியில் காண்பித்தார்கள்.

இலங்கை உட்பட அவுஸ்திரேலியா மற்றும் சில வெளிநாடுகளிலும் சிங்கள பௌத்த பிக்குகளும் மக்களோடு மக்களாக நின்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

சில மாதங்களுக்கு முன்னர், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் நடந்த ஊர்வலத்தில் வேலன் சாமியார் உட்பட இஸ்லாமிய மதகுருமாரும் கலந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.

துறவு வாழ்க்கையில் ஈடுபடும் மதகுருமார், அரசியல் விவகாரங்களில் ஈடுபடும் அளவுக்கு இலங்கை பல துறைகளில் எரியும் தேசமாகிவிட்டது என்பதையே இந்த சம்பவங்கள் காண்பிக்கின்றன.

அதன் கொதிநிலை அடங்குவதற்கு சிறிது காலம் செல்லும். இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் அரசியல் காட்சிகள் மாறிக்கொண்டுதானிருக்கிறது. காலங்கள் மாறும் அதேவேளை காட்சிகளும் மாறத்தான் செய்யும்.

துறவு வாழ்க்கையை மேற்கொள்ள முன்வந்தவர்கள், தமது சமயப்பணிகளுக்கு அப்பால், ஏன் அரசியல் விவகாரங்களுக்குள் பிரவேசிக்கிறார்கள் என்ற கேள்வி எழும்.

அவர்கள் மக்களுக்கு அறநெறியையும் அன்பு மார்க்கத்தையும் போதிக்கவேண்டியவர்கள். ஆனால், ஆட்சியாளர்களினால் அறம் பிழைத்துவிடும்போது, மக்களின் குரலாக அவர்கள் மாறிவிடுகிறார்கள்.

இலங்கையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக பௌத்த சிங்கள மக்கள் இருப்பதனால், பதவிக்கு வரும் அரசியல் கட்சிகள் அனைத்தும் பௌத்த பீடங்களின் ஆசியையே வேண்டியிருக்கின்றன.

நாட்டின் அதிபர் தேர்தல் நடந்தாலும், நாடாளுமன்ற தேர்தல் நடந்தாலும் வெற்றி பெறும் தரப்பு முதலில் அஸ்கிரிய – மல்வத்தை பீடங்களை நோக்கியே பயணிக்கின்றது.

அரசின்மீது வெறுப்பு வந்தாலும் சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்தப்பீடங்களிடம் சென்றுதான் முறையிடுகிறார்கள்.

அமைச்சரவையின் அறிமுகம் கண்டி தலதா மாளிகை முன்றலில் நடக்கிறது. அரசுத் தலைவர்கள் அந்த மாளிகையின் மேல் தளத்தில் நின்று நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார்கள்.

தற்போதைய அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு வெற்றிபெற்றதும், தனது பதவிப்பிரமாணத்தை அநுராதபுரத்தில் மகாநாயக்கர்கள் முன்னிலையில்தான் செய்துகொண்டு நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.

இன்றும் அவர் உலகத் தலைவர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றும்போது அவர் அமர்ந்திருக்கும் மேசையின் இருமருங்கிலும் காணப்படும் கொடியையும் சின்னத்தையும் அவதானித்திருப்பீர்கள். ஒன்று தேசியக்கொடி. மற்றது பௌத்த சமயத்தை பிரதிபலிக்கும் சின்னம்.

சில மாதங்களுக்கு முன்னர், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்காக அதிபர் கோத்தபாய செயலணி ஒன்றை அமைத்தார். கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழ்கின்றனர்.

ஆனால், அதனை கவனத்தில் கொள்ளாத அதிபர், அந்த செயலணியில் நியமித்தவர்கள் அனைவரும் பெளத்த சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இது இவ்விதமிருக்க, இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியை அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ உருவாக்கியபோது அதன் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார். இவர் சிங்கள பௌத்த தேசியத்தினை தொடர்ந்து வலியுறுத்திவரும் கடும்போக்காளர் இயக்கமான பொதுபலசேனா இயக்கத்தை 2012 ஆம் ஆண்டில் உருவாக்கியதுடன் அதன் பொதுச் செயலாளராகவும் இயங்கிவருபவர்.

இவர் அந்த அமைப்பினை ஆரம்பித்த காலம் முதல் இலங்கை அரசியலிலும் நீதித்துறையிலும் சர்ச்சைக்குரிய மனிதராகவே காணப்படுபவர்.

2017 ஆம் ஆண்டில் காவல் துறையினருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டினால், கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலைபெற்றவர். அதன்பின்னர் மற்றும் ஒரு விசாரணையின்போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரிலும் கைதாகி சிறைவாசம் அனுபவித்தார். இவர் உள்ளே இருந்தாலும் பிரச்சினை – வெளியே இருந்தாலும் பிரச்சினைதான் எனக்கருதிய அதிபர் கோத்தா, இவருக்கு 2019 ஆம் ஆண்டு மே மாதம் பொது மன்னிப்பு வழங்கியதுடன், இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணிக்கும் தலைவராக்கினார்.

அதற்கு முன்னர் இவருக்கும் அதுரலிய ரதன தேரருக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் ஆசனம் பெற்றுக்கொள்வதில் நடந்த போட்டியின் உச்சம் பற்றி, ஊடகங்களில் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்.

இந்த பௌத்த பிக்குகளினால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிதான் அபே ஜன பல. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் ஊடாக யார் செல்வது..? என்ற போட்டியை நாடே ஊடகங்களிலும் சமூக வலைத்தலங்களிலும் வேடிக்கை பார்த்தது.

ராஜபக்ஷ சகோதரர்களின் அரசுடன் இவ்வளவு காலமும் நீடித்த தேன்நிலவு காலத்திலிருந்து தற்போது ஒதுங்கியிருக்கும் பத்துக்கட்சிகளின் கூட்டணியில் இருந்தவர்தான் அதுரலியே ரதன தேரர்.

இவருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் இடையே நீடித்த நிழல் யுத்தத்தை, அதிபர் கோத்தா, புதிதாக உருவாக்கிய ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியின் மூலம் முடிவுக்குகொண்டுவந்திருந்தாலும், அண்மைக்காலமாக நாட்டில் இந்த அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியை பார்த்துவிட்ட ஞானசார தேரர், பகிரங்கமாக “ உங்களால் முடியாவிட்டால்

விட்டுச்செல்லுங்கள், நிருவாகத் திறமையுள்ளவர்களிடம் நாட்டை ஒப்படையுங்கள் “ என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டார்.

இதனைத் தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் செயலுக்கு ஒப்பானது எனச்சொல்வது முரண்நகை அல்லவா..?

இலங்கை அரசியலில் இந்த இரண்டு பௌத்த தேரர்களின் வகிபாகம் இப்படி இருக்கையில் இந்தப்பதிவில் மற்றும் ஒரு தேரர் பற்றியும் சொல்லத்தோன்றுகிறது.

அவர்தான் அரம்பேபொல ரத்னசார தேரர். அவரும் ஒரு அரசியல் கட்சியை வைத்திருக்கிறார். ஆனால், இந்த பௌத்த மதகுருமார்கள் தங்கள் அமைப்பினை அரசியல் கட்சி என்று பகிரங்கமாகச் சொல்ல மாட்டார்கள். சிங்கள பெளத்த தேசியத்தை பேணிப்பாதுகாக்கும் இயக்கம் என்றே அழைத்துக்கொள்வார்கள்.

அரம்பே பொல ரத்னசார தேரரின் இயக்கத்தின் பெயர் சிங்கள ஜாதிக பலவேகய. இத்தருணத்தில் வாசகர்களாகிய உங்களுக்கு பர்மாவிலிருந்து அகதிகளாக இலங்கை வந்த ரோஹிங்கியா மக்களைப்பற்றியும் நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

2017 ஆம் ஆண்டு, கல்கிசையில் ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பில் இந்த அரம்பேபொல ரத்னசார தேரர் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டவராவார். இவரிடம் இரண்டு தேசிய அடையாள அட்டைகள் இருந்ததாகவும் பொலிஸ் தரப்பில் அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தப்பின்னணிகளின் ஊற்றுக்கண்ணை உற்று நோக்குவோமேயானால் பல ருசிகர செய்திகள் வெளியாகும்.

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரையில் தீராதிருப்பதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்லி வருகிறார்கள்.

விதேசியர்கள் வந்து சூறையாட வேண்டியதையெல்லாம் அள்ளிக்கொண்டு, இனி எக்கேடும் கெட்டுப்போங்கள் என புறப்பட்டார்கள். அவர்கள் தந்த சுதந்திரம் எமது அரசியல்வாதிகளுக்கு தந்திரமானதுதான் மிச்சம்.

ஆனால், அவதந்திரம் இறுதியில் தனக்கந்தரமாகத்தான் முடியும் என்பதற்கு சமகாலத்தில் மாறிவரும் காட்சிகள் புலப்படுத்துகின்றன.

முதல் பிரதமராக பதவிக்கு வந்த டி. எஸ். சேனாநாயக்கா, 1952 இல் காலிமுகத்திடலில் குதிரை சவாரிக்குச்சென்று விழுந்து இறந்ததும்,

அடுத்த பிரதமர் யார்…? என்ற பதவிப்போட்டியில் வேரோடியிருந்ததுதான் இந்த இனப்பிரச்சினை. அது இன்னமும் தீரவில்லை.

சிங்களத் தலைவர்கள் பதவிக்கு வரவேண்டுமானால் இலங்கை தேசிய சிறுபான்மை இனங்கள் பலிக்கடாவாகவேண்டும்.

1955 இல் பிரதமராக யாழ்ப்பாணம் சென்ற சேர். ஜோன் கொத்தலாவலை, வடபுலத்து மக்கள் வழங்கிய மாலை மரியாதை வரவேற்பினால் மனம் குளிர்ந்து, ” தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம அந்தஸ்து வழங்க சட்டம் கொண்டுவருவேன் ” என்றார்.

இதனை தவறாகப்புரிந்துகொண்ட எச். எல். மேத்தானந்தா என்ற ஒரு பௌத்த மத தீவிரவாதி ” சரிதான், இனிமேல் சிங்களவர்களும் தமிழ்தான் படிக்கவேண்டிவரும் ” என்று தென்னிலங்கையில் வகுப்புவாதம் கக்கத் தொடங்கினார்.

அதனை தனக்குச் சாதமாக்கினார் பண்டாரநாயக்கா. இதனைப்புரிந்துகொண்ட கொத்தலாவலை, தாமதிக்காமல் ஒரு பல்டி அடித்தார். 1956 இல் களனியில் ஐ.தே.கட்சி மாநாட்டில், தனிச்சிங்களமே ஆட்சி மொழி என்றார்.

பண்டாரநாயக்கா அதன் பிறகும் சும்மா இருப்பாரா…? தாம் பதவிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சிமொழியாக்குவேன் என்றார்.

ஐ.தே.க.வை தோற்கடிக்க ஐம்பெரும் சக்திகளை ( பஞ்சமா பலவேகய ) திரட்டிக்கொண்டு தேர்தலில் வென்ற பண்டாரநாயக்காவுக்கு உண்மையில் அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. டி.எஸ். சேனாநாயக்காவுக்குப் பிறகு தனக்கு வரவேண்டிய சந்தர்ப்பம் டட்லிக்கும் அவரையடுத்து கொத்தலாவலைக்கும் சென்றதுதான் அவர் சிங்கள தீவிரவாதம் பேசக்காரணமாக இருந்திருக்கிறது.

அதற்குப்பின்னாலிருந்து நெருப்பு மூட்டியவர்கள் மேத்தானந்தா, புத்தரகித்த தேரோ ஆகியோர்.

இன்றும் இந்தக்கதைதான் வேறு வேறு ரூபத்தில் இலங்கையில் நீடிக்கிறது. ஏறச்சொன்னால் எருதுக்குக்கோபம் இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோபம் என்பார்களே..!?. அவ்வாறு யாராவது ஒரு சிங்களத் தலைவர் இனப்பிரச்சினைக்கு தீர்வுகொண்டுவந்தால் மற்ற சிங்களத்தலைவர் எதிர்ப்பார். இன்று எதிர்ப்பவர் நாளை பதவிக்கு

வந்து, நல்ல தீர்வு சொன்னால், முன்னர் நல்ல தீர்வுகொண்டுவர விரும்பியவர், அதனை ஆதரிக்காமல் எதிர்ப்பார்.

இது முற்றுப்பெறாத கதை.

( தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.