Featureகட்டுரைகள்

அன்று “ கோத்தா வா.. “ ( Gota Come ) இன்று “ கோத்தா போ…” ( Gota go )….. அவதானி.

காட்சிகள் மாறிய கோலங்கள் !

அன்று “ கோத்தா வா.. “ ( Gota Come )

இன்று “ கோத்தா போ…” ( Gota go )

அவதானி.

அரை நூற்றாண்டுக்கு முன்னர், கவியரசு கண்ணதாசன் இதயக்கமலம் என்ற திரைப்படத்திற்காக ஒரு பாடலை இயற்றியிருந்தார்.

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல எனத் தொடங்கும் அந்தப்பாடலில், காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்ற வரியையும் இணைத்திருந்தார்.

இலங்கையில் ராஜபக்ஷ சகோதரர்களின் குடும்ப ஆட்சியிலும் காலங்கள் மாறியிருக்கிறது. காட்சிகளும் மாறிக்கொண்டிருக்கிறது.

இரண்டு தடவைகள் அதிபராகவிருந்து இறுதியாக 2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வி கண்ட மகிந்த ராஜபக்ஷ, மீண்டும் 2019 இல் இந்தப்பதவிக்கு தனது தம்பி கோத்தாவை அழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து மற்றும் ஒரு சகோதரர் பஸிலை அமெரிக்காவிலிருந்து அழைத்தனர்.

இவர்களைப் பார்க்கும்போது “ உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல “ என்றுதான் ஆளையாள் பார்த்து பாடினார்களோ தெரியவில்லை. இப்போது இவர்கள் மூவரும் இணைந்து காட்சிகளை மாற்றியிருக்கிறார்கள்.

2019 ஆம் ஆண்டு, “ கோத்தா வா.. “ ( Gota Come ) எனச்சொன்ன சிங்கள பெரும்பான்மையின மக்கள், இன்று, அதாவது மூன்று வருட காலத்திற்குள் “ கோத்தா போ…” ( Gota go ) எனச் சொல்லிக்கொண்டு வீதிகளுக்கு இறங்கியிருப்பது மாத்திரமன்றி, அவரது வாசஸ்தலத்தையும் இதர அமைச்சர்களின் வீடுகளையும் முற்றுகையிட்டு தமது வெறுப்பினை வெளிப்படுத்திவருகின்றனர்.

செய்திகள் பரிமாறப்படும் என்பதனால், சமூக வலைத் தலங்களையும் மூடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு கோத்தாவின் அரசு ஆளாகியது.

கடந்த சில வாரங்களாகவே எதிர்க்கட்சிகள், உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும் கோத்தா அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டே வந்தன.

இவற்றுக்கு மத்தியில் 2019 இல் கோத்தாவை பதவியில் அமர்த்துவதற்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரசார பீரங்கிகளாக இயங்கிய இரண்டு முக்கிய அமைச்சர்களான விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் அவரவர் அமைச்சுப் பதவிகளிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.

தாழும் கப்பலிலிருந்து எலிகள் தப்பி ஓடுவதுபோன்று சில இராஜாங்க அமைச்சர்களும் அரசின் மீது அதிருப்தி தெரிவித்து படிப்படியாக வெளியேறிக்கொண்டிருந்த வேளையில், இதர அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளிலிருந்து விலகத் தீர்மானித்து பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவிடம் கடிதங்களை ஒப்படைத்தனர்.

மூன்று வருடங்களின் முன்னர் காணப்பட்ட காட்சி வேறு, தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் காட்சிகள் முற்றாக வேறு.

இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய விடயமும் இருக்கிறது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் காலிமுகத்திடலில் பெரிய ஆர்ப்பாட்டத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடத்தினர். அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணியினரும் அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்கா தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதேசமயம் நாடெங்கும் அங்காங்கே பெரிய – சிறிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறின. மக்கள் வீதிகளின் இருமருங்கும் நின்று அரசுக்கு எதிரான சுலோக அட்டைகளுடன் உரத்துக்குரல் எழுப்பி அரசின் போக்கை கண்டித்துக்கொண்டிருந்தனர்.

ஆயினும், அவற்றையெல்லாம் அவதானித்துக்கொண்டு அமைதிகாத்த அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ, தமது சகோதரர்கள் சகிதம் மந்திராலோசனை நடத்தி, தோன்றியிருக்கும் நெருக்கடிக்கும் எரியும் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்காக அண்டை நாடான இந்தியாவிடம் கையேந்துவது தொடர்பாக ஆராய்ந்தார்.

அவரது இரத்த உரித்து சகோதரர் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ இந்தியா பறந்தார். பழத்துடன் திரும்பினார்.

அவ்வாறிருந்தும் நிலைமை சீரடையவில்லை.

இன்று “ கோத்தா போ “ என்று கூக்குரல் எழுப்பும் இதே மக்கள்தான், அன்று மைத்திரி – ரணில் கூட்டு நல்லாட்சி ( ? ) மீது வெறுப்படைந்து, “ கோத்த வா “ என்றழைத்தனர்.

அவர்கள் அவ்வாறு அழைப்பதற்கு 2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலும் ஒரு முக்கிய காரணம். “ முப்பது ஆண்டு காலம் நீடித்திருந்த உள்நாட்டுப்போரை

முடிவுக்கு கொண்டுவந்திருந்த ராஜபக்ஷ சகோதரர்கள் பதவியிலிருந்திருந்தால், அந்த ஈஸ்டர் தாக்குதல் நடந்திருக்காது “ என இம்மக்கள் முழுமையாக நம்பினர்.

தமது ஆதரவை வாக்குகளில் காண்பித்தனர். கோத்தா அதிபரானார். அண்ணன் மகிந்த பிரதமரானார். இவரது புதல்வன் நாமல் அமைச்சரானார். இவ்வளவும் போதாதென்று அமெரிக்காவிலிருந்த மற்றும் ஒரு சகோதரன் பஸிலையும் அழைத்து, நிதி அமைச்சர் பதவியும் வழங்கினர்.

தண்ணீரை விட இரத்தம் தடிப்பானது அல்லவா.!?

முழுக்குடும்பமும் அரசின் முக்கிய பதவிகளில் அமர்ந்தது. எதிர்பாராத வகையில் கொவிட் பெருந்தொற்று வந்தது. அதனைத்தொடர்ந்து கோத்தா அரசுக்கு மங்கு சனி ஆரம்பித்தது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான நீதிவிசாரணையிலும் தொடர்ந்த தாமதங்களையடுத்து, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் தனது அதிருப்தியை தெரிவித்து, வத்திகான் வரையில் சென்று முறையிட்டார். அத்துடன் நீதிக்காக சர்வதேச சமூகம் குரல் கொடுக்கவேண்டும் எனவும் அறைகூவல் விடுத்தார். இது இவ்விதமிருக்க அடிக்கடி ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆசிர்வாதம் பெறும் பெளத்த உயர் பீட மதகுருமாரும் அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர்.

இந்தப்பின்னணிகளுடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் அமைச்சரவையில் அடிக்கடி மாற்றங்கள் வந்தன. கோத்தா தலையணை உறைகளைத்தான் மாற்றினார். தலையணை அப்படியேதான் இருக்கிறது.

தற்போது, பிரதமர் மகிந்த தவிர்த்து அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியவுடன், தேசிய அரசுக்கு அழைப்பு விடுத்திருக்கும் கோத்தா, புதிய நிதியமைச்சராக அலிசப்ரியை நியமித்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

இலங்கை வரலாற்றில் இவ்வாறு நிதியமைச்சர்கள் மாற்றப்படுவது இதுதான் முதல் தடவை.

மக்கள் எரிபொருளுக்காகவும், அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்காகவும் காலை முதல் மாலை வரையில் கொளுத்தும் வெய்யிலில் கால் கடுக்க வரிசையில் நிற்கும்போது, அமைச்சர்கள் கார்பவனியில் ஈடுபடுவதைப்பார்த்து வெகுண்டு, “ இவர்கள் மீது இடிதான் விழவேண்டும் “ என்று சத்தமிடுவதை காணொளிகள் வாயிலாக பார்க்க முடிகிறது.

அக்காணொளிகள் வைரலாக உலகெங்கும் பரவுகின்றது.

அதனால், வெளிநாடுகளில் வதியும் இலங்கையர்களும் ராஜபக்ஷ சகோதரர்களின் குடும்ப ஆட்சிக்கு எதிராக மாநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.

இச்செய்திகள் இலங்கை எங்கும் வலைத்தளங்கள் ஊடாக பரவி வருகின்றன.

மக்களின் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு – அவசரகால சட்டம் முதலானவற்றை நடைமுறைப்படுத்திய அரசு, அரசுக்கு எதிரான பேராட்டங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவுவதை தடுப்பதற்காக சமூக வலைத்தளங்களையும் தடைசெய்தது.

இவை அனைத்தும் கோத்தா அரசின் படு தோல்வியையே காண்பிக்கின்றது.

சரி… மக்களுக்கு அரசின் தோல்வி தெரிகிறது. இதனால், கோத்தா பதவி விலகி மீண்டும் அமெரிக்கா சென்றுவிடுவாரா..?

இந்த இடத்தில் ஒரு குறுங்கதை சொல்லலாம்.

கஷ்டத்திலிருக்கும் ஒருவர் மற்றவரிடம் நிதியுதவி கேட்கிறார். கடனுதவி வழங்குபவர், கடனாளி அக்கடனை திருப்பித்தருவாரா…? என்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டுதான் கொடுப்பார். இல்லையேல் முதலுக்கே மோசம்தான். நிபந்தனைகளை விதித்தே கடனுதவியும் கொடுப்பார். கடன் பெற்றவர் மேலும் நெருக்கடிக்கு ஆளாகி, ஓட்டம்பிடிக்கத் தயாரானால், குறிப்பிட்ட கடனாளியை காப்பாற்றி தனது கடனை மீளப்பெறுவதற்குதான் தன்னாலியன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்.

இங்குதான் கடன் கொடுத்திருக்கும் அண்டை நாடான இந்தியாவினதும் சீனாவினதும் வகிபாகம் தெரியவருகிறது.

இந்தப்பதிவை எழுதும்வேளையில் அதிபர் கோத்தா, மற்றும் ஒரு புதிய செய்தியை அறிவித்துள்ளார்.

அதாவது நாடாளுமன்றில் பெரும்பான்மையை ( 113 ஆசனங்கள் ) நிரூபிக்கும் அணியிடம் ஆட்சியை ஒப்படைக்க அவர் தயாராகிவிட்டாராம். “ கோத்த போ – Gota Go “ எனச்சொல்லும் மக்களிடமும் இந்தச்செய்தியையும் அவர் சொல்கிறார்.

அவர் காட்சிகளை மாற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் மாறமாட்டார். பதவியிலிருந்தும் அகலமாட்டார்.

காலங்கள் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை அவர் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. அவரது வாசஸ்தலத்திற்கு அருகாமையில் மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருப்பதுடன், அவரது அரசை பாதுகாக்கும் அவர் முன்னர் பணியாற்றிய இராணுவத்துறையைச்சேர்ந்தவர்கள் வந்திறங்கிய பஸ் வண்டியை தீவைத்து எரித்தும் பொலிஸ் ஜீப் வண்டிகளை சேதப்படுத்தியும் மக்கள் தங்கள் எழுச்சியை காண்பித்த பின்னரே இந்தக்காட்சிகள் மாறியிருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.